

‘எனக்கு மிகவும் தாகமாகவிருந்தது... கால்கள் வலித்தன.
என்னுடைய சப்பாத்துக்கள் பாறை போல் கனத்தன.
அவர்கள் எங்களைக் கொல்லப் போவது உறுதி.
நாங்கள் ஒன்றுமே செய்யாதபோது, அவர்கள் ஏன் எங்களைக் கொல்ல வேண்டும்?’
ஒரு சிறுவனின் ஆன்மா கேட்கிறது. கூறுங்களேன் ஏன் இப்படியென?
பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் என பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதற்குப் பின்னால் மாபெரும் இனவழிப்பு எனும் பயங்கரத்தை நடாத்தி முடித்திருக்கின்றது இலங்கை அரசாங்கம். இதில் ஏதொன்றும் அறியா அப்பாவிச் சிறுவர், சிறுமிகள் ஏராளமாகக் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆயிரக்கணக்கான சிறார்கள் அங்கவீனர்களாக்கப்பட்டுள்ளனர். உளவியல் ரீதியாகவும் பெருமளவான சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். யுத்தம் கொடியது. அது முதலில் அழித்தொழிப்பது அப்பாவிகளையே. உலகம் முழுவதும் குரூரங்களைக் கொட்டிக் கொண்டிருக்க, வாழ்வியலோடு கூடிய குரூரங்களையும் சேர்த்து விழுங்கி இறந்து போன குழந்தைகளை நாம் எப்படி மறத்தல் இயலும். இவர்களை இந்நிலைக்கு ஆளாக்கியவர்களை எப்படி மன்னிக்க முடியும்?

அப்படித் தொலைக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்வியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டதே மெக்ஸிகோ இயக்குனரான லூயிஸ் மன்டோகியின் Innocents Voices (அப்பாவிகளின் குரல்கள்). இந்தத் திரைப்படத்தில் எல்சல்வடோரில் 1980ஆம் ஆண்டு தமது கொடிய யுத்தத்திற்காக இராணுவம் சிறுவர்களை கட்டாய ஆட்சேர்ப்பிற்கு உட்படுத்துவது பற்றியும், அந்தச் சிறுவர்கள் எதிர்நோக்கும் கொடூரங்களையும் பதின்ம வயதுச் சிறுவனான சாவாவினுடாக மிக அழகாக விவரித்துச் செல்கிறார் இயக்குனர் மன்டோகி. தொலைந்து போன குழந்தைகளின் உலகத்தையும், பால்யம் சிதைந்த தனது உண்மைக்கதையையும் எமக்குத் தெரிவிக்கின்றார் திரைக்கதை ஆசிரியர் ஒஸ்கார் ரொறெஸ்.
ஒஸ்கார் ரொறஸ் தனது பன்னிரண்டாவது வயதில் கட்டாய இராணுவச் சேர்ப்புக்கு ஆளாகிறார். 14 வயதில் அவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று தனது தாயுடனும் சகோதரன் சகோதரியுடனும் இணைந்து கொள்கிறார். பின்னர் நாடக நடிகராகவும் திரைப்பட நடிகராகவும் ஆன ரொறஸ் தனது பாத்திரங்களை தனது கதையைச் சொல்லப் பயன்படுத்தினார்.
எனினும் தனது கதையை முழுமையாகச் சொல்ல ரொறஸ்க்கு இரண்டு தசாப்தங்கள் பிடித்தது. அது அவருடையதும் அவரைப் போன்ற ஆயிரமாயிரம் சிறுவர்களுடையதுமான கதையாக இருந்தது. அதுவே Innocents Voices ஆக உருவெடுத்தது. ‘நான் எழுத உட்கார்ந்ததும் எனக்கு ஞாபகத்திற்கு வருவதெல்லாம் தெருவில் நடந்து போகும் படையினரின் சப்பாத்து ஒலி தான். ஒவ்வொரு முறையும் நடந்து செல்லும் போது ஆற்றங்கரையை அண்மிக்கையில் எனக்கு கடந்தகாலம் தான் ஞாபகத்திற்கு வரும். அன்றைய சம்பவத்திற்குப் பிறகு எனது நண்பர்களுக்கு என்ன நடந்தது என்பதை நானறியேன்’ என்கிறார் ரொறஸ் தனது நேர்காணல் ஒன்றின் போது. இதனையே படத்தின் ஆரம்பக் காட்சியில் இயக்குனர் முக்கியப்படுத்தியிருப்பது ரொறஸின் வலியை எம்மை உணர வைக்கிறது.

