Saturday, January 8, 2011

Offside - பெண்கள் பற்றிய உரையாடற் களமாக மாறிய உதைபந்தாட்டக் களம்



அண்மையில் ஜீன்ஸ் அணிந்தார் என்ற குற்றச்சாட்டுக்காக லுப்னா அஹ்மட் ஹீஸைன் என்ற சுடானிய பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறைத்தண்டனைக்கு காரணமான குற்றம் அவர் ஒழுங்கீனமான ஆடையணிந்தார் என்பதே. இந்தத் தண்டனைக்கெதிரான ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டபோது அதிற் பல பெண்கள் லுப்னாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் காற்சட்டை அணிந்திருந்தார்களெனக் கூறப்படுகிறது. இதனைவிட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் மீது பொலிஸார் கிட்டத்தட்ட 9 தடவைகள் குண்டாந்தடிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜீன்ஸ் அணிந்தமை ஒரு குற்றமாகுமா?

ஆணாதிக்க மனோநிலைப்பட்ட இந்த சமூகத்தில் பெண்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகள் அனைத்துமே தவறானவையாகவும், குற்றமாகவும் கருதப்படுவதைத் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது. ஒரு பெண் ஆணுக்குச் சமத்துவமானவளாக இந்தப் பரந்த உலகினுள் பிரவேசிப்பதை ஆண் மனம் ஏனோ விரும்புவதில்லை. அவர்களை மூலையில் முடக்கி தன்னுடைய கைப்பிடிக்குள் எப்போதுமே வைத்திருப்பது அவனுக்கு விருப்பமானதொன்றாக இருக்கிறது. இதற்கு சுலபமான வழியாக பெண்கள் மீதான கலாசாரக் கட்டுப்பாடுகள் ஆண்களுக்குக் கை கொடுக்கின்றன.

இவ்வாறான பெண்கள் மீதான கலாசாரத் தளைகளுக்கு எதிராக கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்களினால் பல்வேறு காலங்களில் தொடர்ச்சியாகக் குரல்கள் எழுப்பப்பட்டு வந்தாலும் மிக மோசமான சம்பவங்களும் நடைபெற்ற வண்ணமே உள்ளன

இந்தவகையில் சமூகத்தினால் பெண்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடுகளையும், தடைகளையும் தகர்த்தெறியும் விதத்தில் யதார்த்த பூர்வமான சிறந்த பல படங்களைப் பார்வையாளர்களைச் சிந்திக்கத் தூண்டும் விதத்தில் தரும் சிறந்த நெறியாளராக ஈரானிய திரைப்பட இயக்குனர் ஜாபர் பனஹியைக் கூறலாம். அவருடைய அற்புதமான படைப்புகளில் ஒன்றுதான் ஓப்சைட் (Offside) எனும் திரைப்படம்.

2005ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திற்கான கால்பந்தாட்டப் போட்டியைப் பின்னணியாகக் கொண்டு ஈரானிய சமூகத்தில் பெண்களுடைய நிலையை, எத்தகைய பிரச்சார நெடியுமில்லாமல் ஈரானிய சமூகம் பெண்கள் விடயத்தில் “ஓவ் சைட்”டில் நிற்கிறது என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஜாபர் பனஹி.

வழமை போலவே இந்தத் திரைப் படம் வெளியான போது ஈரானில் தடை விதிக்கப்பட்டது. யாரையும் நோகடிக்காமல் ஒருவித நகைச்சுவை உணர்வுடன் பெண்களின் உணர்வுகளையும், அவர்களுடைய ஆற்றல்களையும், ஆர்வங்களையும் சுமந்தபடி ஒரு காற்பந்தாட்ட நிகழ்வினைப் பார்ப்பதனைப் போன்ற தன்மையுடன் படத்தை நகர்த்திச் செல்கிறார் ஜாபர் பனஹி.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில், ஈரானுக்கும் பஹ்ரெய்ன்க்குமான உதைபந்தாட்டப் போட்டி நடைபெறுகிறது. அதனைப் பார்க்க தன்னுடைய அனுமதியில்லாமல் புறப்பட்டு விட்ட மகளைத் தேடி ஒரு நடுத்தர வயதுத் தந்தை வாடகைக்காரில் புறப்படுவதுடன் படம் ஆரம்பிக்கிறது.

