Saturday, June 21, 2008

நான் வீழ்வேனென்றாலும், அழமாட்டேன்




உலகெங்கும் நடைபெற்ற புரட்சிகர இயக்கங்களிலும், ஜனநாயக இயக்கங்களிலும் செயலாற்றிய பெண்களின் எண்ணிக்கை அளவற்றது. ஆனால் அத்தகைய போராட்டங்களில் பங்கு கொண்ட பெண்களின் பங்களிப்பு பற்றி அதிகளவில் கவனம் செலுத்தப்படுவதில்லை. எல்லோருமே மாவீரர்களைப் பற்றித்தான் அதிகம் கதைத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர வீராங்கனைகளைப் பற்றிக் கதைப்பதற்குத் தயக்கமுள்ளவர்களாகவே இருக்கிறார்கள். பொதுவாக இந்தச் சமூகக் கட்டுப்பாட்டுள் இருந்து வெளிப்படுத்தப்படாமற் போன எத்தனையோ வீராங்கனைகளின் செயற்பாடுகள் மறைக்கப்பட்டுள்ளன, மறக்கடிக்கப்பட்டுள்ளன. பெண்களின் எழுச்சி சமூக, பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்த விரும்பிய எல்லா தேசிய விடுதலைப் போராட்டங்களுடனும், ஜனநாயகப் போராட்டங்களுடனும் பின்னிப் பிணைந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. பல சந்தர்ப்பங்களில் தேசிய விடுதலைக்கான போராட்டங்களில் வர்க்க வேறுபாடுகளைக் கடந்து உயர்வர்க்கப் பெண்களும் பங்கு கொண்டுள்ளார்கள். ஒடுக்கப்பட்டவர் களுக்காக அவர்களுடைய குரல் ஓங்கி ஒலித்த சந்தர்ப்பங்கள் அனேகம். இவ்வாறு சமூகத்தின் வளர்ச்சிக்காக, மாற்றத்திற்காக. முன்னேற்றத்திற்காகக்; குரல் கொடுத்த, போராடிய பல பெண்களின் குரல் வரலாற்றிலிருந்து துடைத்தழிக்கப்பட்டு விட்டது. இன்று உலகம் முழுவதும் உள்ள பெண்ணியலாளர்கள் இந்த மறைக்கபட்ட வரலாற்றை மீள் கண்டுபிடிப்புச் செய்வதிலும், வரலாற்றை மீள எழுதுவதிலும் அக்கறையோடு செயற்பட்டு வருகிறார்கள்.

அந்தவகையில் 1923 தொடக்கம் 1942 வரை, புரட்சிக்காக தனது உயிரை கொடுத்த பெண் புரட்சியாளினியும், பிரேசிலினால் ஹிட்லரின் கொலைவெறிக்கு பரிசளிக்கப்பட்டவருமான ஒல்கா பெனாரியோவின் வரலாற்றில் முடிந்து போன, மறந்து போன, ஒரு அத்தியாயத்தைப் புதுப்பிக்கும் வகையிலும், வரலாற்றை மறுவார்ப்புச் செய்யும் வகையிலும் திரைப்படமாக்கியுள்ளார் நெறியாளர் ஜெமி மொன்யர்டிம்.

பெர்னாண்டோ மொறாய்ஸ் என்கிற பிரேசிலிய ஊடகவியலாளரால் எழுதப்பட்ட ஒல்கா பெனாறியோ என்ற கொம்யூனிஸ புரட்சியாளினியின் வாழ்க்கை வரலாற்று நூலை றீற்ரா பூஸார் திரைக்கதையாக எழுதி படத்தைத் தயாரித்திருக்கிறார். (றீற்ரா பூஸார் ஸ்பானியத் தொலைக்காட்சிக்காக கப்ரியேல் கார்சியா மார்க்கியூஸ் உடன் இணைந்து அமொரேஸ் பொஸிபிள்ஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் பணியாற்றியவர்). இதனை நெறியாள்கை செய்துள்ளார் பிரேசிலின் ஜெமி மொன்யர்டிம். இத்திரைப்படம் 2004 ஓகஸ்டில் பிரேசிலில் திரையிடப்பட்டது. அதேவேளை இதே ஆண்டு டிசம்பர் மாதம் ஒல்கா பெனாரியோ பற்றிய விவரணத் திரைப்படம் ஹாலிப் லீற்றனிரால் எழுதி, நெறியாள்கை செய்யப்பட்டு ஜேர்மனியில் திரையிடப்பட்டிருக்கிறது.

