Tuesday, October 16, 2007

சொக்கவைக்கும் அழகுணர்ச்சி மனித உணர்வுகள் The Classic.





இயற்கையுடன் ஒன்றிப் போதல் என்பது எல்லோராலும் முடியாத ஒன்று. இயற்கை அழகியலை புரிந்து கொண்டு படைப்பில் ஈடுபடுவது என்பது ஒரு கலையே. அழகியல் என்பது ஓர் உயிர் இயல்பு. அதனுள் புகுந்து அதனைச் சரிவரப் புரிந்து கொள்பவர்களினால் மட்டுமே ஆக்கபூர்வமான, யதார்த்தத்துடன் கூடிய ஒரு படைப்பை மற்றவர்கள் முன், வைக்க முடிகிறது.

சாதாரண ஒரு கல்லை சிற்பி ஒருவன் அழகுணர்வுடனும், புத்திசாதுரியத்துடனும் செதுக்கும்போதே அது உயிர்பெறுகிறது. தேவையில்லாத பாகங்களை அகற்றி தேவையானவற்றை சேர்த்துக் கொள்ளும் போது சிற்பம் அழகுற மிளிர்வதை நாம் காண முடிகிறது. காதல் என்பதும் அழகியலுடன் கூடிய உணர்வே.


இயற்கையையையும், அதனுடன் ஒன்றிய மனிதஉணர்வுகளையும் தங்களுடைய திரைப்படங்களில் கொண்டு வருவதில் கொரிய இயக்குனர்கள் முன் மாதிரியாக உள்ளார்கள். அனேகமான கொரியத் திரைப்படங்களில் இதனைக் காண முடிகிறது. அவர்கள் ஏதோ ஒருவிதத்தில் அழகியலை மையமாக வைத்து மனித உணர்வுகளைப் பின்னிச் செல்வதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். அந்தவகையில் முக்கோண காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படமே The Classic . ஒரு படைப்பின் வடிவத்தில் மட்டுமல்லாது உள்ளடக்கத்திலும் அழகியலுக்கும, உயிரியலுக்கும், அரசியலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தான் சொல்ல வந்ததைத் தெளிவாகவும், காத்திரமாகவும் சொல்லிச் செல்கிறார் கொரிய இயக்குனர் க்வக் ஜே யங் (Kwak Jae-yong) தனது The Classic திரைப்படத்தினூடாக.

கிளாசிக் படம் காதல், நட்பு, விட்டுக் கொடுப்பு, அதனால் ஏற்படும் வலிகள், புரிந்துணர்வு என்னும் மனித இயல்புகளை ஒவ்வொரு கதாபாத்திரத்தினூடாகவும் தத்ரூபமாகக் கொண்டு செல்கிறது. விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வு என்பவை மருகிக் கொண்டு போகும் இந்தக் காலகட்டத்தில் அவை மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஆதாரசுருதி போன்றது என்பதையும் இந்தப் படம் வலியுறுத்துகிறது என்றே சொல்ல வேண்டும். இறந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் பின்னி தாயினதும், மகளதும் காதலை மையமாக ஊடறுத்துச் செல்கிறது இத்திரைப்படம். கதை நேரடியாகச் சொல்லப்படாமல் சுற்றி வளைத்து, தாவிக் குதித்து ஒரு நதியைப் போல் ஓடுகிறது.


பல்கலைக்கழக மாணவியாகிய ஜி ஹே தனது வீட்டைச் சுத்தம் செய்யும் பொழுது தனது தாயினுடைய இளம்பருவ காதல் கடிதங்கள், நாட்குறிப்புகள் அடங்கிய பெட்டி ஒன்றைக் கண்டெடுக்கிறாள். அது முழுவதும் அவளுடைய தாயினால் அவளுடைய இளம் பருவத்துக் காதலனுக்கு எழுதப்பட்ட கடிதங்களாக இருக்கின்றன. ஆர்வமேலீட்டால் அந்தக் கடிதங்களையும், நாட்குறிப்பையும் அவள் படிக்கும், இந்தக் காட்சியுடன் கதை ஜி ஹேயின் தாயினுடைய இறந்த காலத்திற்குள் நுழைகிறது.
இதேவேளை ஜி ஹேயிற்கு சங் மின் என்னும் இளைஞன் மேல் காதல் ஏற்படுகிறது. ஆனால் அவளுக்கு அதனைத் தெரிவிக்க முடியவில்லை. அவளுடைய பலவீனத்தை சங் மின் மேல் காதல் வயப்பட்டுப் போயிருக்கும் அவளுடைய நண்பி பயன்படுத்திக் கொள்கிறாள். தாயினுடைய வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் போலவே அனேக சம்பவங்கள் தன்னுடைய வாழ்க்கையிலும் ஏற்படுவதை அசைபோடும் ஜி ஹேயிற்கு ஆச்சரியம் ஏற்படுகிறது.

இறந்தகாலம் ஜி ஹேயின் தாய் ஜோ ஹீ யினுடைய காதலன் ஜோன் ஹா அவனுடைய நண்பன் ரீ சூ ஆகியோருக்கிடையில் ஓடும் முக்கோணக் காதலைச் சொல்கிறது. ஜோ ஹீக்கும், ரீ சூவிற்கும் அவர்களின் பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்படுகிறது. ஆனால் ஜோ ஹீக்கு ஜோன் காவின் மேல் காதல் ஏற்படுகிறது. ஜோ ஹீயின் மீது ரீ சூவும் மிகுந்த அன்பு வைத்திருக்கிறான். அது ஜோன் ஹாவுக்குத் தெரிய வரும் போது தனது நண்பனை ஏமாற்றக் கூடாதென எண்ணி தன்னுடைய காதலைச் சொல்லி விடுகிறான். ஆனால் அவர்களுடைய காதல் ரீ சூவுக்கு முன்னமேயே தெரிந்திருந்தது. தான் அன்பளிப்பாக ஜோ ஹீக்குக் கொடுத்த நெக்லஸ் தன்னுடைய நண்பனின் கழுத்தில் இருப்பதை அவதானிக்கும் அவன் அவர்களுக்கிடையிலான காதலையும் புரிந்து கொள்கிறான். நட்புடன் அவர்களின் காதலை ஏற்றுக் கொள்ளும் ரீ சூ தனது நண்பனின் காதலுக்கு உதவி செய்கிறான். தன்னுடைய பெயரில் தனது நண்பனின் காதல் கடிதங்களை ஜோ ஹீயிடம் சேர்ப்பிக்கிறான். இதனைக் கண்டு பிடிக்கும் ஜோ ஹீயினுடைய பெற்றோர் ரீ சூவின் தந்தையிடம் முறையிட தந்தையால் அவன் தண்டனைக்குள்ளாகிறான். அந்த அவமானம் தாங்காமல் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் அவனை ஜோன் ஹா காப்பாற்றுகிறான். நண்பன் மேல் அளவு கடந்த பிரியம் வைத்திருக்கும் ஜோன் ஹா தன்னால்தானே தன்னுடைய நண்பன் தண்டனை பெற்றான் என்ற குற்றவுணர்வு மேலிட தன்னுடைய காதலியைப் பிரிந்து இராணுவத்தில் சேர்ந்து வியட்னாம் செல்கிறான்.

அங்கு யுத்தத்தில் தவறவிட்ட தன் காதலியின் நெக்லஸை எடுக்கப் போகும் ஜோன் ஹா கண்ணிவெடியில் அகப்பட்டு பார்வையை இழக்கிறான். யுத்தம் முடிந்து கொரியா திருப்பிய அவன் தன்னுடைய காதலி ஜோ ஹீ யைச் சந்திக்க வருகிறான். அவள் ஏன் இன்னமும் திருமணம் செய்யவில்லை என வினவும் அவன் தனக்குத் திருமணமாகிவிட்டதாகவும் கூறுகிறான். அவர்களுடைய சந்திப்பு நட்புடன் முடிவடைகிறது.
இதன் பின் ஜோ ஹீ, ரீசூவைத் திருமணம் செய்கிறாள். தனது மூன்று வயது மகளுடன் கிராமத்திற்கு வரும் அவள் ஜோன் ஹா இறந்து விட்டதைக் கேள்விப்படுகிறாள். அவனின் விருப்பப்படி அவனுடைய அஸ்தி அவர்கள் சந்தித்த அந்த ஆற்றிலே கரைக்கப்படுகிறது. இதன் பின் அவளுடைய திருமணத்தின் பின்தான் ஜோன் ஹா திருமணம் செய்து கொண்டதையும் அவனுக்கு ஒரு மகன் இருப்பதையும் நட்புக்காக அவன் செய்த தியாகத்தினையும் அவன் விட்டுச் சென்ற நாட்குறிப்பின் மூலம் அவள் அறிந்து கொள்கிறாள்.
பின் நிகழ் காலத்துள் வரும் இயக்குனர், ஜி ஹேயின் காதலன் சங் மின் அவளுடைய தாயின் காதலன் ஜோன் ஹாவின் மகன் என்பதைத் தெரிவித்து, ஜி ஹேயையும் அவளின் காதலனையும் அவர்களுடைய பெற்றோர்களின் இளம் பருவ காதல் ஏற்பட்ட அதே கிராமத்தினுள் அழைத்து வந்து, அழகிய இருள் நிறைந்த ஆற்றங்கரையில் நட்சத்திரங்களாய் உலவும் மின்மினிப் பூச்சிகளின் மத்தியில் அவர்களைச் சேர்த்து வைக்கும் ரம்மியக் காட்சியுடன் நமது மனங்களை நிறைவு செய்கிறார்.
மனித உணர்வுகளை மட்டுமல்லாது ஒவ்வொரு காட்சிப் படிமங்களிலும் இயற்கையின் அழகையும் வெகு சிறப்பாக மிளிரச் செய்து எம்முள் சிலிர்ப்பை ஏற்படுத்தும் இயக்குனர், மலைகள், ஏரிகள், ஆறுகள் என்று எழில் கொஞ்சும் தென்கொரியாவின் எல்லாப் பாகத்தையும் எமக்கு அழகுணர்ச்சியுடன் கையளிப்பதிலும் கைதேர்ந்தவராக இருக்கின்றார்.
சாதாரண ஒரு காதல் உணர்வு விட்டுக் கொடுப்பு, பரிதவிப்புகளுடன் கூடிய நட்பின் ஆழத்தினையும் சேர்த்து அழகிய காவியமாகக்கப்பட்டிருப்பது இன்னும் மனிதர்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாக ஒட்டியிருக்கும் மனிதாபிமானத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாகும்.

இந்தக் காதல் உணர்வையே எங்களுடைய தமிழ்ச் சினிமா எங்களுக்கு எப்படிக் காட்டுகிறது. காதல் வன்முறையாக, வக்கிரம் நிறைந்ததாக, விட்டுக் கொடுப்பில்லாததாக, இன்னொருத்தனுடைய காதலியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியாவது அடைந்து விடும் துக்கிரித்தனமானதாக, விரும்பாத பெண்ணை கட்டாயப்படுத்தியாவது விரும்ப வைப்பதாக தமிழ்ச் சினிமாவில் காட்டப்படும்போது நமக்கு முகச் சுளிப்பை ஏற்படுத்தி விடுகிறது. காதல் மட்டுமே வாழ்க்கை என்று நினைக்க வைத்து, காதல் காதல் என்று சாகுமளவிற்கு நமது இளைஞர் யுவதிகளிடம் ஒரு போதையை ஊட்டுவதனூடாக தங்களது பணப்பையை நிரப்பிக் கொள்ளும் தமிழ்ச் சினிமா இயக்குனர்கள், மென்மையான, அழகுணர்வுடனான காதலை எமக்குத் தருவதற்குப் பதிலாக வன்முறைக் கலாசாரத்தையல்லவா எமது மூளைகளில் புகுத்துகிறார்கள். இளைஞர்களிடம் வக்கிரமான காதல், காம உணர்வுகளைத் தூண்டிவிடுவதில் தமிழ்ச் சினிமா ஆற்றும் பங்கு குறித்து நாங்கள் வெட்கப்பட வேண்டுமல்லவா?
ஆனால் அதே காதல் உணர்வுகளை வேற்று மொழியில் உள்ள பல படங்கள் மிக யதார்த்தபூர்வமாக மிக எளிமையாக எம் முன்னே வைக்கும் பொழுது அவை எம்மை சொக்கித்தான் போகச் செய்கிறது.

தாயகம் - இலங்கை

















PROVOKED ஐ முன்னிறுத்தி பெண்கள் மீதான வன்முறை குறித்துச் சில குறிப்புகள்!



* கனடாவைச் சேர்ந்த பல்தேவ் முத்தா சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சொல்கிறார், நான்கு தெற்காசியப் பெண்களில் ஒருவர் உடல் ரீதியாக, உணர்வு ரீதியாக, பொருளாதார ரீதியாக, உள ரீதியாக. துஸ்பிரயோகம் செய்யப்படுகிறார்களென.

* கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் பெண்களில் பத்து வீதமானவர்கள் கணவரைக் கொலை செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டவர்கள் என இலங்கையின் பத்திரிகைக் குறிப்பு ஒன்று கூறுகிறது. மகஸின் சிறைச்சாலையில் 550 பெண் கைதிகள் இருக்கிறார்கள். அவர்களில் எட்டுப்பேர் 18வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் என்றும் அந்தக் குறிப்புக் கூறுகிறது.

ஒருவர் பெண்ணாகப் பிறப்பதில்லை. பெண்ணாக உருவாக்கப்படுகின்றார் என்கிறார் சிமோன்தி பூவா. உண்மைதான் பெண் பிறக்கும் போதே மூடக்கருத்துக்களை மூட்டையாகத் தொப்புள் கொடியில் கட்டிக் கொண்டு பிறப்பதில்லையே. அவர்களைத் தங்களுக்கு ஏற்றவளாக இந்த சமூகம் உருவாக்கி விடுகின்றது. தாங்கள் விரும்பிய மகளாக, தங்களுக்கு ஏற்ற சகோதரியாக, தங்களுக்கு ஏற்ற காதலியாக, தங்களுக்கு ஏற்ற மனைவியாக, தங்களுக்கு ஏற்ற தாயாக என்று தங்களுக்கேற்றாற் போல அவளை உருவாக்கிக் கொள்கின்றனர். அவளை அவளாக வாழ அனுமதிப்பதில்லையல்லவா?

ஏற்கெனவே நாம் உருவாக்கி வைத்திருக்கும் சாத்திரங்கள், சம்பிரதாயங்கள், கலாசாரப் போலிமைகள் எல்லாவற்றினதும் காவியாக அவளை உருவாக்கி விடுகிறோம். பெண் குழந்தையாக இருக்கும் போதே இந்த ‘புடம் போடும்’ பணி ஆரம்பித்து விடுகிறது. பெண்குழந்தையை சுய கௌரவமிக்கவளாக, தனது பிரச்சினைகளைத் தானாகவே எதிர்கொள்பவளாக, தைரியமிக்கவளாக எமது ஆண் குழந்தைகளை வளர்ப்பதைப் போல வளர்ப்பதற்கு எமது பெற்றோர்களால் முடிவதில்லை. அப்படி யாராவது ஒரு பெண் சுயமான ஆளுமையுடன் வளர ஆரம்பித்து விட்டால் அவள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் சங்கடங்களும் ஏராளம்.