அடுத்த காட்சியில் ஆணுக்கு அருகில் பெண்கள் அமரக் கூடாது என்ற காரணத்தால் ஆணைப் போல வேடமிட்டுக் கொண்டு அந்தப் போட்டியைப் பார்க்க ஆண்கள் பயணிக்கும் பஸ்ஸில் அவர்களுடன் பயணிக்கும் ஒரு துணிவுள்ள இளம் பெண் காட்டப்படுகிறாள். தெஹ்ரானின் ஸ்ரேடியத்தைச் சென்றடையும் அவள் உதைபந்தாட்டப் போட்டிக்கான ரிக்கற்றை வழமையான அதன் விலையை விடக் கூடிய விலை கொடுத்துப் பெற்றுக் கொள்கிறாள்.

ரிக்கற்றுடன் நீண்ட வரிசையில் நின்று அரங்கத்துள் நுழைய முற்படும் வேளையில் அரங்கத்தின் காவற்படையால் கைது செய்யப்படுகிறாள். கைது செய்யப்படும் அவள், அவளைப் போன்று உதைபந்தாட்டத்தின் விசிறிகளாக இருந்து உதைபந்தாட்டம் பார்க்க வந்து தடுத்து வைக்கப்பட்ட ஏனைய ஐந்து பெண்களுடன் சேர்த்து தடுத்து வைக்கப்படுகிறாள்.

உதைபந்தாட்டப் போட்டி நடைபெறும் அந்த ஒரு மணித்தியாலத்துள் அரங்கின் முன்புறத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அந்த ஆறு பெண்களுக்கும் அவர்களைத் தடுத்து வைத்திருக்கும் படையினருக்கும் இடையேயான ஊடாட்டத்தின் ஊடாகவும் உரையாடல் ஊடாகவும் ஈரானிய சமூகத்தில் பெண்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை எளிமையாகவும் இயல்பாகவும் தனக்கே உரிய பாணியிலும் ஜாபர் பனஹி வெளிப்படுத்தியுள்ளார். அதேவேளை இந்த உரையாடல்களினூடு ஈரானிய சமூகத்தின் பல்வேறு வர்க்க அடுக்குகள் அவற்றின் விருப்புகள் தெரிவுகள் என்பவையும் அவற்றின் அடித்தளங்களையும் மிக எளிமையாக வெளிப்படுத்தி விடுகின்றார்.

தடுத்து வைத்திருக்கும் படையினரில் ஒருவன் சில மாதங்களுக்கு முன்னரேயே படையில் இணைந்து கொண்டவன். அவனால் பராமரிக்கப்பட வேண்டிய நோய் வாய்ப்பட்ட தாய் கிராமத்திலிருக்கிறாள். அவனிடம் பராமரிக்கப்பட வேண்டிய கால்நடைகள் இருக்கின்றன. அவனுடைய வயல்நிலத்தின் பயிர்களோ நீரின்றி வாடுகின்றன. அவனுக்குக் கிடைக்கும் விடுமுறையில் அவன் அவற்றைப் பராமரிக்கத் திட்மிட்டிருந்தான். நீர் பாய்ச்ச திட்டமிட்டிருந்தான். ஆனால் பாழாய்ப்போன இந்த உதைபந்தாட்டப் போட்டியால் அவனுக்கு விடுமுறை கிடைக்கவில்லை. அது அவனை எரிச்சலடைய வைக்கிறது. இந்த உதைபந்தாட்டப் போட்டியால் அவனால் விடுமுறையில் போக முடியாமற் போய்விட்ட எரிச்சலை அவன் இந்தப் பெண்கள் மீது கொட்டுகிறான்.
தடுத்து வைக்கப்பட்டிருக்கிற பெண்ணொருத்தி தடுத்து வைத்துள்ள அந்தப் படையினனிடம் கேட்கிறாள்,

‘ஏன் நாங்கள் உள்ளே போக முடியாது?’

‘உங்களை அனுமதிக்கக் கூடாது என்று எங்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.’

‘ஏன் நாங்கள் உள்ளே போனால் என்ன நடக்கும்?’

‘உள்ளே நிறைய ஆண்கள் இருக்கிறார்கள்.’

‘அதனால்? …’

‘அதனால் அது சாத்தியமில்லை. ஆண்கள் அங்கே தகாத வார்த்தைகளையும் இழிசொற்களையும் பயன்படுத்துவார்கள்.’

‘நாங்கள் அவற்றைக் கேட்க மாட்டோம் என்று சத்தியம் செய்கிறோம்.’

‘விளையாட்டு மைதானம் பெண்களுக்கான இடமில்லை.’