ஜேர்மனியில் ஒடுக்கப்பட்டவர்களுக்கான ஆதரவுக் குரலாகவும், ரஷ்யாவிலும், பிரேசிலிலும் புரட்சிகர யுத்தத்தில் பங்குகொண்டவரும், கொம்யூனிஸ்டுமான ஒரு ஜேர்மனிய யூதப் பெண்ணான ஒல்காவின் வாழ்க்கையும், வீரஞ் செறிந்த அவளது செயற்பாடுகளும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலப் புரட்சிகரப் பெண்களை எம் கண்முன் நிறுத்தும் வகையில் சிறப்பாக நெறியாள்கை செய்யப்பட்டிருக்கிறது இத் திரைப்படம்.

ஜேர்மனியில் சமூக ஜனநாயக வழக்கறிஞரான யூத தந்தைக்கும், ஜேர்மனிய உயர்வர்க்கத்தைச் சேர்ந்த தாய்க்கும் 1908ஆம் ஆண்டு மகளாகப் பிறந்த ஒல்கா பெனாறியோ, 1923ஆம் ஆண்டு தனது 15ஆவது வயதிலேயே சர்வதேச கொம்யூனிஸ இளைஞர் பேரவையில் இணைந்தாள். 1926 ஆம் ஆண்டு தன்னுடைய தலைமையில் பேராசிரியரும், ஜேர்மனிய கொம்யூனிஸ்ட்டுமான தோழர் ஓட்டோ ப்ரோனை ( ஓட்டோ ப்ரோன் இவளது காதலனும் கூட) பெர்லின் மொபிற் சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க வைத்து கூட்டிச் செல்கின்றாள்.

படம் தொடங்கும் பொழுதே “நான் வீழ்வேனென்றாலும், அழமாட்டேன் அப்பா” என்றபடி நெருப்பைத் தாண்டும் சிறு வயது ஒல்காவின் தைரியமும், “எனக்கு என்ன தேவையென்று எனக்குத் தெரியாது ஆனால் எனக்கு என்ன தேவையில்லையென்று எனக்குத் தெரியும்” என்று கூறி வீட்டை விட்டு வெளியேறும் அவளது துணிவும், திடமும் படம் முடிவடையும் வரை வளம் குன்றாமல் அதே ஸ்திரத்தன்மையுடன் பேணப்படுகிறது. பேச்சுத் திறமையும், முழுமையான இராணுவப் பயிற்சியும், எந்தச் செயலையும் தானாகத் திட்டமிட்டுத் திறம்படச் செய்யும் செயற்பாடும் கொண்ட ஒல்காவிடம், பிரேசிலின் கொம்யூனிஸ்ட்டான லூயிஸ் கார்லோஸ் ப்றெஸ்ரெஸ் ஐ பாதுகாப்பாக பிரேசிலில் கொண்டு போய்விடும் பணி ஒப்படைக்கப்படுகிறது.

பிரேசிலின் கொம்யூனிஸக் கட்சியின் தலைவரான லூயிஸ் கார்லோஸ் ப்றெஸ்ரெஸ் அப்போதைய பிரேசிலின் ஜனாதிபதியான சர்வாதிகாரி வார்காஸ் இன் அரசாங்கப் படைகளுக்கெதிராக புரட்சிகர நடவடிக்கையில் ஈடுபட்டவர். ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும், வறியவர்களுக்காகவும் குரல் கொடுத்தவர். எங்கு சென்றாலும் எல்லோராலும் “நம்பிக்கையின் நம்பிக்கை” என்று அழைக்கப்பட்டவர். அந்தளவு திறமை வாய்ந்த ஒரு தலைவருக்கு மெய்ப்பாதுகாவலாளியாகச் செல்லும் பொறுப்பை ஒல்கா ஏற்றுக் கொள்கிறாள். 'நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, நான் உங்களைப் பத்திரமாக பிரேசிலில் கொண்டு போய் விடுவேன' என்ற உறுதிமொழி ஒல்காவால் வழங்கப்படுகிறது. அவளுடைய துணிவும், தன்னம்பிக்கையும் கார்லோஸ் ப்றெஸ்ரெஸ்க்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது.

இருவரும் தமது தேனிலவை சந்தோசமாகக் கழிக்கச் செல்லும் பணக்காரத் தம்பதிகள் போல வேடமிட்டு பிரேசிலை நோக்கிய் பயணத்தை மேற்கொள்கிறார்கள். எல்லாவிதத்திலுமே ஒத்துப் போகும் தன்மையுள்ள இருவருக்கிடையிலும் மெல்ல மெல்ல காதல் ஏற்படுகிறது. அந்த உறவினைக் கூட மிகுந்த மென்மையான, அழகியல் தன்மையுள்ள, கதையின் முக்கிய பகுதிகளுக்குப் பங்கம் ஏற்படாத வகையில், எந்தவித விரசமுமற்று எடுத்துச் சொல்கிறார் நெறியாளர்.