இந்த நிலையில் ஈழத்தமிழ்ச் சமூகத்தில் பெண் என்பதால் அவள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை விட, போரும் அவள் மீது மேலதிகச் சுமைகளைத் திணித்து விடுகின்றது. கடந்த பத்தாண்டுகளில் போரின் காரணமாக புலம் பெய்ர்ந்த ஈழத் தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் இன்னொரு பரிமாணத்தையன. அவர்கள் அடையாளப் பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். தங்களது தனித்துவத்தை நிலைநாட்ட அவர்கள் பாரம்பரியங்களுக்குள் சென்று விடுகிறார்கள். இவர்கள் எவ்வளவுதான் முன்னேறிய சமூகத்துள் வாழ்ந்தாலும் தங்களது தனித்துவத்தை வெளிப்படுத்த கலாசாரக்காவியான பெண் தேவைப்படுகிறாள். தாலியும் குங்குமமும் வந்து சேர்ந்து விடுகின்றன. சாதியும் மதமும் இதற்குத் துணைக்கழைக்கப்பட்டு விடுகின்றன.

அங்கு பிறந்து வளர்ந்த பெண்கள் இந்தப் பாத்திரத்திற்குப் பொருந்துவது சற்றுக் கடினம் என்று தெரிந்து கொண்டதால் இங்கிருந்து பெண்களைத் தருவித்து மணம் முடித்துக் கொள்கின்றனர் பெரும்பாலான இளைஞர்கள்.

அந்த வகையில் இங்கிருந்து கூட்டிச் செல்லும் பெண்கள் அங்கு எதிர்கொள்ளும் நெருக்கடிகள் ஏராளம். அவர்கள் மேற்கு கிழக்கு என்ற இரண்டு வேறுபட்ட கலாசாரங்களுக்கிடையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவ்வாறு சிக்கித் தவித்த ஒரு பெண் சிறையிலேயே தனது சுதந்திரத்தைக் காண்கிறாள். ஜக் மோகன் முந்ராவின் Provoked திரைப்படம் அந்த உண்மைக் கதையை எங்கள் முன் கொண்டு வந்திருக்கிறது.

2001 லண்டன் திரைப்பட விழாவில் பவாந்தர் என்ற என்னுடைய திரைப்படத்தைப் பார்த்துவிட்டு மூன்று சமூக செயற்பாட்டாளர்கள் Circle of Light என்ற புத்தகத்தை வாசிக்கும்படி என்னிடம் தந்தார்கள். அவர்கள் தாங்கள் பெண்களுக்கெதிரான வீட்டு வன்முறைகள் குறித்து செயற்படுவதாக என்னிடம் தெரிவித்தார்கள். லொஸ் ஏஞ்சலுக்குப் போகும் வழியிலேயே நான் அதனை வாசித்து முடித்தேன். சிறையிலிருந்த கிரண்ஜித்திடம் “நீ எப்படி உணருகிறாய்” என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அவள் சொல்கிறாள் “நான் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறேன்” என. சிறையில் அவள் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறாள். இது திரைப்படத்திற்கு ஒரு முக்கியமான அம்சமென நான் உணர்ந்தேன். அப்போதே நான் தீர்மானித்தேன் இதனை நான் படமாக்குவதென என்று கூறுகிறார் இத் திரைப்படத்தின் நெறியாளரான ஜக் மோகன் முந்ரா.

ஏப்ரல் 2007இல் லண்டன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்தத் திரைப்படம் 1989ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை கூறுகிறது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்தவள் கிரண்ஜித். பல்கலைக்கழகம் செல்ல வேண்டும், நன்றாகப் படிக்க வேண்டும், வழக்கறிஞராக வேண்டும், உலகைச் சுற்றிப் பார்க்க வேண்மென்று பல கனவுகளைச் சுமந்து கொண்டு வாழும் தாய் தந்தையரை இழந்த 19 வயது கிரண்ஜித்திற்கு அவளுடைய கனவுகள் ஒரு நாள் முடிவுக்கு வருகின்றன. லண்டனிலிருந்து அவளுடைய உறவினனான தீபக் என்பவன் வந்ததே அதற்குக் காரணமாகி விடுகிறது. அவளது சகோதரி தீபக்கிற்கு கிரண்ஜித்தைக் கல்யாணம் செய்து வைக்கிறாள். கல்யாணத்தின் போது கிரண்ஜித் தனது சகோதரியிடம் கேட்கிறாள் எனக்கு அவனைத் தெரியாது, என்னுடைய படிப்பு என்னாவது என்று. அவன் நல்லவன் உன்னைத் தொடர்ந்து படிப்பதற்கு அனுமதிப்பான் என அவளுடைய சகோதரி கூறுகிறாள். தனது சகோதரியின் கூற்றை நம்பி கிரண்ஜித் தீபக்கை திருமணம் செய்து லண்டன் செல்கிறாள்.


ஆனால் லண்டன் வாழ்க்கை அவள் நினைத்ததற்கு மாறாக இருக்கிறது. அவள் ‘நல்ல மனைவியாக’ இருக்கவே வேண்டப்படுகிறாள். அவனுக்குப் பிடித்த உணவு வகைகளைச் செய்து வைப்பது. அவனுடைய ஆடைகளைத் தோய்த்து உலர்த்தி வைப்பது. அவனுடைய இச்சைக்கு இணங்கிப் போவது. அவனுடைய நண்பர்களுடைய கேளிக்கை விருந்துகளில் ‘நல்ல மனைவி’யைப் போல கலந்து கொள்வது. அவனுக்காகக் குழந்தையைச் சுமப்பது என்று, அவள் அவனுக்காகச் செய்பவைகள் ஏராளம். இப்படி அவனுக்காகவே தனது வாழ்க்கையை வாழ்ந்தவள் ஒரு நாள் தூங்கிக் கொண்டிருக்கும் கணவன் மீது எண்ணெய் ஊற்றி எரித்து விடுகிறாள்.

அவனுக்காகவே வாழ்ந்தவள் ஏன் அவனைக் கொலை செய்தாள்? ஏன் அவ்வாறு அவள் தூண்டப்பட்டாள்?

Provoked திரைப்படம் அதனை விரித்துச் சொல்கிறது.

வெளிப்படையாகப் பார்த்தால் அவள் ஒரு கொலைக் குற்றவாளி. அதுவும் வேறுயாரையுமல்ல, தன்னை லண்டனுக்கு அழைத்து வந்த, தனக்கென ஒரு அழகான வீட்டை வாங்கித் தந்த, தனக்கு உணவளிக்கின்ற, தனக்கு உடுபுடவைகள் வாங்கித் தருகின்ற, சினிமாவுக்கு அழைத்துச் செல்கின்ற என்று தன்னுடைய தேவைகள் எல்லாவற்றையும் கவனிக்கின்ற கணவனைக் கொன்றவள்.

இவற்றையெல்லாம் தாண்டி அவளைத் தூண்டியது எது?

அவனுடனான பத்து வருட வாழ்வில் அவள்பட்ட உடல் உள வதைகளும் வலிகளும் தான் என்று சுருக்கமாகக் கூறிவிட முடியும். ஆனால், அந்தப் பத்து வருடத்தில் என்ன நடந்தது? அவள் எவ்வாறு இம்சைப்படுத்தப்பட்டாள்? அவளுடைய உடலெங்கும் யாருக்கும் காட்டிட முடியாதபடி காயங்கள் ஏற்படக் காரணமென்ன? அவள் எப்படி கணவனாலேயே பலாத்காரப்படுத்தப்பட்டாள்? ஆணாதிக்கமும் அதனூடாகக் கிடைக்கிற அதிகாரமும் அவனுடைய சுயநலமும், பொறாமையும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை எப்படி நரகமாக்கி விடுகிறது.

இந்தக் கேள்விகளுக்கான பதில்களாக திரைக்கதை விரியும் முறை எங்களை அதிர வைக்கிறது. ஆனால், சட்டத்தின் கண்களுக்கு இவை எதுவுமே அகப்படுவதில்லை. அது மட்டுமல்ல தனது நிலையை எடுத்துச் சொல்லுமளவிற்கு அவளுக்கு துணிவையோ, ஆங்கில அறிவையோ இந்தச் சமூகம் கொடுக்கவும் இல்லை. கணவனைக் கொன்றதற்கான தண்டனையை ஏற்றுக் கொள்வதைத் தவிர அவளுக்கு வேறு வழியிருக்கவில்லை. ‘இந்த வழக்கில் தற்காப்பு என்பதைப் பயன்படுத்த முடியாது. ஏனெனில் அவள் உடல் ரீதியாகத் தாக்கப்பட்டது அவன் கொல்லப்படுவதற்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னர். ஆகவே அந்தக் கொலை தற்பாதுகாப்புக்கானதல்ல, முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்யப்பட்டது என்று நீதிமன்றம் கூறி விடுகின்றது. எனவே அவள் சிறை செல்ல நேர்கிறது. இந்த இடத்தில் தான் குறுக்கிடுகிறார்கள் Southall Black Sisters என்ற அமைப்பினர்.


Southall Black Sisters
அமைப்பு 1979ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் Southall இல் நடந்த இனக்கலவரத்தின் போது கட்டியெழுப்பப்பட்டது. இவ்வமைப்பு கறுப்பின மற்றும் ஆசியப் பெண்களுக்கான மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சட்டத்தினால் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் முகமாகவும் உருவாக்கப்பட்டது. அவர்கள் கிரண்ஜித்துக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணர்ந்தார்கள். அந்த வழக்கை மீள எடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கினார்கள். சிறையிலே இருந்த கிரண்ஜித்தைச் சந்தித்து அவளுக்கு நம்பிக்கையூட்டினார்கள். அவர்கள் கொடுத்த நம்பிக்கை கிரண்ஜித்தை தன்னுடைய கடந்த காலத்தைப் பற்றிப் பேச வைக்கிறது. ஆங்கிலத்தை சிறையிலேயே கற்பதனூடாக தன்னை தனக்கு நேர்தவைகளை அவளாகவே வெளிப்படுத்த முடிகிறது.

Southall Black Sisters உடனடியாக கிரண்ஜித்தின் விடுதலைக்காக களத்தில் இறங்கிப் போராடுகிறார்கள். ஊடகங்கள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் இந்த வழக்கில் நேர்ந்த அநீதியை மக்களுக்குக் கொண்டு செல்கின்றனர். கிரண்ஜித்திற்கு நீதி கிடைக்க வேண்டுமென்று வேண்டுகின்றனர். சிறையில் இருக்கும் சக பெண் கைதியின் சகோதரரின் உதவியுடன் கிரண்ஜித்தின் வழக்கை திரும்பவும் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்கின்றனர். கொலையை விட அவளை அதற்குத் தூண்டிய காரணங்கள் வலிமையானவை என்பது நிரூபிக்கப்படுகிறது. இவர்களின் அயராத முயற்சியின் காரணமாக இறுதியாக கிரண்ஜித் விடுதலையாகுகிறாள்.

கிரண்ஜித் வழக்கின் தீர்ப்பு பிரிட்டனின் நீதித்துறையில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திய விவகாரமானது. அவளுடைய மனுவும் வழக்கு விசாரணையும் சட்டங்கள் தொடர்பான முன்னுதாரணமானது. இவ்வழக்கு லண்டனில் வீட்டு வன்முறை தொடர்பான ஒரு முக்கியமான வழக்காக கருதப்பட்டது. அது பிரிட்டிஸ் சட்டத்திலேயே மாற்றத்தை ஏற்படுத்தியது. ‘Provoked’ எனும் சொல்லின் அர்த்தமே மறுவார்ப்புச் செய்யப்பட்டது.

பிரிட்டன் நீதிமன்றம் முதன்முறையாக ‘பொறுப்பற்ற தன்மையுடன் நடந்து கொண்டதையும், தூண்டப்படுவதற்கு காரணமாக இருந்ததையும் ஏற்றுக் கொண்டது. எப்போதும் பாதிப்புக்காளாகும் பெண் தனது எதிர்ப்பு நடவடிக்கையை உடனடியாக எடுப்பதில்லை என்பதையும் அங்கீகரித்து, காலம் தாழ்த்தியேனும் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கலாம் ஏனெனில் அவளுக்கு எப்போதும் ஒரு பயமிருக்கும், மீண்டும் தான் அவ்வாறு தாக்கப்படலாமென என்பதையும் ஏற்றுக் கொண்டது. அந்த வகையில் இத்திரைப்படம் மிக முக்கியமாகிறது.

சரிநிகர்

செப் - ஒக் 2007









Monday, September 24, 2007

1084 இன் அம்மா: உண்மையைத் தேடி ஒரு பயணம்!







பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் போது ஏற்படும் வலிகள், பின்னர் அவர்கள் இல்லாது போகும்போது அந்த வெறுமை கொடுக்கும் வலிகள், தவறான வழியில் போகும் பிள்ளைகள் கொடுக்கும் வலிகள், கணவனால் துன்புறுத்தலுக்குள்ளாகி அதிலிருந்து மீள முடியாத வலிகள், சிந்திக்கத் தெரிந்த பிள்ளைகள் யாரோ ஒரு முட்டாளின் கைகளில் சின்னா பின்னப்படும்போது ஏற்படும் வலிகள். இந்த எல்லா வலிகளுமே எமது தாய்மாருக்கு வலிந்து திணிக்கப்பட்டுள்ளது.

பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் எங்கே போகிறார்கள்? யாருடன் பழகுகிறார்கள்? என்று எங்களில் எத்தனை தாய்மாருக்குத் தெரிந்திருக்கிறதெனச் சொல்லுங்கள் பார்க்கலாம். அவர்களுக்கு மூடப்பட்ட தங்களின் உலகங்களைத் தவிர வேறு ஒன்றுமே தெரிவதில்லை. அதற்காக எமது அம்மாக்கள் எல்லாம் முட்டாள்களல்ல. அவர்கள் முட்டாள்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். தங்கள் கணவன்மாரால். எவ்வளவுதான் படித்தவர்களாக இருந்தாலும் தமது சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு, குலங் கோத்திரங்களுக்கு ஏற்றவகையில் அவர்களைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது எமது ஆண்நிலைப்பட்ட சமூகம்.

இந்த வகையில் கணவனின் மூடத்தனமான சாஸ்திர சம்பிரதாயங்களுக்கும், வறட்டுக் கௌரவங்களுக்கும் ஆட்பட்ட உயர்நடுத்தர வர்க்கக் குடும்பத்திலுள்ள படித்த, வேலைசெய்யும் தாய். அந்த மூடச்சம்பிரதாயங்களையும், வரட்டுக் கௌரவங்களையும் வெறுத்தொதிக்கி ஒடுக்கப்பட்ட மக்களையும், அவர்களுக்கான உலகத்தையும் சிருஷ்டிக்கும் கனவுகளுடன் போராடப் புறப்பட்ட மகன். இவர்களுக்கிடையிலான உறவும் பிணைப்பும், புரிதலும் புரியாமையும் தான் கோவிந்த் நிஹாலினியின் 1084இன் அம்மா என்கிற திரைப்படம்.
(Mother of 1084)

கோவிந்த் நிஹாலினி 1940ஆம் ஆண்டு பாகிஸ்தான் கராச்சியில் பிறந்தார். 1947 இல் இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் இந்தியாவில் வசித்து வருகிறார். 1962ஆம் ஆண்டு பெங்களுரிலுள்ள ஸ்ரீ ஜெய சாம்றயேந்திரா உயர் கல்லூரியில் ஒளிப்படக்கலை சம்பந்தமாக பட்டம் பெற்றவர். இந்தியாவின் பிரபல இயக்குனரான ஷ்யாம் பெனகலின் ஆரம்பகாலப் படங்களில் இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாது கிறிஷ் கர்னாட், சத்யஜித்ரே படங்களுக்கும், ஒஸ்கார் விருது பெற்ற றிச்சார்ட் அற்றென்பெறோவின் காந்தி படத்திற்கும் இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிஹாலினியும், பெனகலும் பல சமூகப் பிரக்ஞையுள்ள படங்களை இயக்கியுள்ளனர். பதினைந்துக்கும் மேற்பட்ட சமூகப் பிரக்ஞையுடைய திரைப்படங்களை கோவிந்த் நிஹாலினி இயக்கியுள்ளார். அந்தவகையில் பெண்ணியவாதி, சமூகசேவையாளர், எழுத்தாளர் என்று பல வகையிலும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் மகாஸ்வேதாதேவியின் நாவலான Mother of 1084 என்கிற நாவலைத் திரைப்படமாக தந்துள்ளார் கோவிந்த் நிஹாலினி. இதற்கான திரைக்கதையையும் நிஹாலினியே எழுதியுள்ளார். இந்தத் திரைப்படம் 1998ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது

"நாங்கள் இளைஞர்கள் அம்மா. இள ரத்தம். நாங்கள் இந்த நகரத்தைச் சிவப்பாக்க விரும்புகிறோம். பாதுபாப்பில்லாத இந்த நகரத்தை ரோஜா மாதிரி சிவப்பாக, புரட்சிச் சிவப்பாக, இரத்தச் சிவப்பாக நாங்கள் மாற்றப் போகிறோம்."