அது மட்டுமல்ல மேலதிகாரி எந்நேரமும் வரலாம். வந்தால் நான் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்றும் அவன் சொல்கிறான். அப் பெண்களிடம் திருப்பிக் கேட்கிறான்,

‘அப்படி என்ன இந்த உதைபந்தாட்டத்தில் இருக்கிறது பார்ப்பதற்கு, இது ஒன்றும் வாழ்வா சாவா பிரச்சினை அல்லவே?’

அவனால் அவர்களின் விளையாட்டு ஆர்வத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது. பெண்களுக்கு இதெல்லாம் தேவையில்லாத ஒன்றென அவனின் ஆண் மனோபாவம் புறு புறுக்க வைக்கிறது.
அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்களில் ஒருத்தி தான் கழிவறைக்குப் போக வேண்டும் என்கிறாள். ஆனால், அந்த மைதானத்தில் பெண்களுக்கான கழிவறை இல்லாததால் அவள் போக முடியாது என்கிறான் படையினன். அவளோ இது அவசரம் ஆண்களுக்கான கழிவறை என்றாலும் போகத் தான் வேண்டும் என அடம் பிடிக்கிறாள்.

அவளை கழிவறைக்கு அழைத்துச் செல்லும் படையினன் இந்த தெஹ்ரான் பெண்களுக்கு என்ன பேய் பிடித்திருக்கிறதா? ஓருத்தி என்னவென்றால் இராணுவத்தில் சேரப் போகிறேன் என்கிறாள். மற்றொருத்தி ஆண்களின் கழிவறைக்குப் போக வேண்டுமென்கிறாள். ஆண்களும் பெண்களும் சமமானவர்கள் அல்ல என்று நீங்கள் ஏன் புரிந்து கொள்ளவில்லை என்கிறான்.

அங்குள்ள சுவரொட்டி ஒன்றினால் அவளது முகத்தை மறைத்து அழைத்துச் செல்லும் படையினன் அவளிடம் கேட்கிறான் உனக்கு வாசிக்கத் தெரியுமா? என்று. அவள் ஆம் என்கிறாள். அவ்வாறானால் உன் கண்களை மறைத்துக் கொண்டு வா என்கிறான். எதற்கு என்று அவள் கேட்டதற்கு கழிவறைச் சுவர்களில் பெண்கள் வாசிக்கக் கூடாத வார்த்தைகள் எல்லாம் எழுதப்பட்டிருக்கும் அவற்றை வாசிக்காமலிருப்பதறகுத் தான் என்கிறான்.

இந்த கழிவறைக்கு அவளை அழைத்துச் செல்லும் காட்சி நம்மை சிரிப்பின் எல்லைக்கே கொண்டு சென்று விடுகிற அதேநேரத்தில் அவர்களிடையேயான உரையாடல் சமூகத்தின் போலி நிலைகளை அம்பலப்படுத்தி விடுகிறது.

இத்திரைப்படத்தின் முக்கியமான அம்சங்களிலொன்று மிகச்சாதாரணமான இலகுவான உரையாடல்களுடாக தனது சமூகம் நோக்கிய ஒரு கலாசார விமர்சனத்தை ஜாபர் பனஹி ஆழமாக முன்வைத்திருப்பது தான். அதேநேரம் உலகெங்கும் பெண்கள் அனுபவிக்கும் சமத்துவ உரிமைகளை ஈரானியப் பெண்கள் ஏன் அனுபவிக்ககூடாது என்கிற யதார்த்தமான கேள்வியையும் அவர் இந்தப் பெண்கள் ஊடாக எழுப்பி விடுகிறார்.

நாளாந்த வாழ்வில் பெண்கள் மீதான அசமத்துவம் எங்கெங்கு எவ் எவ் வழிகளில் தொழிற்படுகிறது என்பதையும் அதன் பிற்போக்கான தன்மையையும் அது சமூகவாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புக்களையும் ஓவ் சைட் திரைப்படம் முன்வைத்துச் செல்கிறது.