இறுதியில் அழகும், ரம்மியமுமிக்க இலத்தீன் அமெரிக்காவின் ஒரு பகுதியான பிரேசிலுக்கு பாதுகாப்பாக வந்து சேருகிறார்கள். ஆனால் லூயிஸ் கார்லோஸ் ப்றெஸ்ரெஸ் நாடு திரும்பியிருக்கலாம் என்ற சந்தேகம் பொலிஸாருக்கு ஏற்படுகிறது. இவ்விடயம் வார்காஸ்க்கும் தெரிவிக்கப்படுகிறது. புரட்சியாளர்களை அவர்களுடைய மறைவிடத்திலிருந்து வெளியே கொண்டு வரும் தந்திரமாக பிரேசிலின் நத்தல் பகுதியில் சர்வாதிகாரி வார்காஸால் யுத்தத்திற்காக இராணுவமும், பொலிஸாரும் குவிக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் மீது யுத்தம் ஏவிவிடப்படுகிறது.

வார்காஸ் நினைத்தது போலவே மக்களை அழித்தொழிக்கும் இந்த யுத்தத்தை நாம் இனியும் பார்த்துக் கொண்டிருக்க முடியாதென்ற எண்ணத்திற்கு ப்றெஸ்ரெஸை கொண்டு வந்து விடுகிறது. ஆனால் அது சர்வாதிகாரி வார்காஸ் எங்களுக்காக தயார் செய்த பொறியாக இருக்கலாம் என மற்றத் தோழர்கள் கூறுகிறார்கள். அவர்களுக்கிடையில் பல விவாதங்கள் நடைபெறுகிறது. ஒரு சாரார் சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

ஆனால் ப்றெஸ்ரெஸ் மக்கள் அழிவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாதெனக் கூறி களத்தில் இறங்கி விடுகிறார். இராணுவமும், கடற்படையும் தனக்கு ஆதரவாக இருக்குமென நம்புகிறார். ஆனால் சர்வாதிகாரி வார்காஸின் ஏற்பாட்டின்படி புரட்சிப்படை தோற்கடிக்கப்படுகிறது.

அடுத்து கொம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர்களைக் கைது செய்யுமாறும், முக்கியமாக ப்றெஸ்ரெஸ்ஸை கைது செய்து சிறையில் அடைக்குமாறும் வார்காஸிடமிருந்து பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. புரட்சியாளர்கள் ஒவ்வொருவராகக் கைது செய்யப்பட்டு, சித்திரவதையின் மூலம் அவர்களிடமிருந்து மற்றவர்களைப் பற்றிய தகவல்கள் பெறப்படுகிறது. எல்லோரும் கைது செய்யப்படுகிறார்கள். ஆவணங்களும் கைப்பற்றப்படுகிறது. இறுதியில் கார்லோஸ் ப்றெஸ்ரெஸ்ம், ஒல்காவும் காட்டிக் கொடுக்கப்பட்டு தப்பிச் செல்வதற்கு வழியில்லாத நிலையில் கைது செய்யப்படுகிறார்கள். சிறையிலடைக்கப்பட்ட ஒல்காவுக்கு தான் கர்ப்பமடைந்திருப்பது தெரியவருகிறது. தான் கார்லொஸ் ப்றெஸ்ரெஸின் மனைவியென்றும், தான் கர்ப்பமுற்றிருப்பதால் பிரேசிலிலேயே தன்னுடைய குழந்தையைப் பெறுவதற்கான அனுமதியும், வைத்தியரும், வழக்கறிஞரும் தேவையென்றும் வாதாடுகிறாள். கார்லொஸ் ப்றெஸ்ரெஸின் தாயும், சகோதரியும் கூட ஒல்காவின் விடுதலைக்காக முயற்சிக்கிறார்கள். ஆனால் பிரேசிலிய அரசாங்கத்தால் ஒல்காவை விடுவிக்கும் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாமல் நிராகரிக்கப் படுகிறது. ஒல்காவை ஜேர்மனிய அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் தருணத்தை அது எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

புரட்சிகர வாழ்க்கையில் சந்தேகங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் இடங் கொடுக்கலாகாது எனக் கூறி வந்த ஒல்கா, ஒரு தாயாகவோ, மனைவியாகவோ தன் வாழ்க்கையை நினைத்துப் பார்த்திருக்காத ஒல்கா, இந்த இரண்டையும் ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறாள். எதற்கும் அஞ்சாத, தற்துணிவும், தன்னம்பிக்கையும் கொண்ட அவளுடைய செயற்பாடுகள் கார்லோஸ் ப்றெஸ்ரெஸ்ஸின் காதலின் மூலம் முடக்கப்பட்டு விடுகிறது.