"நாங்கள் இந்த நகரத்தை பாதுகாப்பற்ற தன்மையிலிருந்தும் பயங்கரம் மற்றும் அச்சத்திலிருந்தும் விடுவிக்க விரும்புகிறோம். இத்தனை வருடங்களாக பயத்தினுள் எங்களை வைத்திருப்பவர்களிடமிருந்து விடுவித்துக் கொள்ள விரும்புகிறோம்."

"நான் ஒரு கனவு காணுகிறேன் அம்மா. அது ஒரு அற்புதமான கனவு. அது எல்லாவற்றையுமே தலைகீழாகப் புரட்டிப் போடுகின்ற கனவு. அது எல்லாவற்றையும் மாற்றும். இந்தச் சூழல், இந்த நிலைமைகள், இந்தச் சமூகம் எல்லாவற்றையும். அந்த உலகம் ஏழ்மை, நோய், அசுத்தம், பசி, ஊழல், மோசடி என எல்லாவற்றிலிருந்தும் விடுவிக்கப்பட்ட ஒரு உலகமாக இருக்கும்."

"இருட்டினில் வாழ்பவர்களுக்கு ஒளியைக் கொண்டு வருவது பற்றி நான் கனவு காண்கிறேன். என்னுடன் உள்ள நண்பர்களுடன் நான் இந்தக் கனவைப் பகிர்ந்து கொள்கிறேன். நாங்கள் எங்களுடைய கனவுகளைப் புரட்சியினூடாக நிதர்சனமாக்க விரும்புகிறோம். நாங்கள் ஒரு புதிய உலகத்தைச் சிருஷ்டிக்க விரும்புகிறோம். சமத்துவம், சமாதானம், நீதி என்பவற்றை எல்லோருக்கும் கொடுக்கும் ஒரு புதிய உலகமாக அது இருக்கும்."


1970களில் கல்கத்தாவின் வீதியெங்கும் இந்தக் குரல்கள் தான் ஒலித்துக் கொண்டிருந்தன. ஒடுக்குமுறைக்குள்ளான மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடத் தொடங்கினர். நக்சல்பாரி இயக்கம் இதற்கு தலைமை தாங்கி வழி நடத்தியது. இது பண்ணையாளர்களுக்கு எதிராகவும், முதலாளித்துவத்திற்கு எதிரானதுமான விவசாயப் புரட்சியாக வெடித்தது. மார்க்ஸ், லெனின், மாஓ போன்ற மாபெரும் தலைவர்களது கொள்கைகளை அடியாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கத்தில் ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் தமது கல்வியைத் துறந்து இணைந்து கொண்டிருந்தனர். இந்த இயக்கம் கல்கத்தாவில் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தமிழ்நாடு உட்பட பரவி வளர்ச்சி பெற்றது. இவ்வாறு இந்த இயக்கத்தில் இணைந்து கொண்ட இளைஞர்களைப் பயங்கரவாதிகள் என்று கூறி அன்றைய அரசாங்கம் நாயைச் சுடுவது போல் சுட்டுக் கொன்று குவித்தது. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இந்தப் போராட்டத்தில் காட்டிக் கொடுக்கப்பட்டு உயிர் துறந்தனர். அவ்வாறு நக்கசல்பாரி இயக்கத்தில் இணைந்து பின்னர் சக நண்பனாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு அந்த ஊர்ப் பண்ணையாளர்களால் படுகொலை செய்யப்படுகின்றனர் உயர் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த பிரத்தி என்ற இளைஞனும், அவனது நண்பர்களும்.


படம் அதிகாலையில் வரும் ஒரு தொலைபேசி அழைப்புடன் ஆரம்பிக்கிறது. பிணவறையில் வைக்கப்பட்டுள்ள 1084 ஆம் இலக்க பிணத்தை அவளுடைய மகனுடையது தானா என அடையாளம் காட்ட வருமாறு பொலிஸிலிருந்து அழைக்கும் குரல். அவள் பிணவறைக்குச் சென்று பார்க்கிறாள். அவளுடைய மகன் பிரத்தி கொல்லப்பட்டு விட்டான். அந்தப் பிணத்தினுடைய எண்தான் 1084. தாயினால் அடையாளம் காட்டப்படும் பிரத்தியின் உடல் பெற்றவளிடம் ஒப்படைக்கப்படாமல் பொலிஸாராலேயே எரியூட்டப்படுகிறது.
ஆனால், பிரத்தியினுடைய தந்தைக்கோ சகோதரர்களுக்கோ அவன் கொல்லப்பட்டது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. மாறாக அவனுடைய நக்சல்பாரிச் செயற்பாடுகள் பற்றி பத்திரிகைகளில் வந்து விடக் கூடாது. அதனால் தமது கௌரவத்திற்கு இழுக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்று கவலைப்படுபவர்களாக வெறும் சுயநலமிகளாக இருக்கிறார்கள். பிரத்தி என்று ஒருவன் இருந்தான் என்பதையே அவர்கள் மறந்து போகிறார்கள். அவனைப் பற்றி நினைப்பதையே பாவக்கேடாகக் கருதுகிறார்கள்.


ஆனால் தாயால் அப்படி இருக்க முடியவில்லை. அவள் மகன் மீது மிகுந்த அன்பும், மதிப்பும் வைத்திருக்கிறாள். அதுவரை தனது மகன் எங்கே போகிறான், எப்போது வருகிறான், என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று அறியாத தாய், மகனுடைய இறப்பின் பின்பே அவனைப் பற்றி இவ்வளவு காலமும் தான் அறிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறேனே என்று நினைத்து வருந்துகிறாள். மகனைப் பற்றி அறிந்து கொள்வதற்காக அவனுடைய நண்பர்களைத் தேடிப் பயணத்தை ஆரம்பிக்கிறாள். ஆனால் அவள் அறிந்திருக்கவில்லை அது அவளுடைய மகனைப் பற்றி அறியும் பயணமாக மட்டுமல்லாது அது ஒரு புதிய உலகத்தையே அவளுக்குக் காட்டப் போகிறது என்று.


பிரத்தியுடன் படுகொலை செய்யப்பட்ட அவனுடைய நண்பனின் தாயைச் சந்திக்கிறாள். அந்தத் தாய் பிரத்தியைப் பற்றிச் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அவளுக்கு ஒரு புதிய உலகைத் திறக்கிறது. தான் அறிந்து கொள்ளாத ஒரு உலகத்திற்கும் பிரத்திக்குமான உறவு அவளுக்குள் அதிர்வையும் வியப்பையும் ஏற்படுத்துகிறது. மகனின் மீதான அவளுடைய மதிப்பு உயர்கிறது.

பிரத்தியின் காதலியும் நக்சல்பாரி செயற்பாட்டாளர்களில் ஒருவருமான நந்தினி பிரத்தியைப் பற்றி இன்னொரு உலகத்தை அவளுக்குத் திறந்து காட்டுகிறாள். மகனைப் பற்றி மட்டுமல்லாது சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட ஏழை மக்களைப் பற்றியும் அறிந்து கொள்ள உதவும் ஒரு பயணமாக அவளுடைய இந்தத் தேடல் அமைந்து விடுகிறது.

போராளி மகனைப் பற்றிய அவளுடைய தேடல் இதுவரை அவள் கண்டுகொள்ளாதிருந்த ஒரு உலகத்தை அவளுக்குத் திறந்து விடுகிறது. அன்றாட உணவுக்கே அல்லற்படும் மக்கள், பணக்கார ஆதிக்க சாதியினரால் ஒடுக்குமுறைக்குள்ளாகும் ஏழை விவசாயிகள், காலங்காலமாக அடிமைகள் போல உழைத்து ஓடாகிய மக்கள் கூட்டம். இவர்கள் எல்லாம் அவள் வாழ்கிற அதே கல்கத்தாவில் தான் வாழ்கிறார்கள். ஆனால் கல்கத்தாவில் இப்படி ஒரு நிலைமை இருந்தது தெரியாமலே அவள் வாழ்ந்திருக்கிறாள். ஆனால் அவளுடைய மகன் பிரத்தியினுடைய நண்பர்கள் வட்டம் இந்த ஒடுக்கப்பட்டவர்களினாலேயே சூழ்ந்துள்ளது. அவன் இவர்களில் ஒருவனாக வாழ்ந்திருக்கிறான். இவர்களுக்காக போராடியிருக்கிறான். அந்தப் போராட்டத்திலேயே அவன் மரணித்திருக்கிறான். இதன் பின்னர் இவ்வளவு நாளாக தன் மகனைப் பற்றி அறிந்து கொள்ளாமல் இருந்து விட்டேனே என்ற ஆதங்கமும் கழிவிரக்கமும் மேலிட தனது வீட்டிலுள்ளவர்கள் மீதும், தனது உயர்குடி சமூகத்தின் மீது அவளுக்கு வெறுப்பும், கோபமும் ஏற்படுகிறது. அந்த வெறுப்பு தனது கணவனைப் புறக்கணிக்க வைக்கிறது, மகளின் படாடோபமான திருமண வைபவத்தைக் கூடப் புறக்கணிக்க வைக்கிறது.

"பிரத்தி, நீ இந்த அறையில் பல பொருட்களைக் கொண்டு வந்து சேமித்து வைத்துள்ளாய். எனக்கு ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. மணிக்கணக்கில் தனியாக இந்த அறையில் இருந்திருக்கிறாய. அதைக்கூட நான் பெரிதாக உணரவில்லை, சாதாரணமாக உன்னுடைய வயதில் இருப்பவர்களுக்கிருக்கும் சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள், கனவுகளோடு இருக்கிறாய் என்றே நான் நினைத்தேன். ஆனால் நீ ஆபத்துக்களோடு இருந்திருக்கிறாய்? நான் உன்னுடைய அம்மா. ஆனால், எந்த மாதிரியான அம்மா? உன்னைப் பற்றி எதையும் கண்டுகொள்ளாத, அறிந்து கொள்ளாத அம்மா. உன்னுடைய முகத்தில் தெரிந்த புன் சிரிப்பையும், அமைதியையும் கண்டு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த அம்மா" என்று தன்னைத்தானே நொந்து கொள்கிறாள். ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அதிகளவு அன்பும், அக்கறையும் கொண்டு அவர்களுக்காகவே வாழ்ந்த தனது மகனைத் தான் விளங்கிக் கொள்ளாதற்கான தண்டனை தான் தன்னுடைய மகனுடைய இந்தப் பிரிவு என்று தேம்புகிறாள்.


மகனை தொடர்ந்த தாய் அவனது இலட்சியங்களைப் பின் தொடர்பவளாகிறாள். தன்னுடைய வங்கி வேலையை இராஜினாமா செய்யும் சுஜாதா, மனித உரிமைகளுக்கான ஆவணக் காப்பகம் ஒன்றை நிறுவி மனித உரிமைகளைக் காக்கும் பணியில் ஈடுபடுகிறாள். நந்தினியும் பழங்குடி மக்களின் உரிமைகளைக் காக்கும் போராளியாக தன் வாழ்வைத் தொடர்கிறாள்.

நந்தினி ஒரு போது பிரத்தியின் தாயிடம் சொல்கிறாள், "எதுவும் இன்னும் மாறிவிடவில்லை. சுரண்டலும் கயமையும் அயோக்கியத்தனமும் அதிகாரமும் தொடர்ந்து நிலவுகிறது" என்று.

அந்த வரிகள் எவ்வளவு உண்மையானது. அன்றிலிருந்து இன்றுவரை தமது சுய இலாபங்களுக்காக காட்டிக் கொடுப்பும், வன்முறைகளும் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கிறது. அதை நாங்கள் எமது கண்ணூடே பார்த்த வண்ணம் கையாலாகாத்தனமானவர்களாகத்தான் இருக்கிறோம்.இன்றும், தமது பிள்ளைகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாத அம்மாக்கள் கயவர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு கொன்றொழிக்கப்பட்ட, காணாமற்போன தமது பிள்ளைகளைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.


கோவிந்த் நிஹாலினி அந்தத் தாயினுடைய பயணத்தூடாக எங்களையும் பயணிக்க வைக்கிறார். நாங்கள் அறிந்து கொள்ளாத, எமது ஊடகங்கள் எங்களுக்குக் காட்டாத, எமது சினிமா எங்களுக்கு மறைக்கிற ஒரு உலகத்திற்கு எங்களைப் பயணிக்க வைக்கிறார். அந்தப் பயணம் மறைக்கப்பட்ட உலகத்தை, மறைக்கப்பட்ட உண்மைகளை எங்களைத் தரிசிக்க வைக்கிறது. அந்த உலகத்தை எங்களுடன் நெருங்க வைக்கிறது. எங்களுடைய அறியாமை இருளின் மீது ஒளியைப் பாய்ச்சுகிறது.


செப் - ஒக், 2007

தாயகம் - இலங்கை







மல்கம் X திரைப்படம் குறித்து சில குறிப்புகள்




நான் உங்களுக்கு கூறுகிறேன் இந்த உலகத்திலேயே மிக மோசமான கொலைகாரர்கள் வெள்ளையர்கள் தான்”

“நான் குற்றஞ் சுமத்துகிறேன் இந்த உலகத்திலேயே மிக மோசமான கடத்தல்காரர்கள் வெள்ளையர்கள் தான்”

“அந்த மனிதர்கள் போகாத ஓரிடமும் இந்த உலகத்தில் இல்லை. எல்லா இடங்களுக்கும் சென்று அவர்கள் கூறுகிறார்கள் தாங்கள் சமாதானத்தையும் இணக்கப்பாட்டையும் கொண்டு வருவதாக. ஆனால் அவர்கள் மிக மோசமான நாசகாரர்கள். அடிமை வணிகம் செய்பவர்களும், கொள்ளைக்காரர்களும் வெள்ளையர்கள் தான். அவர்கள் இதனை மறுக்க முடியாதபடி வாழும் சாட்சியங்களாக நாங்கள் உள்ளோம். நீ அமெரிக்கன் இல்லை. அமெரிக்கனால் பழிவாங்கப்பட்டவன். நீயும் நானுமே அதற்குச் சாட்சிகள்.”