ஒரு வகையான விவரணப்படத்தின் தன்மையோடு மிகச்சாதாரண கமெராக்களைக் கொண்டு அரங்கத்தின் முன்னால் உள்ள ஒரு சிறிய பகுதியிலேயே 39 நாட்களில் படத்தை முடித்திருக்கிறார் ஜாபர் பனஹி. பெருமளவான காட்சிகள் ஒரே இடத்திலேயே எடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மைதானத்தை தான் எடுத்த விடயத்தை விவாதிக்க ஒரு தளமாக்கி விடுகிறார் அவர். விளையாட்டு மைதானம் ஆண்களுக்கானது. விளையாடுபவர்கள் ஆண்கள். ஆனால் பெண்களுக்கும் இதே விளையாட்டை விளையாட முடியும். அவரது பெண் பாத்திரங்கள் ஆண் பாத்திரங்களை விட அது பற்றி அறிவைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அந்த விளையாட்டைச் சரிசமமாக உட்கார்ந்து பார்க்க அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்களில்லை. பெண்களோ அசமத்துவமாக அந்த மைதானத்தின் ஒரு மூலையில் ஆண் காவல்துறையினரின் கண்காணிப்பின் கீழ் தடுத்து வைக்கப்படுகிறார்கள். இது அவர்களுடைய அடிப்படை உரிமையை, சமத்துவ உரிமையை, தெரிவு செய்யும் உரிமையை எல்லாம் பறித்து விடுகிறது.

மொத்தப்பரப்பிலும் ஒரு மூலையில் மட்டுமே அவர்களுக்கான இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் ஆண்களுக்கு சமத்துவமாக அல்ல.

இது உதைபந்தாட்டத்திலாக இருக்கலாம். அல்லது ஈரானிய சமூகத்திலாக இருக்கலாம். ஏன் உலகத்தின் எந்த மூலையிலாகவாவது இருக்கலாம். இது தான் பெண்களின் நிலைமை. பல தளங்களில் பயணிக்கக் கூடிய இந்தக் குறியீடு தான் அவரது பார்வை எனக் கொள்ளலாம்.

இத்திரைப்படங்களில் வரும் அந்தப் பெண்களுக்கோ அல்லது படையினருக்கோ பெயர்களில்லை. அந்தப் பெண்கள் எங்களுடைய பெண்களாகவும் இருக்கலாம். அல்லது உங்களுடையவர்களாக அல்லது எந்த ஒரு நாட்டினராகவேனும் இருக்கலாம். இது போல் தான் படையினரும். இந்த உலகம் முழுவதும் உள்ள ஒரு பிரச்சினையை ஒரு உதைபந்தாட்ட விளையாட்டினூடாக வெளிப்படுத்திய இயக்குனரின் எளிமை எம்மைத் திகைப்பிற்குள்ளாக்குகிறது.

ஓவ் சைட் என்பது விளையாட்டில் தடை செய்யப்பட்ட அல்லது தவறான இடத்தில் நிற்பது என்பது பொருள்படும். அது விளையாட்டின் வெற்றிக்குத் தடையாகிவிடும். ஓவ் சைட்டில் ஒரு தேசமோ நாடோ சமூகமோ நிற்பது அதன் முன்னேற்றத்தற்கு எப்போதும் தடையாகி விடும் என்பது இந்தத் திரைப்படத்தினுடாக எளிமையாகவும் இயல்பாகவும் விளங்க வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படம் பேர்ளின் சர்வதேச பட விழாவில் வெள்ளிக்கர விருதையும், ஜியோன் சர்வதேச படவிழாவில் சிறந்த நடிகைக்கான விருதையும் சர்வதேச மனித உரிமைச் சபையின் சிறந்த படத்திற்கான விருதையும் பெற்றிருக்கிறது.

தமிழ் திரைப்படத்தற்கு ஏன் இன்னமும் ஒஸ்கார் விருது கிடைக்கவில்லை என்று பட்டி மன்றம் நடாத்துவதை விடுத்து, ஹொட்டல்களில் றூம் போட்டு கதைவிவவாதம் நடாத்துவதை விடுத்து, லொகேசன் தேடி உலகம் பூராவும் அலைவதை விடுத்து மக்களிடம் சென்று மக்களை அவர்களது வாழ்க்கையைப் படிக்க எமது நெறியாளர்கள் எப்போது முனைகின்றனரோ அப்போது தான் தமிழில் சிறந்து படங்கள் வெளியாகும். விருதுகளும் தேடி வரும்.

அதுவரை தமிழ் சினிமா ரசிகர்களின் தலைவிதி ஏய்... என்ற காட்டுக்கத்தல்கள் மட்டும் தான்.

சினிமா மட்டுமல்ல, பெண்கள் தொடர்பான பார்வையும்தான். நாங்கள் நிற்பதோ ஓவ் சைட்டில், விளையாடுவதோ தப்பான ஆட்டம். பிறகு வெற்றி பெறுவது எவ்வாறு?