சிறையில் இருந்த பலமாதங்கள் நான் உன்னை இழந்துள்ளேன் என்று தாபத்துடன் கூறும் ஓட்டோ ப்ரோன்க்கு "குடும்பம் பிள்ளைகள் என்பவை எமக்கு இல்லை. நீ கைது செய்யப்பட முன்னரே நாம் அவை எல்லாவற்றையும் கடந்து வந்து விட்டோம்" என்று சொல்லும் போதும், அவனைச் சிறையிலிருந்து மீட்டுக் கொண்டு வந்தபின் 'நான் உன்னை மீட்டு வந்தது நீ எனது காதலன் என்பதனாலல்ல, புரட்சியில் நான் கொண்டிருந்த பற்று காரணமாகவே' எனக் கூறும் போதும் ஒல்காவின் பாத்திரத்;தை நாம் புரிந்து கொள்கிறோம். இதன் காரணமாக ஓட்டோ ப்ரோன்க்கும் அவளுக்குமிடையிலான முறிவும் ஏற்படுகிறது. சமூக மாற்றத்திற்கும், சமூக வளர்ச்சிக்கும் தம்மை அர்ப்பணித்தவர்களென்று சொல்லப்படும் ஆண்களிடம் இல்லாத சமூகப் பொறுப்பையும், புரட்சி மீதான பற்றையும் நாங்கள் இங்கே பெண்ணான ஒல்காவிடம் காணக் கூடியதாக இருக்கிறது.

ஆனால் அதே ஒல்காவால் கார்லோஸ் ப்றெஸ்ரெஸ்ஸின் காதலையும், அவனுடையதான உறவையும் தட்ட முடியாமல் போகிறது. அதுவொரு கடமையின் நிமித்தமா? அளவு கடந்த காதலின் நிமித்தமா? என்று கூட அவளுக்குப் புரியவில்லை. ஒரு சமயம் 'இந்த உறவு எனக்கு வெறுப்பாக உள்ளது, நான் திரும்பி மொஸ்கோவுக்கே போக வேண்டும், அங்கு என்னை எதிர்பார்த்து பல பணிகள் காத்திருக்கின்றன' என்று கூறும் ஒல்காவினால், மறுபுறத்தில் கார்லோஸின் காதலின் வேண்டுதலைப் புறக்கணித்துச் செல்லவும் முடியாதவளாக இருக்கிறாள்.

காதல், திருமணம் என்பது எல்லாக் காலத்திலுமே பெண்களை முடக்குவதாகத்தான் இருக்கிறது. இது எல்லாக் காலத்திற்கும் பொருந்தக் கூடியதாகவும் இருக்கிறது. புரட்சிகர விடுதலை இயக்கங்களில் இணைந்து, ஆயுதம் ஏந்தி, ஆண்களால் செய்ய முடியாத பல காரியங்களைச் செய்த வீராங்கனைகளைப் பற்றி அந்தந்த விடுதலை இயக்கங்களிலுள்ள ஆண்களிடம் நாம் கேட்டுப் பார்த்தோமானால், ஒருபோதும் அவர்கள் பெண்களின் வகிபாகத்தை, சாதனைகளை, சாகஸங்களைப் பற்றி நன்றாகச் சொல்வதில்லை. மாறாக இந்தப் பெண் போராளிகளால் தமக்குத் தொல்லைகளே அதிகம் என்றும், அவர்களால் எதுவும் ஆனதில்லை என்றும் கூறுவதைக் காணலாம்.

இது பெண்களின் வகிபாகத்தைப் புறக்கணிக்கும் ஆணாதிக்க மனேபாவத்திலிருந்தே எழுகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. இதைவிட இந்த விடுதலை இயக்கங்களில் இருக்கும் பெண்களின் வீரம், துணிவு, தன்முனைப்பு, சுயத்துவம் என்பன அவர்களின் திருமணத்தின் பின் காணாமற் போய் விடுகிறது. அதன் பின் அவர்கள் கணவனையும், சமுதாயத்தில் நிலவும் வறட்டுக் கலாசாரத்தையும் பாதுகாக்கும் பதுமைகளாகவும், அந்தந்த விடுதலை இயக்கத்திற்குப் புதல்வர்களைப் (புதல்விகளை அல்ல,) பெற்றுக் கொடுக்கும் தாய்மார்களாகவும் மாறிவிடுகிறார்கள்.