இந்த வரிகளுடன் காட்சிப் படிமங்களினூடு செல்லும் ஸ்பைக் லீயின் கமெரா ஒரு கறுப்பு இளைஞனை வெள்ளையினப் பொலிஸ் அடித்து நொறுக்குவதையும் அதன் காரணமாக பற்றியெரியும் நெருப்பில் அமெரிக்கக் கொடி பொசுங்கிப் போவதனையும், கொழுந்து விட்டெரியும் அந்த நெருப்பு எக்ஸ் எனும் எழுத்தாக உருமாறுவதனூடாகவும் வாழும் சாட்சியாக இருந்து தனது மக்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பி விட்டுப் போன மாபெரும் கறுப்பினத் தலைவனான மல்கம் எக்ஸை உயிர்பெற வைக்கின்றது.

பல நூற்றாண்டு காலமாக கறுப்பர்களுக்கெதிரான நிறவெறி வன்முறைகள் வெள்ளையர்களினால் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. ஆபிரிக்காவிலிருந்து கறுப்பின மக்களை பலவந்தமாக ஏற்றுமதி செய்து விலங்குகளைப் போல் உலக நடப்புக்களையே அறியா வண்ணம் தமது ஏவல் வேலைகளைச் செய்யும் அடிமைகளாக வைத்திருந்தனர் வெள்ளையர். இந்த நிறவெறியை எதிர்த்து பல கறுப்பினத் தலைவர்கள் போராடியுள்ளனர். போராடி வருகின்றனர். போராடும் கறுப்பினத் தலைவர்கள் அமெரிக்காவிற்குப் பெரும் தலையிடியாகவே எப்போதும் இருந்து வந்துள்ளனர். அதில் மல்கம் எக்ஸ் மிகவும் முக்கியமான ஒருவர். அமெரிக்கக் கறுப்பர்களின் தலையெழுத்தை மாற்றக் கூடிய ஒரேயொரு சக்தியாகவும் மல்கம் இருந்துள்ளார் என்பதில் மிகையில்லை.

அலெக்ஸ் ஹெலி எழுதிய மல்கம் எக்ஸின் வாழ்க்கைக் காவியத்தைப் திரைக்காவியமாக எமக்குத் தந்திருக்கிறார் ஸ்பைக் லீ. ஸ்பைக் லீ 1957ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் பிறந்த ஒரு கறுப்பினத்தவர். கலைத்துறையில் முதுமாணிப் பட்டத்தைப் பெற்றவர். திரைப்படக்கலை சம்பந்தமாகவும் கற்றுத் தேர்ச்சி பெற்றவர். 15க்கு மேற்பட்ட சிறந்த திரைப்படங்களையும், இசை அல்பங்களையும், குறுந்திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். அது மட்டுமில்லாமல் அவர் ஒரு எழுத்தாளரும் கூட. இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், எழுத்தாளர், நடிகர் என்று பல பரிமாணங்களில் பிரகாசிப்பவர் ஸ்பைக் லீ. இவருடைய பல படங்கள் கறுப்பர்கள் மீதான வெள்ளையர்களின் இனவெறி மற்றும் நிறவெறி பற்றியே பேசுகின்றன. இவருடைய மிக முக்கியமான திரைப்படங்களிலொன்று மல்கம் எக்ஸ். இத்திரைப்படத்தின் மூலம் பலத்த சர்ச்சைகளுக்கும் ஆளானவர். அந்த வகையில் மல்கம் எக்ஸ் திரைப்படம் மூலம் கறுப்பர்களை மட்டுமல்லாமல் எம்மையும் வரலாற்றை ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைக்கிறார் ஸ்பைக் லீ.

திரைப்படம் மல்கம் எக்ஸின் இளம்பராய வாழ்க்கையுடன் ஆரம்பிக்கிறது. இதில் இளம் பராய மல்கம் எக்ஸின் தோழனாக ஸ்பைக் லீயே நடித்துள்ளார். கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய மல்கமின் தந்தை ஏர்ல் லிட்டில் ‘‘கு க்ளக்ஸ் க்ளன்’’ எனும் வெள்ளையர்களின் கொலைவெறிப் படையால் கொலை செய்யப்படுகிறார். சிறந்த ஆளுமையும், சிறந்த பேச்சுத் திறமையும், மார்க்கஸ் கார்வியின் ‘‘உலகெங்கும் உள்ள கறுப்பர்கள் அனைவரும் ஆபிரிக்காவுக்குத் திரும்ப வேண்டும்;’’ என்ற கொள்கைக்கான உலக நீக்ரோ முன்னேற்றக் கழக அமைப்பின் ஒமாஹா பகுதியின் தலைவராகவும் இருந்த ஏர்ல் லிட்டில் மல்கமுக்கு ஆறு வயதாக இருந்தபோதே படுகொலை செய்யப்படுகிறார்.

மல்கமின் சிறுவயதில் நடந்த சம்பவங்களை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இளைஞனாகவுள்ள மல்கம் நினைத்துப் பார்ப்பது போல் பின்னோக்கி நகரும் காட்சியின் உத்தியில் திரைப்படத்தை நகர்த்திச் செல்கிறார் லீ.

ஒரு சந்தர்ப்பத்தில் பாடசாலையில் ஆசிரியர் ஒவ்வொரு மாணவர்களாக, நீங்கள் அனைவரும் எதிர்காலத்தில் என்னவாக வர விரும்புகிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார். அதற்கு வெள்ளையின மாணவர்கள் கூறும் பதிலால் திருப்தியடையும் ஆசிரியர், மல்கமைப் பார்த்து நீ என்னவாக வர விரும்புகிறாய் எனக் கேட்க, நான் ஒரு வழக்கறிஞராக வர விரும்புகிறேன் எனக் கூறும் மல்கமை நோக்கிய ஆசிரியர் வெறுப்பும், சினமும் கொள்கிறார். அதனைக் காட்டிக் கொள்ளாதவாறு "நீ ஒரு தச்சுத் தொழிலாளியாக வரலாமே'' என்று கூறுகிறார். இந்தப் பதில் மல்கமின் பிஞ்சு மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மாணவர்களிலேயே திறமைசாலியான மாணவனாக இருந்தும் கறுப்பன் என்ற காரணத்திற்காக அவன் ஒதுக்கப்படுகிறான். பிஞ்சு மனங்களிலே நஞ்சு விதைக்கப்படுகிறது. கறுப்பு மாணவன் என்ற காரணத்திற்காக அவனது விளையாட்டு ஆர்வமும் தடைப்பட்டுப் போகிறது.

இளைஞனாக இருந்த காலத்தில் வெள்ளைக்காரர் போல் தான் இருக்க வேண்டும் என்று ஆசை கொண்ட மல்கத்தை படத்தின் ஆரம்பக் காட்சிகளில் லீ தெளிவாகக் காட்டியுள்ளார். கறுப்பர்களுக்கே உரித்தான தனது சுருண்ட தலைமயிரை 'ஸ்ரைற' பண்ணி வெள்ளைக்காரர் மாதிரி பாவனை செய்து கொள்வதும், அவர்கள் மாதிரியே நடையுடை பாவனையை மாற்றிக் கொள்வதும், வெள்ளையினப் பெண்களுடன் சல்லாபிப்பதுமாக இருக்கும் மல்கமையே லீ முதலில் எமக்கு அறிமுகம் செய்கிறார். படத்தின் முதல் அரைவாசியும் மல்கமின் இளம் பராய வாழ்க்கை பற்றியே பேசப்படுகிறது. போதைப் பொருள் கடத்துவது, விற்பது, சூதாட்டங்களில் ஈடுபடுவது போன்றவற்றில் மல்கம் கைதேர்ந்தவராக இருக்கிறார். ஒருமுறை கொள்ளை ஒன்றில் ஈடுபட்டு பொலிஸாரிடம் பிடிபடும் மல்கம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறார்.

சிறை செல்லும் மல்கம் வெள்ளைக் காவலர்களிடம் காட்டும் எதிர்ப்பின் காரணமாக பல சித்திரவதைகளை அனுபவிக்கிறார். எவ்வளவுதான் உல்லாசமாகத் திரிந்தாலும் அவ்வப்போது அவரது வெள்ளையர்கள் மீதான எதிர்ப்பும் வெளிப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. சிறை மல்கமுக்குப் பல பாடங்களைக் கற்றுத் தருகின்றது. சிறையில் சந்திக்கும் பெய்னிஸ் எனும் சக கைதியினால் கறுப்பின அடையாளத்தைப் பற்றியும், ‘நேஷன் ஒவ் இஸ்லாம்’ எனும் அமைப்பைப் பற்றியும் அதன் தலைவரான இலிஜா மொஹமட்டைப் பற்றியும் தெரிந்து கொள்கிறார். வெள்ளையர் பற்றிய மல்கமின் மாயையைத் தகர்த்து இலிஜா மொஹமட்டால் மட்டும் தான் உன்னையும், உனது மனதையும் வெளிக் கொண்டு வர முடியும் எனக் கூறுகிறான் பெய்னிஸ். கறுப்பர்கள் தான் உன்னதமானவர்கள். கடவுள் கூடக் கறுப்புத்தான். வெள்ளைக்காரர்கள் தான் கூறுகிறார்கள் ஜீஸஸ் வெள்ளை உடம்பும், நீலக் கண்களும், பொன்னிறத் தலைமயிரும் உடையவர் என்று. அதை நாமும் நம்புகிறோம். ஆனால் எல்லாமே கறுப்புத்தான், நாங்கள் தான் உண்மையான மனிதர்கள், இந்த உலகத்தில் முதன் முதலில் பிறந்தவர்கள் கறுப்பர்கள் தான் எனக் கறுப்பர்களின் பலம், ஆளுமை என்பவற்றைப் புரிய வைக்கின்றான். இந்தச் சம்பவமே மல்கமின் வாழ்வை இன்னொரு திசைக்கு இட்டுச் செல்ல வழி சமைக்கிறது. மேலதிகமாக வாசிக்கவும் அதனால் யோசிக்கவும் தூண்டுகிறது.

சிறையிலிருந்து வெளிவரும் மல்கம் நேஷன் ஒப் இஸ்லாமில் இணைந்து கொள்கின்றார். அமைப்பின் அமைச்சராக அதைக் கட்டியெழுப்புவதற்காக முன்னின்று உழைக்கின்றார். பலதரப்பட்ட மனிதர்களையும் தனது அமைப்பிற்குள் கொண்டு வருகிறார். மனிதர்களின் ஆன்மாவை ஊடுருவி அவர்களோடு உறவை ஏற்படுத்திக் கொள்வதும் அமைப்பாக மாற்றுவதும் மல்கமுக்கு கைவந்த கலையாக இருக்கிறது. இதில் மல்கம் எக்ஸாகவே மாறியுள்ள டென்ஸில் வோஷிங்ரனின் அற்புதமான நடிப்பு எங்களையும் மூன்று மணி நேரம் மல்கம் எக்ஸ் உடன் வாழ வைத்து விடுகிறது.

இந்தவேளையில் அமைப்பின் உறுப்பினராக இருந்த சகோதரி பெற்றி எக்ஸின் மேல் மல்கமுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. பெற்றியின் ஆளுமை அவரை கவனம் கொள்ளச் செய்கின்றது. பெற்றியும், மல்கமும் இலிஜா மொஹமட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கின்றனர்.

மல்கம் எக்ஸின் புகழ் கூடக் கூட அமைப்பிற்குள்ளேயே மல்கமிற்கு எதிரிகள் உருவாகத் தொடங்குகிறார்கள். மல்கமின் ஆளுமைக்கு முகம் கொடுக்க முடியாதவர்களாக மாறுகிறார்கள். சிறையில் மல்கமுக்கு நேஷன் ஒப் இஸ்லாமை அறிமுகப்படுத்தும் பெய்னிஸ்ஸே ஒரு கட்டத்தில் மல்கம் மீது பொறாமை கொள்கின்றான். அவனுக்கு மல்கமின் வளர்ச்சி தாங்கிக் கொள்ள முடியாததாக இருக்கிறது. ஆனால் மல்கமோ பெய்னிஸ் தனக்கு எதிரியாக மாறுவான் என நம்ப முடியாதவராக இருக்கிறார். பெற்றிக்கும் அவருக்குமான உரையாடலில் மல்கம் எவ்வாறு சகோதரர் பெய்னிஸை நம்பினார் என்பதை தெளிவுபடுத்துகிறார் லீ. சகோரதரர் பெய்னிஸ்தான் சிறைக்குள் விலங்கைப் போல் வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு கௌரவத்திற்குரிய இலிஜா மொஹமட்டை அறிமுப்படுத்தியவர். எனது வாழ்க்கையைப் பத்திரப்படுத்தியவரும் அவரே, அவரால் எனக்குத் துரோகம் செய்ய முடியாதென மல்கம் பெற்றியிடம் கூறுகிறார்.
இந்த நேரத்தில்தான் இலிஜா மொஹமட்டால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட, அமைப்பின் பெண் சகோதரிகள் இருவர் தமக்குப் பிறந்த குழந்தைகளுக்கு தந்தை இலிஜா மொஹமட் என்று பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளிக்கிறார்கள். பேட்டியின் மூலம் அது தெரிய வரும்போது இலிஜா மொஹமட் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் மல்கம் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரையும் நேரில் சந்தித்துப் பேசும் போது உண்மையை அறிந்து கொள்கிறார்.

அதன் பிறகு பெய்னிஸ் உடன் நடைபெறும் உரையாடலில் பெய்னிஸ் கூட மொஹமட் செய்ததில் தவறில்லையெனக் கூறுகிறான். இலிஜா மொகமட் கூட தான் செய்தது தவறில்லையெனும் கருத்துப்பட மல்கமுடன் உரையாடுகிறார். ஆனால் மல்கத்தால் இதனை ஒத்துக் கொள்ள முடியவில்லை. நாங்கள் மக்கள் தலைவர்கள். நாங்களே இவ்வாறு செய்யலாமா? எனக் கேள்வியெழுப்புகிறார்.

இந்த விடயமும், கென்னடியின் கொலை தொடர்பாக மல்கம் அளித்த பேட்டியும் நேஷன் ஒப் இஸ்லாமுக்கும் அவருக்குமான உறவில் பிளவு ஏற்படக் காரணமாகிறது. இதன் பிறகு முற்றாக நேஷன் ஒப் இஸ்லாமிலிருந்து விலகும் மல்கம் “ஆப்ரோ அமெரிக்க ஒற்றுமை நிறுவனம்” (OAAU) என்ற புதிய அரசியல் அமைப்பை, நிறுவி மக்கள் முன் பிரகடனப்படுத்துகிறார்.

மல்கமைத் தமது அமைப்பு தடை செய்துள்ளதாக நேஷன் ஒப் இஸ்லாமும் அறவிக்கிறது. மல்கமின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல், மல்கமை அழிப்பதற்காக அமெரிக்காவின் FBI உளவுப்படையுடன் கூட்டுச் சேர்கிறது நேஷன் ஒப் இஸ்லாம். இதற்கிடையில் மல்கமின் ஒவ்வொரு நடவடிக்கையும் FBI யினால் கண்காணிக்கப்படுகிறது. மல்கம் மக்காவிற்கு புனிதப்பயணம் மேற்கொள்ளும் போது FBI உளவாளிகள் அவருடன் சென்று அவரைக் கண்காணிக்கிறார்கள். அதனை மல்கம் பெற்றிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கிறார், “நான் போகுமிடமெல்லாம் இரண்டு வெள்ளையர்கள் என்னைப் பின் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறார்களென”.அடிமைத்தனம் மல்கமின் மனதை எவ்வளவு புண்படுத்தியுள்ளது என்பதனை அவர் கூறும் இந்தக் கருத்துக்கள் ஊடாக நாம் புரிந்து கொள்ளலாம்.