சிறுவன் சாவாவினூடாக அந்தக் கிராமத்தில் நடந்துள்ள கொடுமைகளை எமக்குச் சொல்லி அவனதும், அவனைப் போன்ற சிறுவர்கள், சிறுமிகளின் துயரத்தில் எம்மைப் பங்கு கொள்ள வைத்ததில் இயக்குனர் மன்டோகியும், திரைக்கதை ஆசிரியர் ரொறெஸும் வெற்றி கண்டிருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். எல்சல்வடோர் கிராமங்களின் வாழ்வியலை அழகியலோடும், துயரத்தோடும் கலந்து சொல்லும் திரைக்கதை அமைப்பு தத்ரூபமாகக் கையாளப்பட்டிருக்கிறது. சாவாவின் சிறுபராயம் பாதாளத்துள் தள்ளப்படுவதும், அவனுக்கும் அவனுடைய குடும்பத்திற்குமான உறவும் பிணைப்பும், பயங்கரமான வன்முறைக்குள்ளும் முதன் முதலாக அவன் காதலில் விழுவதும் என அவனுடைய இரத்தம் தோய்ந்த சிறுபராயம் அழகாக இயக்குனரால் வெளிக்கொணரப்படுகிறது. லூயிஸ் மன்டோகி ஒரு நேர்காணலின்போது கூறுகிறார் ‘எந்தவொரு குழந்தையும் ஆயுதம் தாங்கப் பிறக்கவில்லை. அவர்கள் விளையாடப் பிறந்தவர்கள்’ என்று.
யுத்தம் எல்லாவற்றையும் தொலைத்து விடுகிறது. யுத்தம் ஆரம்பமாகியதும் யுத்தத்தின் நடுவில் தனது மனைவி பிள்ளைகளை தனியாக விட்டு விட்டு சாவாவின் தந்தை அமெரிக்கா சென்று விடுகின்றான். அதன் பின்னர் 11 வயதேயான சாவா அந்த வீட்டுப் பொறுப்பை தனது சிறிய தலையில் தாங்குகிறான். அந்த வீட்டின் தலைவன் ஆக்கப்படுகிறான். அவனது தாயும் அவ்வாறே அவனுக்கு கூறுகிறாள்.
இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த அழகிய சிறிய கிராமத்தில் ‘காட்போட்’டாலான வீடுகளில் அவர்களின் வீடும் ஒன்று. ஓவ்வொரு இரவும் பகலும் போராளிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையே நடைபெறும் சண்டையில் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் எவ்வாறு காப்பாற்றிக் கொள்வது என்பதனையும் சாவா கற்று வைத்திருக்கிறான். திரும்பும் இடமெங்கும் இராணுவத்தினரைக் கண்டு வாழப் பழகிக் கொண்டுள்ள இந்தச் சிறார்களின் மனநிலை எப்போதுமே பயத்துடன் வாழ்தலாகிப் போகிறது.

அங்கு வாழும் சிறுவர்களுக்கு இராணுவத்தினரின் கட்டாய ஆட்சேர்ப்பிலிருந்தும், வலிய தாக்குதல்களிலிலிருந்தும் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியதாகின்றது. 12 வயது நிரம்பிய சிறுவர்களை இராணுவம் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபடுத்துகிறது. அதற்கான அட்டவணையைத் தயார் செய்து இராணுவத்தில் சேர மறுத்துச் சிதறி ஓடும் சிறுவர்களைப் பலவந்தமாக பாடசாலையில் வைத்து இழுத்துச் செல்கிறது. போக மறுத்து அழும் சிறுவர்களைக் காண்கையில் மனம் கனத்துப் போகிறது.
அங்கிருக்கும் 11 வயது நிரம்பிய சிறுவர்கள் அனைவரும் வரப் போகும் தமது 12 ஆவது வயதை நினைத்து எப்போதுமே பயந்த வண்ணமே இருக்கின்றனர். 12வயது நிரம்பியவர்களைக் கட்டாயமாக இழுத்துச் செல்வதற்காக பெயர்களும், பிறந்த திகதியும் கொண்ட அட்டவணையுடன் காத்திருக்கின்றது இராணுவம். காலையில் பாடசாலை செல்லும் சிறுவர்கள் வீடு வந்து சேர்வார்களா என்று பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை.
வீதிகள், பாடசாலைகள், தேவாலயங்களின் அருகில் இராணுவத்தின் பாதுகாப்பு அரண்களும் இருப்பதனால் மோதல்களில் அப்பாவிப் பொதுமக்களும், சிறுவர், சிறுமிகளும் பலியாகிப் போகின்றனர்.