இந்த நிலையே இங்கு ஒல்காவுக்கும் ஏற்படுகிறது. மாபெரும் கொம்யூனிஸவாதியான கார்லோஸ் ப்றெஸ்ரெஸின் உறவு தன்னுடைய வாழ்க்கையில் தோற்றுப் போகும் சந்தர்ப்பத்தை அவளுக்கு ஏற்படுத்துகிறது. இறுதியில் அவள் குழந்தை, கணவன் என்ற உறவை ஏற்றுக் கொண்டாலும், அவளுடைய சுயம் அழிபட்டுப் போகிறது. ஒரு வீரஞ் செறிந்த பெண்ணை, சாதாரண நிலைக்குக் கொண்டு வந்து குழந்தைக்காவும், கணவனுக்காகவும் ஏங்குபவளாக மாற்றி விடுகிறது.

பிரேசில் அரசாங்கம் தன்னுடைய கபட நாடகத்தை நடைமுறைப் படுத்துவதற்கான நேரத்தைக் குறித்துக் கொண்டு ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த ஒல்காவை ஹிட்லரின் பாசிஸப் பாசறைக்கு பரிசாக அளித்துத் தனது கொலைவெறியைத் தீர்த்துக் கொள்கிறது. ஒல்கா ஒரு யூதப் பெண்ணாக இருந்தமையே இதற்கான காரணம்.

கப்பல் மூலம் கொண்டு செல்லப்படும் ஒல்கா ஜேர்மனிய இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுகிறாள். சிறையிலேயே குழந்தையும் பிறக்கிறது. கார்லொஸ் ப்றெஸ்ரெஸின் தாயார் மேற்கொண்ட முயற்சியினாலும், குழந்தை ஒரு பிரேசிலியன் என்ற காரணத்தினாலும் கார்லொஸ் ப்றெஸ்ரெஸின் தாயாரிடம் குழந்தை ஒப்படைக்கப்படுகிறது.

1939ஆம் ஆண்டு லிச்ரென்பர்க் முகாமிலிருந்து றவென்ஸ்ப்ரக் சித்திரவதை முகாமுக்கு அனுப்பப்படும் ஒல்கா 1942ஆம் ஆண்டு பேர்ன்பக் சித்திரவதை முகாமில் விசவாயுக் கூடத்துள் அடைக்கப்பட்டு நாசிகளால் கொலை செய்யப்படுகிறாள்

திரைப்படம் செல்வச் செழிப்புமிக்க ஒல்காவினுடைய பருவ வயதிலிருந்து, நாசிகளுடைய சித்திரவதை முகாமில் விசவாயுக் கூடத்துள் அடைக்கப்பட்டுக் கொலை செய்யப்படும் வரை மன அதிர்வை ஏற்படுத்திய வண்ணம் சிறந்த முறையில் நகர்ந்து செல்கிறது. ஒல்காவின் மனத்திடமும், எதனையும் எதிர்கொள்ளும் ஆளுமையும், உறுதியும், தன்னம்பிக்கையும், வாள் வீச்சுப் போன்ற கண்களும் இன்னமும் எனது மனதை விட்டு அகலாதவையாக உள்ளன. ஒல்கா பாத்திரத்தில் நடித்த கமீலா மொர்கொடோ ஒல்காவை எங்களுடன் வாழ வைத்து விட்டார்.

ஒல்கா திரைப்படம் ஒல்கா பெனாரியோவினுடையதும், பிரேசிலின் மாபெரும் கொம்யூனிஸ்டான லூயிஸ் கார்லோல் பிறெஸ்ரெஸினுடையதுமான அரசியல் வாழ்க்கையை பற்றி மட்டும் பேசவில்லை. அது அரசியல், போர், புரட்சி, அடக்குமுறை, அநீதி மற்றும் காதல் போன்றவற்றுடனான ஒல்காவின் வாழ்க்கையையும், பிரேசிலில் அவள் எதிர்நோக்கிய கொம்யூனிசப் புரட்சியின் தோல்வியையும் பேசிச் செல்கிறது.

வீரர்களுக்கு எப்போதும் அழிவில்லையென்று கூறுகிறோம். அப்படியானால் வீராங்கனைகள்?

பெர்னாண்டோ மொறாய்ஸ், றீற்ரா பூஸார், ஜெமி மொன்யர்டிம் போன்றவர்களால் அவர்கள் மீள வாழ வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்

சரிநிகர். ஜனவரி - பெப்ரவரி. 2008