“இப்பொழுது நான் இதைச் சொன்னால் நீங்கள் திகைத்துப் போவீர்கள்! மக்காவில் நாங்கள் முஸ்லிம்களுடன் ஒரு கோப்பையில் உண்டோம், ஒரு கிளாஸில் குடித்தோம், ஒரு கடவுளை வழிபட்டோம். அவர்களுடைய கண்ணும் நீலமாக இருந்தது. அவர்களது தலைமயிர் பொன்னிறமாக இருந்தது. அவர்களுடைய தோலும் வெள்ளையாவே இருந்தது. ஆனால் நாங்கள் எல்லோரும் உண்மையான சகோதரர்களாக இருந்தோம். எல்லா நிறத்தவர்களும், எல்லா இனத்தவர்களும் ஒரே கடவுளையே, ஒரே மனிதத்துவத்தையே நம்புகின்றனர். நான் இனவாதியல்ல. எனக்கென்று எதுவும் வேண்டியதில்லை. ஆனால் எல்லா மக்களுக்கும், சுதந்திரம், நீதி, சமத்துவமான வாழ்க்கை, விடுதலை, மகிழ்ச்சி என்பன கிடைக்க வேண்டும். மனிதர்களை தோலின் நிறத்தை மட்டுமே வைத்து எடைபோடும் அமெரிக்க வெள்ளையர்களின் மனிதாபிமானமற்ற செயலுக்கு மாறாக அங்கிருந்த சூழ்நிலை காணப்பட்டது'' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

மல்கமைக் கொன்றொழிப்பதற்கான சதிவலைகள் வேகமாகப் பின்னப்பட்டுக் கொண்டிருக்கிறது. கொலை மிரட்டல்களும் விடுக்கப்படுகின்றன. அவரது வீட்டிற்குக் கூட குண்டு எறியப்படுகிறது. இதன் போது பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விக்கு இலிஜா மொஹமட்டின் கடினமான உத்தரவின் கீழ் நேஷன் ஒப் இஸ்லாம் தான் அதனைச் செய்துள்ளது, செய்தது கூட யாரென்று எனக்குத் தெரியுமென மல்கம் அடித்துக் கூறுகிறார். ஆனால் மல்கம் தனக்கான பிரபல்யத்துக்காக தானே இதனைச் செய்து விட்டு தம்மீது பழி போடுகிறாரென நேஷன் ஒப் இஸ்லாம் தெரிவிக்கிறது. மல்கமின் மெய்ப் பாதுகாவலர்களுக்குள் அவரை அழிப்பதற்காக நேஷன் ஒப் இஸ்லாமின் விசுவாசிகளும் சேர்ந்து கொள்கிறார்கள்.

அதன் பிறகு தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்ளும் மல்கமின் கடைசி நடவடிக்கைகள், எந்நேரமும் மல்கமை ஒழித்துக் கட்டுவதிலேயே குறியாகவுள்ள எதிரிகளால் கண்டு பிடிக்கப்படுகிறது. தனக்குப் பின்னால் துப்பாக்கிகள் துரத்திக் கொண்டிருக்கின்றன என்று தெரிந்தும், தன்னுடைய மக்களை ஏமாற்றக் கூடாதென நினைத்து மக்கள் முன் தோன்றி பேசும் பொழுது அவருடைய மனைவி, மகள்கள், அமைப்பில் உள்ளவர்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்படுகிறார்.

அமெரிக்க புலனாய்வுத்துறை எப்படி கறுப்பின விடுதலைக்காக அகிம்சை வழியில் போராடிய மார்ட்டின் லூதர் கிங்கை திட்டமிட்டுக்கொலை செய்ததோ, வேறு நாடுகளில் தமது தேச விடுதலைக்காகப் போராடியவர்களை எவ்வாறு சதிவலையில் வீழ்த்திக் கொன்றொழித்ததோ, அவர்களுடைய ஆளுமைகளை ஒடுக்கியதோ அதுபோலவே நேஷன் ஒப் இஸ்லாமைப் பகடைக்காயாக உருவாக்கி மல்கம் எக்ஸையும் திட்டமிட்டுக் கொலை செய்தது. மல்கத்தின் கொலைக்கு பின்புலமாக இருந்தது அமெரிக்கப் புலனாய்வுத்துறையான FBI .

மல்கம் நேஷன் ஒப் இஸ்லாமில் இணைந்ததன் பிறகே சிறிய அமைப்பாக இருந்த நேஷன் ஒப் இஸ்லாம் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக அமெரிக்காவில் தலைதூக்கியது. ஒவ்வொரு கறுப்பரையும் வெள்ளையர்கள் துன்புறுத்தும் போது தட்டிக் கேட்கும் மல்கத்தின் பின் கறுப்பின மக்கள் திரண்டனர். அவரை ஆதரித்தனர். ஒரு கட்டத்தில் மார்ட்டின் லூதர்கிங்கின் அகிம்சை வழியை விட, மல்கம் எக்ஸின் தீவிரத் தன்மையின் மேல் மக்கள் கவனம் செலுத்தத் தொடங்கினர். தீவிரமான இந்தத் தலைவரின் ஆணையின் கீழ் ஆபிரிக்க அமெரிக்கர்கள் எதனையும் செய்யத் தயாராக இருந்தனர். இந்தத் தீவிரத் தன்மை அமெரிக்க வரலாற்றிலேயே அவ்வளவு காலமும் இல்லாத ஒன்றாகவும் அமெரிக்காவின் தலையெழுத்தையே மாற்றக் கூடிய ஒன்றாகவும் இருந்தது.

மல்கத்தின் இந்த உறுதி, ஆளுமை, தன்னம்பிக்கை என்பன அவரின் தாயின் மூலமே ஏற்படுகின்றதென நான் நினைக்கிறேன். ஒரு கட்டத்தில் மல்கம் தனது தாயைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: ''எனது அம்மா கர்வமிக்க, படித்த, ஆளுமையுள்ள பெண். அவருடைய அம்மா வெள்ளையனால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதால் அவர் வெள்ளையாக இருந்தார். வெள்ளைத்தோலை வெறுத்த அவர் தனது பிள்ளைகள் கறுப்பாகப் பிறக்க வேண்டுமென விரும்பினார். எனது அப்பாவை அவர் திருமணம் செய்ததன் காரணமே அப்பா மிகவும் கறுப்பாக இருந்தார் என்பதே.'' இவ்வளவு ஆளுமையுடன் இருந்த மல்கத்தின் தாய் ஏர்ல் லிட்டிலின் படுகொலையின் பின் வெள்ளையர்களினால் மனநோயாளியாக்கப்பட்டு இறந்து போகிறார். அதன் பிறகு சகோதரர்கள் வெவ்வேறாகப் பிரிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இவ்வளவும் மல்கத்தின் கண் முன்னாலேயே நடைபெறுகின்றது.

‘புரட்சி என்பது இரத்தம் சிந்துவது, புரட்சி என்பது சமரசமற்றது. புரட்சி என்பது தனது பாதையில் எதிர்ப்படும் அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப் போடுவது’ என்று தான் கூறிய இந்தக் கருத்திற்கு ஏற்றவாறே இறுதிவரை தனது மக்களுக்காகப் போராடி, தனது மக்கள் முன்னாலேயே இரத்த வெள்ளத்தில் காவியமாகிப் போனான் இந்தக் கறுப்பு மனிதன்.


சரிநிகர்

மே - ஜீன், 2007




நேர்காணல் - சித்திக் பார்மக்



ஒசாமா மிகவும் அழகானதும் உருக்கமானதுமான படம். ஆனால் துன்பகரமானதும் கூட...

ஓம், அதற்காக நான் வருத்தம் அடைகிறேன். என்னுடைய நண்பர்களும் அதைப்பற்றிக் கூறினார்கள். கட்டாயம் அடுத்த தடவை ஒரு நகைச்சுவையான படத்தை எடுப்பேன்.

ஒசாமாவிற்கு திரைக்கதை வசனம் கூட நீங்களே எழுதியுள்ளீர்கள். இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்ற யோசனை உங்களுக்கு எப்பொழுது வந்தது?

நான் பாகிஸ்தானில் இருந்த போது, ஆப்கானிஸ்தான் சமூகத்தைப் பற்றிய நல்ல கதை ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தேன். அங்குள்ள சிறுவர்கள் றோட்டோரங்களில் வேலை பார்ப்பதைப் பற்றிய நிறையக் கதைகளையும் நான் கேள்விப்பட்டேன். ஆனால், இந்தப் படத்திற்கான கதை வந்தது “சகா” விலிருந்து, “சகா” பஸ்ரன் மொழியில், பாகிஸ்தானிலுள்ள பெஸவர் என்ற இடத்திலிருந்து வெளிவரும் ஒரு ஆப்கான் பத்திரிகை.

தலிபான்களின் ஆட்சிக் காலத்தில், இஸ்லாமிய மத நம்பிக்கைகளுக்கு விரோதமற்ற ஆனால் தலிபான்களால் தடைவிதிக்கப்பட்ட பாடசாலை செல்லும் ஒரு சிறுமி பற்றி அந்தப் பத்திரிகையில் விபரிக்கப்பட்டிருந்தது. அந்தச் சிறுமி தனது அழகான கூந்தலை வெட்டி, ஒரு சிறுவனைப் போல் உடையணிந்து மறைவிடத்திலுள்ள ஒரு பாடசாலைக்குச் செல்கிறாள். ஆனால் இந்த மறைவிடத்திலுள்ள பாடசாலையின் இரகசியம் வெளியாகிறது, அந்தப் பாடசாலையின் அதிபரும் தலிபான்களின் கலாசாரக் காவலர்களான அமர் பில் - மாறுப்பினால் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்படுகிறார். சிறுமியின் அடையாளமும் வெளிப்படுத்தப்படுகிறது.

அதுவொரு சின்னக் கதையாகத் தான் இருந்தது. ஆனால் நெருக்கடியினாலும், நிர்ப்பந்தங்களினாலும் அந்தச் சிறுமி, சிறுவனாக மாறியதையிட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். அதுவும் ஒரு வித பாசிசம் தான். உண்மையாகவே இத்தகையதொரு கதை தான் என்னுடைய படத்திற்குத் தேவையாயிருந்தது. அதன் பிறகு நான் திரைக்தையை எழுத ஆரம்பித்தேன், அதற்காக வேறு சில கதைகளையும் திரட்ட ஆரம்பித்தேன். ஆனால் அது சின்ன விடயமாக இருக்கவில்லை.

இப்போது நீங்கள் காபூலிலா இருக்கிறீர்கள்?

ஓம். ஆறு வருடங்கள் பாகிஸ்தானிலிருந்ததன் பிறகு நான் என்னுடைய குடும்பத்துடன், என்னுடைய அம்மா, அப்பா, மனைவி, இரண்டு மகள்கள், மகனுடன் காபூலில் வசித்துக் கொண்டிருக்கிறேன்.

திரும்பவும் உங்களின் வீட்டிற்குப் போக அனுமதியளித்த போது எப்படி உணர்ந்தீர்கள்?

அது ஒரு சிறப்பான உணர்வாக இருந்தது. நான் மீள்பிறவி எடுத்த மாதிரி இருந்தது. என்னால் ஒருபோதும் பனிப்பொழிவை மறக்க முடியவில்லை. பனிப் பொழிவுடனான ஆப்கானிஸ்தானின் இந்தக் காட்சியை நான் விரும்புகிறேன். அது கடவுள் நல்வரவு கூறுவது போல் இருந்தது.

நீங்கள் பாகிஸ்தானில் இருந்தபோது உங்கள் படங்களிற் பலவற்றை தலிபான்கள் அழித்தனர். அவற்றை உங்களால் மீளவும் பெற முடிந்ததா? அவற்றுக்கு என்ன நடந்தது?

என்னுடைய படங்கள் மட்டுமல்ல. மற்றைய இயக்குனர்களின் படங்களும் அழிக்கப்பட்டு விட்டன. தலிபான்கள் என்னுடைய வீட்டைச் சோதனையிட்ட போது என்னுடைய 8 மி.மீ கமெராக்கள், புகைப்படங்கள், புரஜெக்டர்கள், எல்லாவற்றையும் அழித்து விட்டனர். பர்மியனிலுள்ள புத்தர் சிலையை அடித்து நொறுக்கியது மட்டுமல்லாமல், தேசிய கலைக்கூடம், தேசிய திரைப்படச் சுவடிக்கூடம், வானொலி கலைக்கூடம் ஆகியவற்றையும் தலைவர் முல்லா ஒமரின் கட்டளைப்படி அவர்கள் அழித்தொழித்தனர்.

உண்மையில் அவர்கள் திரைப்படச் சுவடிக் கூடத்திலிருந்தே தாக்குதலை ஆரம்பித்தார்கள். அதிர்ஷ்டவசமாக ஆப்கான் திரைப்படக் கல்லூரியிலிருந்த நல்ல இதயம் கொண்ட நண்பர்கள் சிலர் முக்கிய கட்டிடத்தின் கதவைப் பூட்டி, மூலப் பிரதிகளைத் தரைச்சட்டங்களுக்குக் கீழும், இருட்டறைகளிலும், கூரையின் மேலும், திரைகளுக்குப் பின்னாலுமென எல்லா மறைவிடங்களிலும் ஒளித்து வைக்க ரம்பித்தனர். அவர்கள் மின்சாரத்தையும் துண்டித்து விட்டதால் அந்தத் திரைப்படக் கூடம் முழுவதும் இருட்டாக இருந்தது.

தலிபான்களுக்கு அந்தக் கட்டிடத்தின் அமைப்புத் தெரிந்திருக்கவில்லை. ஆகவே மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் கட்டிடத்திற்கு வெளியே இருந்த சில பிரதிகளை அவர்கள் கண்டு பிடித்து விட்டனர். அவற்றுள் ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான், ஈரான், அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வந்த பல சிறந்த திரைப்படங்களும் இருந்தன. இரண்டு அல்லது மூன்று பிரிட்டனிலிருந்து வந்தவை. அண்ணளவாக அங்கிருந்த 2600 திரைப்படங்களை தலிபான்கள் எரித்தனர். அந்த இடத்தில் தான் நாங்கள் சுவடிக் கூடத்திற்கான புதிய கட்டிடம் ஒன்றை அமைக்க இருந்தோம். உண்மையிலேயே அது ஒரு பெரிய அனர்த்தமாகும்.

ஆப்கானிஸ்தானில் திரைப்படங்களின் தற்போதைய நிலை என்ன?

பாகிஸ்தான், லாகூரைச் சுற்றி 134 தியேட்டர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆப்கானிஸ்தானில் 1978 இற்குப் பிறகு எல்லாமாக 25 தியேட்டர்கள் இருந்தன. அதில் 18 காபூலில் இருந்தது. இதிற் பல யுத்தத்தில் அழிந்து விட்டன.

சினிமா குறித்து சொல்வதானால், நாங்கள் உண்மையாகவே ஆக்கநிலையில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு, நான் அரசாங்கத்தின் எந்த விதமான உதவியும் இல்லாமல் ஒசாமாவை எடுத்துள்ளேன். ஆப்கான் சினிமா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு முதலீட்டைப் பெற்று என்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து செயற்பட்டது நல்ல அனுபவமாகவும் இருந்தது. ஆனால் எல்லா அரசாங்கங்களும் கட்டாயம் தங்களுடைய திரைப்பட நிறுவனங்களுக்கு உதவித்தொகையளித்து ஆதரவளிக்க வேண்டும். அவ்வகையான ஒரு சமூகம் உருவாகினால் திரைப்பட இயக்குனர்களுக்கும் சுதந்திரம் கிடைக்கும். நாங்கள் இப்போது அதனையே செய்ய ஆரம்பித்திருக்கிறோம்.

நீங்கள் ஆப்கான் சிறுவர்களின் கல்விச் செயற்பாட்டாளராகவும் இருக்கிறீர்களே...

பிரபல ஈரான் திரைப்பட நெறியாளரான மொக்சென் மக்மல்பவ் கூட ஆப்கானின் நல்ல நண்பனாக இருக்கிறார். அவர் தன்னுடைய கந்தகார் படத்தை உருவாக்கிய பிறகு செப்ரெம்பர் 11 க்கு முன்னர், ஈரானிய எல்லையிலுள்ள அகதிச் சிறுவர்களுக்கு ஆப்கானிய சிறுவர் கல்வி இயக்கத்தினூடாக கல்வி புகட்ட வேண்டுமென்று தீர்மானித்தார். ஆப்கானியச் சிறுவர்கள் கல்வி கற்க அனுமதிக்கக் கூடியவாறு ஈரானிய அரசாங்கம் ஒரு விசேட சட்டத்தை அமுலாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சிறுமிகள் உட்பட, நடிப்பாற்றலுள்ள பல சிறுவர்களை பாடசாலைகளிலிருந்தும், சிறுவர் இல்லங்களிலிருந்தும், தெருவோரங்களில் இருந்தும் நாங்கள் கண்டு பிடித்தோம். ஒசாமாவில் நடித்த பல நடிகர்கள் நிஜவாழ்க்கையில் தெருவோரச் சிறுவர்களாக இருந்தவர்கள். இந்த தெருவோரச் சிறுவர்களிலிருந்து சிறந்த திரைப்பட இயக்குனர்களை உருவாக்க முடியுமென்ற நம்பிக்கையும் எனக்கிருந்தது. அவர்களுடைய எண்ணப்படி விவரணப் படங்களையும், குறுந்திரைப் படங்களையும் தயாரிப்பதற்கு நாங்கள் அவர்களுக்குக் கற்பிக்க முயன்றோம். அதற்கான வேறு சில வசதிகளையும் செய்து கொடுத்தோம்.

தொலைக்காட்சியோ, திரைப்படங்களோ இல்லாத நாடொன்றில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுவர்கள் ஒசாமாவில் தங்களை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளது ஒரு வித்தியாசமான அனுபவமல்லவா?

மக்கள் தாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தச் சூழலில் தங்களுக்குள்ளே வைத்திருக்கும் வலிகளையும், ஞாபகங்களையும், அனுபவங்களையும் இப்பொழுது வெளிப்படுத்த விரும்புகிறார்கள். இந்த அழிவுகளின் உண்மையின் பெரும் பகுதியாக சிறுவர்கள்தான் இருக்கிறார்களென நான் அபிப்பிராயப்படுகிறேன். அவர்களுக்கு அவர்களுடைய அனுபவங்களும் இருக்கின்றன. ஒசாமாவில் அவர்கள் அவற்றை வெளிப்படுத்தியிருப்பதைப் பாருங்கள். அவர்கள் தங்களுக்குள் பெருமளவு விவாதங்களை உருவாக்கியிருக்கிறார்கள். ஆப்கானிய மக்கள் இசை, ஆடுதல், பாடுதல் போன்ற களியாட்டங்களில் விருப்பமானவர்களாக இருக்கிறார்கள். இது எங்களுடைய கலாசாரத்தின் ஒரு பகுதி.

என்னுடைய புரிதல் என்னவென்றால் இவையெல்லாம் இஸ்லாமுக்கு எதிரானவை அல்ல என்பது தான். மேற்கத்தைய ஊடகங்கள் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற சொற் பிரயோகத்தைப் பயன்படுத்துவதையிட்டு நான் வருத்தமடைகிறேன். மூடநம்பிக்கை மூடநம்பிக்கை தான். ஒவ்வொரு மதத்திலும், ஒவ்வொரு கலாசாரத்திலும், ஜனநாயக கலாசாரத்திலும் கூட இந்த மாதிரியான பிரச்சினைகளை நீங்கள் காண்பீர்கள்.

அடுத்த திரைப்படத்தை தயாரிக்கும் எண்ணம் உள்ளதா?

அரபி, துருக்கி, பார்ஸி போன்ற மிகப்பெரிய இலக்கியச் செழுமை மிக்க மொழிகள் உள்ள நாடுகள் ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளாக உள்ளன. ஆனால் உண்மையாகவே உருது மொழி கவித்துமானது. ஆப்கானிஸ்தானுக்கு மொஹமட் இக்பால் முன்னுதாரணம் கொண்ட கவிஞர். சந்தர்ப்பம் வாய்த்தால் ஒருநாள் அவருடைய நல்ல கவிதையில் ஒன்றைத் திரைப் படமாக்குவேன்.

ஒசாமாவில், அதிகளவு நம்பிக்கையின்மையையும், அதிகளவு சந்தோசமின்மையையும் காட்ட வேண்டுமென்ற தேவை எனக்கிருந்தது. அடுத்த தடவை, இன்னொரு விதமான உண்மை நிலையினைப் படமாக்க வேண்டும், அதுவொரு துன்பம் கலந்த நகைச்சுவையாகவும் இருக்கலாம். திரும்பவும் நான் சிறுவர்களுடன் வேலை செய்வேன், ஆனாலும் அடுத்த தடவை வயதானவர்களுடன் எனக்கு வேலை செய்ய வேண்டி இருக்கிறது. ஏனெனில் அவர்கள் பல தவறுகளை மேற்கொள்கிறார்கள். அவற்றுட் சிலவற்றை நான் சொல்ல வேண்டியிருக்கிறது.

படத்தின் கடைசியில் பெண்கள் எல்லோரும் ஏதோவொரு பெரிய சிறைக்குள் இருப்பது போன்ற குறியீடு காட்டப்படுகிறது. அவை வரலாற்று ரீதியாக ஆண்களுக்கும், பெண்களுக்குமிடையிலான ஏற்றத்தாழ்வையே காட்டுகிறது... ...

ஜனநாயக சமூதாயத்தில் கூட, மக்கள் ஆண், பெண் என்று இரு பிரிவாகவே சிந்திக்கின்றனர். அது இன்னதென்று இனம் புரியாத ஆணுக்கும் பெண்ணுக்குமான உள்ளுறைந்த பிரச்சினை. கீழைத்தேச சமுதாயத்தில் அது கூடுதலாகத் தெரிகிறது, ஆனால் எல்லா இடங்களிலும் அது இருக்கிறது. ஆண்கள் அதிகளவில் ஆணவம் கொண்டவர்கள். சமுதாயத்தில் தங்களுக்கு இருக்கும் இடத்தைப் பெண்கள் பறித்து விடுவார்களோ என்று ஆண்கள் பயப்படுகிறார்கள்.
இன்று காபூ
லிலும், பெண்களுடைய சொந்த பெண்ணிய நிறுவனங்கள், காரியாலயங்கள், அவர்களுடைய சொந்த அரசியற்கட்சி, பெண்களுக்கு மட்டுமேயான வானொலி நிலையம் போன்றவற்றை நீங்கள் பார்க்கலாம். ஆண்களுக்கு அந்தக் கதவு மூடப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக இது ஒருவித சிக்கலாகவும் இருக்கலாம்.

இந்த அபிவிருத்திகள் கூட ஒரு சாதகமான முன்னேற்றமே. ஆனால் கட்டாயம் காபூல் மட்டுமே ஆப்கானிஸ்தான் அல்ல என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள். கீழுள்ள சின்னக் கிராமங்கள் உட்பட எல்லா இடங்களிலும் பெண்களுக்கான செயற் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். ஆயினும் அவர்கள் இன்னமும் பல பிரச்சினைகளை எதிர் கொண்டாவாறே இருக்கிறார்கள்.

அங்கேயுள்ளவர்கள் விதவைகள், தங்களுடைய சகோதரர்களை, கணவன்மாரை, தந்தைமாரை இழந்தவர்கள். அவர்கள் எல்லோரும் அனாதைகள். ஒரு வேலையோ, வசதி வாய்ப்புக்களோ, அடிப்படையான பொருட்களோ கூட அவர்களிடம் இல்லை. அவர்கள் வசிப்பிடங்கள் இல்லாமையால் தெருவோரங்களில் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளவர்கள். ஆனால் அது கூடப் போதுமானதல்ல. மனித ஆன்மாவைத் திருப்பிக் கட்டியெழுப்புவது மிகவும் கடினமானது. அதற்காக நாங்கள் எதனை உருவாக்கிக் கொண்டிருக்கிறோமென நான் யோசிக்கிறேன், இதன் பலன்களை அடுத்த தலைமுறையில் மட்டும் தான் நாங்கள் பார்க்கலாம். அது அடுத்த தலைமுறைக்குப் பின்பாகவும் இருக்கலாம்.

சரிநிகர்

மார்ச் - ஏப்ரல், 2007







ஒசாமா: ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு பொறி!




“நாங்கள் பசியுடன் இருக்கிறோம்”

“எங்களுக்கு வேலை கொடுங்கள்”

“எங்களுக்கென்று அரசியல் இல்லை’’

“நாங்கள் விதவைகள்”

யார் இந்தப் பெண்கள். இவர் களின் குரல்கள் உங்கள் காதுகளில் விழுகிறதா? இந்தத் தேசத்திலுள்ள அடக்கி ஒடுக்கப்பட்ட ஒட்டு மொத்தமான பெண்களின் குரல்களாக இவை உங்களுக்குத் தெரியவில்லையா? சம்பவங்களின் சூழ்ச்சியினால், தேசத்தின் காவலர்களால் கணவன்மாரை இழந்த, மகன்மாரை இழந்த, சகோதரர்களை இழந்த பெண்களின் ஒட்டுமொத்த குரல்கள் அல்லவா இவை.

இந்தக் குரல்கள் தான் அடக்கு முறைக்குள்ளாகியுள்ள தேசமெங்கும் இப்பொழுது ஒலித்துக் கொண்டிருக்கிறது. சொல்லவொணாத் துன்பங்களை மனதோடு பூட்டி வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த அப்பாவிப் பெண்களை நாம் என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? மறைமுகமாக ஒலித்துக் கொண்டிருந்த இந்தக் குரல்களை வெளியுலகிற்குக் கொண்டு வர நாம் முனைந்திருக்கிறோமா? ஆனால் தனது நாட்டுப் பெண்களின் அவலத்தை ஒசாமா எனும் திரைப்படத்தினூடாக, வெளியுலகிற்குக் கொண்டு வந்து எமது கண்முன் நிறுத்தியுள்ளார் இயக்குனர் சித்திக் பார்மக்.

1962இல் ஆப்கானிஸ்தானில் பிறந்த சித்திக் பார்மக், மொஸ்கோ திரைப்படக் கல்லூரியில் திரைப்படத் துறையில் முதுமாணிப் பட்டம் பெற்றவர். புதிய அரசு உருவாக்கப்பட்ட பின்னர் 1992இலிருந்து 1996வரை ஆப்கானிஸ்தான் திரைப்பட நிறுவனத்தில் முகாமையாளராகக் கடமையாற்றியவர். தலிபான்களின் ஆட்சியில் இவருடைய படங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டிருந்தன. இவருடைய நான்காவது திரைப் படமான ஒசாமா 2003ஆம் ஆண்டு வெளி வந்தது. தலிபான்களின் ஆட்சியில் ஆப்கானிய மக்களுக்கு இழைக்கப்பட்ட குறிப்பாக பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் உண்மைக் கதைகளைக் கூறுவதாக இந்தப் படம் அமைந்துள்ளது. 1996ஆம் ஆண்டு ஆப்கானின் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் 2001ஆம் ஆண்டு வரை கொடுங்கோல் ஆட்சியை நடத்தினர். இங்கு கட்டாய பர்தா அணிதல், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது, வேலைக்குச் செல்லக் கூடாது. களியாட்டங்கள் எதிலும் ஈடுபடக் கூடாது போன்ற பல கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தனர். அதன்படி நடந்து கொள்ளாதவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. திரைப்படங்கள் எடுப்பதற்குக் கூட தடை விதிக்கப்பட்டிருந்து. இந்தத் தடையையும் தாண்டி காபூல் நகர வீதியெங்கும் ஒசாமாவை உலாவ விட்டிருக்கின்றார் இயக்குனர் சித்திக் பார்மக். தலிபான்களைப் பற்றி எடுக்கப்பட்ட முதல் திரைப் படமும் இதுவாகும்.

படத்தின் ஆரம்பமே பெண் களின் மீதான தலிபான்களின் வன்முறைகளை எடுத்துக் காட்டுகிறது. நீதி கேட்டுப் போராட்டம் நடத்தும் பெண்கள் துப்பாக்கியால் சுடப்பட்டும், தண்ணீரைப் பாய்ச்சியும் கலைக்கப்படுகின்றனர். சிதறியோடும் பெண்கள் கூட்டத்திலிருந்து தலிபான்களிடம் அகப்படும் பெண்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதைக் காட்டும் சித்திக், பின்னர் அதனைப் படம் பிடித்துக் கொண்டிருக்கும் வெளிநாட்டுக்காரரைத் தாக்கி கமெராவைப் பறிப்பதோடு தனது கமெராவை எமக்கு முன் நகர்த்துகிறார்.

பதின்ம வயதுச் சிறுமி, தாய், தாயின் தாய் என மூன்று தலை முறைப் பெண்களைப் பின்னிப் பிணைந்ததாக இந்தத் கதை பின்னப்பட்டுள்ளது. போரில் தனது கணவனையும், சகோதர னையும் பலி கொடுத்த ஆண் துணையற்ற இந்தக் குடும்பத்தில் பட்டினிச்சாவு மட்டுமே முடிவு என்றாகின்றது. வைத்திய சாலையில் செய்து வந்த வேலையும் பெண்கள் வேலை செய்யக் கூடாது என்ற தலிபான்களின் கடுமையான உத்தரவின் பேரில் பறிபோக, செய்வதறி யாது புலம்பும் அந்தத் தாயின் நிலை மனதைப் பிசைகிறது. இறுதியில் தனது மகளை ஒரு ஆணாக வேசமிட்டு வேலைக்கு அனுப்புவது என முடிவெடுக்கிறாள் அவள். தலைமயிர் வெட்டப்பட்டு, தனது கணவனின் ஆடைகளை தனது மகளுக்கு அணிவிக்கிறாள். தலிபான்களுக்குத் தெரிந்தால் தன்னைக் கொன்று விடுவார்கள் என்ற பேத்தியின் அச்சத்தை கதைகளைச் சொல்லித் தேற்றுகிறாள் பாட்டி. அவளுக்கு ஒசாமா என்று பெயரும் வைக்கப்படுகிறது.

இந்த இடத்தில் ஒரு சின்னப் பெண்ணின் கண்களில் தெரியும் பயம், சுற்றியிருப்ப தெல்லாம் தலிபான்களாகத் தென்படும் அச்சம் என்பவற்றை மிகத் தத்ரூபமாக வெளிக்கொண்டு வந்துள்ளார் சித்திக். ஒவ்வொரு நிமிடமும் தலிபான்களிடம் அவள் அகப்பட்டுவிடுவாளோ என் கின்ற அச்சம் எம்மையும் தொற்றி எம்மை இருக்கையின் விளிம்புக்குக் கொண்டு வந்து விடுகிறது. அதற்கு மரினா கொல்பகரியின் அற்புதமான நடிப்பே காரணம்.

அடுத்த நாள் தனது கணவனின் நண்பனிடம் உண்மையைச் சொல்லி மகளை வேலைக்குச் சேர்த்து விடுகிறாள் தாய். அதன் பின்னரான அந்தச் சிறுமியின் எந்தவொரு செயலிலும், எங்கே தன்னைத் தலிபான்கள் அவதானித்து விடுவார்களோ, தன்னைக் கொன்று விடுவார்களோ என்ற பதற்றம் காணப்படுகிறது. தொழுகைக்குப் போகச் சொல்லி தலிபான்களிடம் இருந்து வரும் உத்தரவின் பேரில் தொழுகைக்குச் செல்லும் அவள் செய்ய வேண்டிய தொழுகைக்கான கடமைகளை தவறாகச் செய்வதை தலிபான் ஒருவன் அவதானிக்கிறான். இதனால் மற்றச் சிறுவர்களுடன் சேர்த்து தலிபான்களால் கட்டாயமாக மதரசாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறாள்.

மதரசாவில் இவர்களுக்கு மத போதனைகளுடன், சுகாதாரமாக இருத்தல் பற்றியும் கற்பிக்கப்படுகிறது. எஸ்பன்டி என்ற சிறுவனைத் தவிர மற்றச் சிறுவர்களுக்கு அவள் ஒரு சிறுமி என்பது தெரியாது. ஆனால் இவளினுடைய செயல்களை வைத்தும், குரலை வைத்தும் பெண் என்பதனைக் கண்டு பிடித்து விடுகிறார்கள். ஆனால் எஸ்பன்டி அவளை ஆண் என நிரூபிக்கக் கடும் பிரயத்தனப்படுகிறான். ஒசாமாவை மரத்தில் ஏறிக் காட்டுமாறு கூறுகிறான். அவளும் மரத்தில் ஏறுகிறாள். பின் இறங்க முடியாமல் தவிக்கும் அவளைத் தலிபான்கள் இறக்கி, தண்டனையாகக் கிணற்றுக்குள் கட்டித் தொங்க விடுகிறார்கள். அந்த அதிர்ச்சியில் அவள் பருவம் அடைந்து விடுகிறாள். மதகுருவான முல்லாசாஹிப் அதனைக் கண்டு விடுகிறார். அவள் பெண்ணென நிரூபிக்கப் பட்டு தலிபான்களின் சிறையில் அடைக்கப்படுகிறாள்.

அதன் பின்னர் தண்டனைக்குரியவர்களுக்கு ஆண்களின் முன்னிலையில் வழக்கு நடக்கிறது. பெண்களின் போராட்டத்தை படம் பிடித்த வெளிநாட்டுக்காரர் உளவாளி என்று கூறிச் சுட்டுக் கொல்லப்படுகிறார். தலிபான்களின் ஆட்சியில் வைத்தியசாலையில் வேலை செய்ததற்காக வெளிநாட்டுக்காரர் என்றாலும் பெண் என்ற காரணத்திற்காக பெண் வைத்தியர் உயிருடன் மண்ணிற்குள் புதைக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். போராட்டத்தில் ஈடுபட்ட வேறும் சில பெண்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. ஒசாமாவிற்கு தண்டனையாக அல்லாவின் பெயரினாலும், மதத்தின் புனிதத்தைக் கட்டிக் காப்பதற்காகவும் மன்னிப்பு வழங்கி மதரஸாவை நடத்தும் வயது போன கிழவனான முல்லா சாஹிப்புக்கு தலிபான்களால் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. ஒரு சிறுமிக்கு இதை விடப் பெரிய தண்டனை என்னவாக இருக்கும்?

சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வரும் கிழவன் அவளை உள்ளே விட்டு வெளியில் பெரிய பூட்டாகப் போட்டுப் பூட்டி விட்டுச் செல்கிறான். பூட்டப்பட்ட வீட்டிற்குள் தலிபான்களால் இந்தக் கிழவனுக்கு தானம் கொடுக்கப்பட்டு வாழ்க்கை சீரழிக்கப்பட்ட பல பெண்கள் காட்டப் படுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தாம் எப்படி இங்கு கொண்டு வரப்பட்டோம், எப்படிச் சகிப்புத் தன்மையுடன் வாழ்கிறோம் என்றெல்லாம் சிறுமியிடம் கூறுகிறார்கள்.

தலிபான்கள் எங்களுடைய வீடுகளை. எங்களுடைய காணிகளை, எங்களுடைய தோட்டங்களை எரித்து விட்டார்கள். எங்களுக்கென்று ஒன்றுமில்லை. அவர்கள் எங்களைக் கைது செய்து இந்த முல்லா விற்குத் திருமணம் செய்து வைத்து விட்டனர். எமது வாழ்க்கையைப் பாழாக்கி விட்டனர். எமக்கு வாழ்வதற்கென்று அங்கே ஒன்றுமில்லை. நாங்கள் இந்த முல்லாவை வெறுக்கிறோம். எங்களுடைய இளமையை, எங்களுடைய வாழ்க்கையை இந்தக் கொடியவன் பாழாக்கி விட்டான். ஆனால் எங்களால் என்ன செய்ய முடியும்? நாங்கள் அகதிகள். ஆனால் சேற்றிலிருந்து செந்தாமரை என்று சொல்வார்களே அது போல் சிறுவன் எஸ்பன்டி யைக் கூறலாம். இங்கு அவனை மட்டுமே மனித ஆத்மாவாக சித்திரித்துள்ளார் சித்திக். பெண்கள் போராட்டத்தை தலிபான்கள் சிதறடிக்கும் போது அவன் உண்மையாகவே அழுது, புலம்புகிறான். ஒஸாமா ஆணாக வேடமிட்ட ஒரு சிறுமி என்பது அவனுக்குத் தெரியுமாயினும் அவளைக் காட்டிக் கொடுக்காமல் அவளுக்குப் பக்கபலமாக நிற்கிறான். சிறுமி தலிபான்களிடம் பிடிபடும் பொழுது தனது கையாலாகாத்தனத்தையிட்டு வருந்துகிறான். சிறுவர்கள் புனிதமானவர்கள், கள்ளங்கபட மற்றவர்கள். அவர்கள் ஆண், பெண், சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்தவர்கள். அவர்களின் உலகம் மிகப் பரந்தது. பெரியவர்களாகிய நாம் தான் அவர்களை மீளவே முடியாத பாதாளத்தில் தள்ளி விடுகிறோம் என்கிற எண்ணத்தை சித்திக் பார்மக் எங்களில் எழ வைத்து விடுகிறார்.

அது மட்டுமல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரினதும் ஆன்மாவையும் தட்டி எழுப்பி, பலமிழந்த பெண்களின் பலமுள்ள ஆன்மாவாக தன்னை நிலை நிறுத்தி, கலாசாரம் என்ற பெயரில் அடிமைத்தனத்தைக் கட்டிக் காப்பவர்களையும், மூடநம்பிக்கைகளுக்கு ஆட் பட்டுப் போனவர்களையும் நோக்கித் தனது கேள்விகளை எழுப்புகிறார் சித்திக். எங்களுடைய கலாசாரத்தின் பேரிலான அடிமைத்தனங்களும், மூட நம்பிக்கைகளும் கூட பெண்களுக்கு மட்டும்தான். ஆண்களுக்கு அது கிஞ்சித்தும் கிடையாது என்பது வேறு விடயம். தங்களுக்குரிய விலையுயர்ந்த அஃறிணைப் பொருட்களைப் பத்திரமாகப் பூட்டி வைப்பது போல், உயிருள்ள பெண்களைத் தனது காம இச்சைகளுக்கு மட்டுமேயாகப் பூட்டி வைக்கும் கிழவன் முல்லாவின் தந்திரம், தற்போது பல வீடுகளில் நடந்து கொண்டிருக்கும் ஒன்று. அவரவர்களின் வீடுகளைத் திறந்து பார்த்தால் தான் தெரியும் அப்பாவிப் பெண்களின் அவல வாழ்க்கை.

சரிநிகர்

மர்ச் - ஏப்ரல், 2007



















கலர் பேர்ப்பிள்: எனது பிள்ளைகளா? எனது சகோதரர்களா?







உலகத்திலுள்ள பெண்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் அடக்கியாளப்படுகிறார்கள். இந்த ஒரு விடயத்தில் மட்டும் தான் போலும் இன,மத,சாதி,வர்க்க,மொழி வேறுபாடில்லாமல் ஒடுக்குமுறையாளர்கள் எல்லோரும் இணைந்திருப்பது. நீண்ட காலமாகவே பெண்களை அடிமைகளாகவும், கீழானவர்களாகவும் வைத்திருந்தமை மனிதகுல வரலாற்றின் இருண்ட பக்கமாகவே இருந்து வருகிறது. அந்த இருண்ட பக்கத்தின் மீது சில ஒளிக்கீற்றுகளையாவது பாய்ச்ச முயன்று வருகிறார்கள் பிரக்ஞைபூர்வமான சில படைப்பாளிகளும் கலைஞர்களும்.

கறுப்பின மக்கள் மீதான ஒடுக்குமுறையும், ஏவப்பட்ட போர்களும் மூட்டி விடப்பட்ட உள்நாட்டுக் கலவரங்களும், அதன் விளைவான வறுமை, பட்டினி, சுகாதாரக் கேடு என்று அவர்கள் பட்டுக் கொண்டிருக்கும் இன்னல்களை வார்த்தைகளில் வடித்துவிட முடியாது. அதிலும் கறுப்பின மக்கள், அவர்களின் நிறத்தின் காரணமாகவே மற்றவர்களினால் அடக்கி ஒடுக்கப்படுவது துன்பகரமானது. வெள்ளையர்களின் அகராதியில் கறுப்பினப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவது ஒரு குற்றமாகவே கருதப்படவில்லை. மாறாகத் தமது உடமையின் மீதான உரிமையாகவே அது கொள்ளப்படுகிறது. ஒடுக்கப்படும் மக்கள் கூட்டத்தில் உள்ள பெண்கள் ஒடுக்குபவரின் சொத்தாகக் கொள்ளப்படுவது வரலாற்றிற்கு ஒன்றும் புதிதில்லை. மன்னர்களுக்கிடையிலான போர் முதல் இன்றைய தேசியவாதப் போர்கள் வரை இவற்றிற்கு நிறைய உதாரணங்கள் உண்டு.


ஆனால் அண்மைக்காலத்தில் இவை பற்றிச் சிறிதளவாவது பேசப்படும் சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதுவும் ஒடுக்கப்படும் பெண்ணின் நலனில் இருந்து என்பதற்கப்பால் எதிரியை அம்பலப்படுத்த உதவும் ஒரு கருவியாகவே அதிகமும் பாவிக்கப்படுகிறது. ஆனால் தமது இனத்துக்குள்ளேயோ, அல்லது தமது மதக்குழுக்களுக்குள்ளேயோ, தமது குழுமத்துக்குள்ளேயோ, சாதிக்குள்ளேயோ, குடும்பத்துக்குள்ளேயோ தமது ஆண்களால் நிகழ்த்தப்படும் வன்முறை பற்றி பேசப்படுவதேயில்லை. அதற்கும் காரணம் அதே அரசியல் தான். அதாவது இவற்றைப் பேசுவது எதிரிக்குச் சாதகமாக அமைந்து விடும். நமது பக்கத்தைப் பலவீனப்படுத்தி விடும் என்பது தான்.

குடும்பத்தில் பெண் மீது நிகழ்த்தப்படும் வன்முறை மற்றெல்லா வன்முறையை விடவும் மாறுபட்டதாயிருக்கிறது. அதன் பிரதான அம்சமே அது வன்முறையாகவோ அல்லது பெண்ணின் சுயம் மீதான அத்துமீறலாகவோ கொள்ளப்படுவதில்லை என்பது தான். கூடவே அந்த ஒடுக்குமுறை பெண்ணின் ஆளுமை விருத்திக்குத் தடையாக அமைந்துவிடுவதும் கவனத்திற் கொள்ளத்தக்கது.

இவ்வாறு குடும்பத்தில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை கதைத்தளமாகக் கொண்டு அலிஸ் வாக்கர் எனும் கறுப்பினப் பெண்ணால் எழுதப்பட்டதே கலர் பேர்ப்பிள் என்கிற நாவல். புலிட்சர் பரிசு வென்ற இந்நாவல் 1909இல் இருந்து 1947ஆம் ஆண்டுவரை ஜோர்ஜியாவில் வாழ்ந்து வந்த கறுப்பினப் பெண்களைப் பற்றியது.

ஜோர்ஜியாவில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த அலிஸ் வாக்கர் ஆரம்பகாலத்தில் கவிதை, சிறுகதை போன்றவற்றை எழுதுவதில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். இவர் எழுத்தாளராக மட்டுமன்றி பெண்ணியம், பொருளாதார சமத்துவம், சூழலியல் என்பவற்றிற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். 1968ஆம் ஆண்டு இவருடைய கவிதைகள் நூலாக வெளிவந்தன. இவருடைய கவிதைகளும், சிறுகதைகளும் சமுதாயத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியற் கொடுமைகள், வன்முறைகள், தனிமை, இனவேற்றுமை, ஒருபாலின உறவுமுறை, ஆபிரிக்காவில் நடைபெறும் சடங்குமுறையான பெண்களின் பிறப்புறுப்பின் கிளிடோரிஸ் (Clitoris) சேதப்படுத்தப்படுதல் போன்றவற்றைப் பற்றிப் பேசுபவையாக இருந்தன. 1982இல் வெளிவந்த கலர் பேர்ப்பிள் நாவல் அலிஸ் வாக்கரை உலகறியச் செய்தது மட்டுமல்லாது, ஆண்களைப் பற்றிக் கடுமையாக எழுதியிருந்தார் என்று விமர்சிக்கவும் வைத்தது.

எனினும் அலிஸ்வாக்கரின் கலர் பேர்ப்பிள் நாவல் பெண் எழுத்திற்கான உதாரணமாக விமர்சகர்களால் சுட்டப்பட்டது. பெண்ணினால் எழுதப்பட்டது என்ற காரணத்திற்காக அல்ல, பெண் எழுத்துக்கான மரபையும் தொடர்ச்சியையும் அது அடையாளம் காட்டியது என்பதால். கதை சொல்லும் முறைமையிலும், அது எழுப்பிய குரலிலும், முன்வைத்த பிரச்சினைகளிலும் அது பெண் எழுத்தை அடையாளப்படுத்தியது என்பதால் அது பெண் எழுத்திற்கான அடையாளமாக மாறிற்று.

இவ்வகையான ஒடுக்குமுறைக்குள்ளாகும் பெண்களின் பிரச்சினைகளை எந்தவிதமான அச்சமுமில்லாமல் வெளிக்கொணர்ந்து சர்ச்சைக்குள்ளான அலிஸ் வாக்கரின் கலர்ப் பேர்ப்பிள் நாவலை ஸ்ரிபன் ஸ்பீல்பெர்க் 1985இல் நெறியாள்கை செய்து திரைப்படமாக எம் முன் வைத்துள்ளார். இத்திரைப்படத்தில் கதை சொல்லியின் வாயிலாகவே கதை நகர்கிறது. தனிப்பட்ட ஒருவர் மீதான பாலியல் ஒடுக்குமுறையை சமூக அரசியலின் அக்கறைக்குரிய பொருளாக முன் வைக்கும் ஒருவரை கதைசொல்லியாகப் படைத்ததன் மூலம் ஸ்ரிபன் ஸ்பீல்பெர்க் வெற்றி பெற்றுள்ளார். இதில் சீலி என்னும் பெண் பாத்திரம் கதைசொல்லியாகப் படைக்கப்பட்டுள்ளது. நாவலின் தன்மை கெடாமல் திரைப்படத்தில் சீலியை நம்முன் நிறுத்தியதன் மூலம் ஸ்பீல்பெர்க் தன்னை ஒரு சிறந்த நெறியாளராக நிறுவிக் கொண்டுள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் நாம் நான்கு பெண்களைக் குறிப்பிட்டேயாக வேண்டும். சீலி, சீலியின் தங்கை நிட்டி, சோபியா, பாடகியாக வரும் ஷக். சீலியும் நிட்டியும் சகோதரிகள். தாய் இறந்ததும் பதின்நான்கு வயதான சீலி தனது வளர்ப்புத் தந்தையினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு இரு முறை கர்ப்பமுறுகிறாள். இதன் காரணமாக இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாகிறாள். அந்த இரண்டு பிள்ளைகளையும் சீலியின் தகப்பன் ஆபிரிக்காவில் வாழ்ந்து வரும் ஒரு மிசனறிக் குடும்பத்திற்கு விற்று விடுகிறான். சீலியின் தங்கை நிட்டியின் மேல் மனைவியை இழந்த நடுத்தர வயதுக்காரனான அல்பேர்ட் ஆசைப்படுகிறான். நிட்டியின் தந்தையிடமும் வந்து பெண் கேட்கிறான். ஆனால், வளர்ப்புத் தந்தையோ சீலி தான் மூத்தவள் என்றும் அவளைக் கல்யாணம் செய்யும் படியும் கூறுகிறான். அவனும் சீலியைப் பரிசோதனை செய்து பார்த்து அவளுக்கு எந்தக் குறையும் இல்லையென்று அறிந்து கல்யாணம் செய்து தன்னுடன் கூட்டிச் செல்கிறான். அங்கு சீலிக்கான இன்னொரு நரகம் உருவாக்கப்படுகிறது.

சீலியின் கணவன் அல்பேர்ட்டுக்கு அவளுடைய தங்கையின் மேலுள்ள ஆசை போகவில்லை. சீலியைப் பார்க்க வரும் அவளுடைய தங்கையை பலாத்காரமாக அடைய நினைக்கிறான். ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை. அதன் காரணமாக அவன் நிட்டியை வீட்டைவிட்டுத் துரத்துகிறான். சீலிக்கான ஒரேயொரு உறவான அவளின் தங்கையை சீலியிடமிருந்து பிரிக்கிறான். வீட்டை விட்டுத் துரத்தப்படும் நிட்டி கென்யாவில் வாழும் மிசனரிக் குடும்பத்தினரிடம் சேர்கிறாள். அங்கிருந்து அவள் சீலிக்கு எழுதும் கடிதங்கள் கூட சீலியின் கணவனால் மறைத்து வைக்கப்படுகிறது. இதன் காரணமாக தனது தங்கை இறந்து விட்டதாக சீலி நம்புகிறாள்.

சீலியின் கணவன் அவளை மிருகத்திலும் கேவலமாக நடத்துகிறான். இதனால் அவள் தன்னுக்குள்ளேயே குமைந்து போய் ஏவல் வேலை செய்யும் ஒரு அடிமையாய் வாழ்க்கையை நடத்துகிறாள். இவளுடைய வாழ்க்கையின் திருப்பு முனையாக வருகிறாள் ஷக் என்னும் பாடகி. சீலியின் கணவன் அல்பேர்ட் ஷக்கின் மேல் கொண்ட ஆசையின் காரணமாக அவளுக்குச் சேவகம் செய்கிறான். அவளோ அவனை மதிப்பதாகத் தெரியவில்லை. தன்னுடைய தேவையை எல்லாம் மனங் கோணாமல் செய்யும் மனைவியை கேவலமாக நடத்தும் இவன் இன்னொரு ஆளுமையுடைய பெண்ணுக்கு சேவகம் செய்து அவளைத் தன்னுடமையாக்கிவிட வேண்டுமென்பதில் கடும் பிரயத்தனப்படுகிறான். ஆனால் அவளோ இதற்கெல்லாம் மசியவதாயில்லை.

ஆரம்பத்தில் சீலியை அருவருப்பானவள் எனப் பேசும் ஷக், சீலியின் அன்பின் தூய்மை கண்டு அவளை ஆதரிக்கிறாள். இதன் காரணமாக அவர்கள் இருவருக்கும் இடையே நெருக்கமும், உறவும் ஏற்படுகிறது. ஷக்கின் மூலமாக சீலிக்கு கணவன் மறைத்து வைத்திருந்த, தான் இறந்து விட்டதாகக் கருதும் தனது தங்கையின் கடிதங்கள் கிடைக்கப் பெறுகின்றன. அதன் மூலம் தனது குழந்தைகளும் தனது தங்கையிடம் வளர்வதை அறிந்து கொள்கிறாள். தனது சகோதரியுடனும் பிள்ளைகளுடனும் சேர்ந்து விட வேண்டுமென்ற ஏக்கமும், அவாவும் அவளுள் எழுகிறது. அதன் பின்னர் அவளுக்குள் ஒரு புத்துணர்வு வருகிறது. தானும் ஒரு மனுசிதான் என்ற உணர்வினையும், தனது கணவனை விட்டுப் போக வேண்டுமென்ற தைரியத்தையும் ஷக்கின் மூலம் பெறுகிறாள். ஷக்கிற்கும் அவளுக்குமான உறவு அவளை ஒரு தைரியமுள்ள துணிகரமான பெண்ணாக மாற்றுகிறது. இது அவளை கணவனிடம் தனது விருப்பத்தைக் கூற உதவுகிறது. ஆனால் அவளது கணவன் தனது பிணத்தைத் தாண்டித்தான் நீ போக முடியும் என்று கூறுகிறான். இதனால் சீலி ஆவேசமடைகிறாள். உனது பிணத்தைத் தாண்டியென்றால் அதற்கும் நான் தயார் என்று சவால் விடுகிறாள். அவளது கணவன் திகைத்து நிற்கிறான்.

உயிர்ப்புப் பெற்ற சீலிக்கும் அவளது கணவனுக்கும் இடையே நடக்கும் உணர்ச்சிபூர்வமான உரையாடலின் சாரம் இது:

சீலி: நீ கீழ்த்தரமானவன். நான் உன்னிடம் இருந்து பிரிந்து செல்வதற்கான நேரம் உருவாகியுள்ளது. அது உன்னுடைய பிணத்தின் மேல்தான் என்றால் அதனை நான் வரவேற்கிறேன்.

கணவன்: என்ன சொல்கிறாய்?

சீலி: நீ என்னிடம் இருந்து எனது சகோதரி நிட்டியைப் பிரித்தாய். உனக்குத் தெரியும் இந்த உலகத்தில் எனக்குள்ள அன்பான உறவு அவள் மட்டும் தான் என்று. ஆனால் நிட்டியும், என்னுடைய பிள்ளைகளும் விரைவில் என்னுடன் வந்து சேரப் போகிறார்கள்.

கணவன்: நிட்டியும் உன்னுடைய பிள்ளைகளுமா? பெண்ணே நீ சொல்வது பைத்தியக்காரத்தனமாய் உள்ளது.

சீலி: ஆம். எனக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் ஆபிரிக்காவில் வசிக்கிறார்கள். அங்கு வேறு மொழியில் கற்கிறார்கள். நிறைவான சுதந்திரமான காற்றைச் சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய வாழ்க்கை நரகத்தால் சூழ்ந்துள்ளது. அவர்கள் ஒருபோதும் முட்டாள்களாகாமல், தேர்ச்சி பெற்றவர்களாக வளர்ச்சியடைந்தவர்களாக திரும்பி வருவார்கள்.

கணவன்: நீ போகும் போது என்னுடைய பணத்தில் ஒரு சல்லிக்காசையேனும் கொண்டு போக முடியாது.

சீலி: நான் ஏதாவது உன்னிடம் கேட்டேனா? நான் உன்னிடம் கேட்டேனா என்னைக் கல்யாணம் செய்யச் சொல்லி? நான் ஒரு போதும் உன்னிடம் ஒன்றும் கேட்கவில்லையே.


கணவன்: ஷக் திரும்பி வந்தாள். அவளிடம் திறமையுள்ளது. அவளால் பாட முடியும், எல்லோருடனும் தைரியமாகப் பேசிப் பழக முடியும். அவளால் தன்னுடைய காலில் நிற்க முடியும். உன்னால் என்ன செய்ய முடியும்? நீ அசிங்கமானவள். அருவருப்பான தோற்றமுடையவள், உன்னுடைய உடலமைப்புக் கேலிக்குரியது, உன்னால் மற்றவர்களுடன் சகஜமாகப் பழக முடியாது. ஷக்கிற்கு வேலைக்காரியாகத்தான் இருக்க முடியும். அவளுடைய மலக் கோப்பையை எடுப்பவளாகவும், அவளுடைய உணவினைச் சமைப்பவளாகவும், அதைக் கூட உன்னால் ஒழுங்காகச் செய்ய முடியாது. உன்னைக் கல்யாணம் செய்யவும் யாரும் பைத்தியக்காரர்களல்ல. ஆகவே நீ என்ன செய்யப் போகிறாய்? உன்னால் ஒரு பண்ணையை நடத்த முடியுமா? இல்லையே. உன்னைத் தண்டவாளம் போடும் கூலியாளாக வேலைக்கமர்த்தத்தான் முடியும். உன்னை இவ்வாறு சிந்திக்க வைத்தது யார்? உன்னைப் பார், நீ கறுப்பி. நீ அசிங்கமானவள். நீ ஒரு பெண். நீ ஒன்றுமில்லாதவள். நீ யாருக்கும் சாபமிடக் கூட முடியாது.

சீலி: நீ எனக்குச் செய்வது உனக்கே திரும்பி வரும் நீ எனக்குச் செய்யும் ஒவ்வொன்றும் உனக்குச் செய்வதாயே அமையும். நான் கறுப்பியாக இருக்கலாம். நான் அசிங்கமானவளாகக் கூட இருக்கலாம், ஆனாலும் நான் வாழ்வேன்.

வாழ்வேன் என்று சவால் விடும் பெண்ணாக சீலி மிளிர்கிறாள். அவளுடைய ஒடுங்கிப் போதல் என்கிற அம்சத்தை அவள் தூக்கி எறிகிறாள்.

அதேபோல இந்தப் படத்தில் வரும் இன்னொரு பெண் பாத்திரம் சோபியா. அவள் மிகவும் துணிச்சலுள்ள, நடந்தால் தரையே அதிரும் இறுமாப்புக் கொண்ட, யாருக்கும் அடங்காத ஒரு பெண். தனது மாமனாருடைய மேலாதிக்கத்தையோ, கணவனுடைய தான் ஆண் என்கிற முனைப்பையோ கிஞ்சித்தும் மதிக்காதவள். அவர்களுடைய தவறுகளைச் சுட்டிக் காட்டுபவள். ஒரு வேலையைத் தானே தனியே நின்று செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவள். தன்னைத் தாக்கிய தனது கணவனைத் திருப்பித் தாக்கும் வல்லமை கொண்டவள். இவ்வாறு வல்லமை பொருந்திய இவளை ஒரு பொழுது நகர மேயரின் மனைவி தனது வீட்டு வேலை செய்ய வருமாறு கேட்கிறாள். அதற்கு இவள் வர முடியாது என்று கூற அதனைத் தட்டிக்கேட்கும் மேயரின் கன்னத்தில் அறைகின்றாள். ஒரு வெள்ளையினத்தவனுக்கு கறுப்பினப் பெண் அறைவதாவது. அங்குள்ளவர்கள் சோபியாவை தாக்கி அவளைப் பொலிஸிடம் ஒப்படைக்கின்றனர். சிறைக்குச் செல்லும் சோபியாவின் ஆளுமை அங்கு அடக்கி ஒடுக்கப்பட்டு அவள் ஒரு நடைப்பிணம் போல் திரும்பி வருகிறாள். ஆளுமை மிக்க சுயம் கொண்ட பெண்ணை அதிகாரம் எப்படி ஒடுக்கி விடுகிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.


சீலி திரும்பி ஊருக்கு வரும்போது அவளின் வளர்ப்புத் தந்தை இறந்து போகிறான். தனது தங்கை எழுதிய கடிதத்தின் மூலமே சீலிக்கு அவன் வளர்புத் தந்தையென்று தெரிய வருகிறது. அதன் பின் அவள் தனக்குத்தானே கேட்கின்றாள்."எனது குழந்தைகள் எனக்குச் சகோதரர்களா? அல்லது எனது பிள்ளைகளா" என்று அதற்கு அவளுக்கு விடையே தெரியவில்லை.

இத் திரைப்படத்தில் பாத்திரப் படைப்புக்கள் மிகவும் நேர்த்தியாக, உயிர்த்துடிப்புடன் கையாளப்பட்டுள்ளது. ஒவ்வொருவரையும் கதாபாத்திரமாகவே வாழ வைத்துள்ளார் ஸ்ரிபன் ஸ்பீல்பெர்க்.

ஆபிரிக்க சமுதாயத்தில் மட்டுமல்லாமல் மத்திய கிழக்கு நாடுகளிலும் பெண்களின் பாலியல் உணர்வுகளை ஒடுக்கும் நடைமுறை வழக்கத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக சிறு வயதில் பெண்களின் பிறப்புறுப்பான கிளிடோரிஸ்ஸின் நுனியை வெட்டியெறியும் பழக்கம் எகிப்தில் பரவலாகக் காணப்படுகிறது. பெண்களின் காமவேட்கையைக் கட்டுப்படுத்தும் முறையாகவே தாங்கள் இதனைக் கைக்கொள்வதாக மதவாதிகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சடங்கின் மூலம் பல சிறுமிகள் உயிரிழந்துள்ளார்கள். ஆபிரிக்கச் சமுதாயத்திலும் சரி, அராபியச் சமுதாயத்திலும் சரி சடங்கு என்னும் பெயரில் பெண்களின் மீதான அடக்கு முறையின் அதிகாரத்திற்கு இது ஒரு உதாரணம் மட்டுமே.

ஆக ஆண்கள் அளவிற்கதிகமான பாலியல் உணர்ச்சியினால் பெண்களைப் பலாத்காரப்படுத்தலாம், வன்முறைக்குள்ளாக்கலாம், பல பெண்களை மணம் புரியலாம் அது தப்பில்லை. ஆனால் பெண்கள் தங்களது பாலியல் உரிமை குறித்துப் பேச முடியாது. தெரிவு குறித்துச் சிந்திக்க முடியாது. பதிலாக ஆணுக்கான வாரிசை உருவாக்குவதே பெண்ணின் கடமை என்று மதவாதிகளும், ஆணாதிக்க சிந்தனையாளர்களும் வலியுறுத்துகிறார்கள். இதுதான் தமக்கு விதிக்கப்பட்டதென ஏற்றுக் கொள்ளப் பழகிவிட்ட பெண்களும் எதிர்ப்புத் தெரிவிக்கத் திராணியற்றுள்ளனர். ஆனால் பெண்ணியச் சிந்தனையாளர்கள் இந்தச் சடங்குமுறைகளைக் கேள்விக்குள்ளாக்குகின்றனர். பெண்கள் ஒன்றுபட்டு இவற்றை எதிர்க்க வேண்டும் என்றும், பெண்ணினுடைய தெரிவுச் சுதந்திரத்தையும் ஆளுமையையும் சுயத்தையும் பேணப் போராட வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றனர்.

அந்த வகையில் அலிஸ் வாக்கருடைய இந்த நாவல் அதன் பணியைச் செவ்வனே செய்திருக்கிறது. அதனை நாவலின் ஆதாரசுருதி கெடாமல் படமாக்கியதன் மூலம் ஸ்பில்பேர்க் சினிமா உலகில் விதந்துரைக்கப்பட வேண்டியவராகிறார்.

தாயகம் - இலங்கை

செப் - நவ, 2006