ஒரு இரவில் நடைபெற்ற மோதலினால் தமது பக்கத்து வீட்டுத் தோழி அஞ்சலீற்றாவின் மரணத்தை நேரில் கண்டு உறைந்து போகிறான் சாவா. இந்த மரணத்தினால் கலங்கிப் போயிருக்கும் சாவாவின் தாயிடம் அரச படைகளுக்கெதிரான போராட்டத்தில் பங்கு கொண்டுள்ள அவளுடைய தம்பி பெற்றோ கேட்கிறான் சாவாவைத் தன்னுடன் அனுப்பும்படி. அவனுக்குப் 12 வயது வந்ததும் இராணுவம் இழுத்துச் சென்றுவிடும் ஆகையால் தான் கூட்டிச் செல்கிறேன் எனக் கூறுகிறான். முதலில் ‘நீங்களும் சிறுவர்களை ஆட்சேர்ப்பதற்குத் தொடங்கி வீட்டீர்களா?’ என்று கோபப்படும் சாவாவின் தாயால் ‘இராணுவம் கூட்டிச் செல்வதற்குப் பதில் அவன் என்னுடன் வரட்டுமே. அவன் பாதுகாப்பாகவும் இருப்பான். நான் அவனைக் கூட்டிச் செல்கிறேன்’ என்ற பெற்றோவின் வேண்டுகோளை ஒரு அவலத் தாயாக இருந்து ஏற்க வேண்டி வருகிறது. அதன் பின்னர் நான் இன்னொரு நாள் வந்து உன்னை அழைத்துப் போகிறேன் எனச் சாவாவிடம் கூறிச் செல்கிறான் பெற்றோ.
சிறுமிகள் இராணுவத்தினரின் பாலியல் தேவைகளுக்காக கடத்திச் செல்லப்படுவதும், சிறுவர்கள் இழுத்துச் செல்லப்படுவதும், மோதல்களும் தொடர்ந்த வண்ணம் இருக்கும் ஒரு பொழுதில் பாடசாலைக்கு அண்மையில் இராணுவத்தினருக்கும் போராளிகளுக்குமிடையில் இடம்பெற்ற ஒரு மோதல் சம்பவத்தை அடுத்து பாடசாலை மூடப்படுகிறது. இதனையடுத்து சிறார்களுடைய கல்வி இடைநிறுத்தப்பட்டு அவர்கள் வீடுகளுக்குள் முடக்கப்படுகிறார்கள்.

அடுத்த தடவை ‘இராணுவம் கட்டாய ஆட்சேர்ப்புக்கு வருகிறது ஒழிந்து கொள்ளுங்கள்’ எனும் தகவல் சாவாவினுடைய மாமாவின் நண்பனும், போராளியுமான றரொன் மூலம் சாவாவிற்குக் கிடைக்கிறது. இதனை பல தாள்களில் எழுதி தமது நண்பர்களின் வீட்டுக்குள் போட்டு விடுகிறார்கள் சாவாவும் அவனுடைய நண்பர்களும். அடுத்த நாள் ஆட்சேர்ப்பிற்கு வரும் இராணுவம் சிறுவர்கள் எவரையும் காணாமல் ஏமாந்து போகிறது. அவர்கள் எங்கே அங்கிருக்கப் போகிறார்கள். அவர்கள் தமது வீட்டுக் கூரைகளின் மேல் ஒளிந்திருந்தார்கள். எனினும் அதற்கடுத்து வரும் இராணுவத்திடம் எதிர்பாராமல் பல சிறுவர்கள் சிக்கிக் கொள்கின்றனர். சாவாவும் அவனுடைய நண்பர்களும் கூரைமேல் ஏறி ஒளிந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள். இந்தப் பயத்தின் காரணமாக அவர்களின் இரவு கூரையின் மேலேயே கழிகிறது.
அவர்கள் கெரில்லாக்களோடு சேர்வதென முடிவெடுக்கிறார்கள். இதனைத் தனது பள்ளித் தோழியும், காதலியுமான கிறிஸ்ரினா மரியாவிடம் சொல்லி விடைபெறச் செல்லும் சாவாவிற்கு முதல் நாள் இரவு நடைபெற்ற மோதலில் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகிப் போன கிறிஸ்ரினா மரியாவின் வீட்டையும் கருகிப்போன அவளின் சட்டைத் துண்டையுமே பார்க்க முடிகிறது. கிறிஸ்ரினா மரியாவின் இழப்பு சிறுவன் சாவாவினால் தாங்கிக் கொள்ள முடியாததாகிறது.

தனது 12 ஆவது வயதின் தொடக்கமும், தனது காதலியின் இறப்பும் சேர்ந்து சாவாவை போராட்டத்தின் பால் இழுத்துச் செல்கிறது. ஓரிரவு சாவாவும் அவனது நண்பர்களும் கெரில்லாக்களுடன் இணைந்து கொள்வதற்காகச் செல்கின்றனர். அவர்கள் செல்வதை அறிந்து அவர்களின் பின்னால் இராணுவமும் செல்கின்றது.
கெரில்லாக்களிடம் வந்து சேரும் அந்த அப்பாவிச் சிறுவர்கள் மூலம் கெரில்லாக்களின் மறைவிடத்தைக் கண்டுபிடித்து இராணுவம் தாக்குதலை நடாத்துகிறது. சாவாவும் அவனது நண்பர்களும் இராணுவத்திடம் சிக்கிக் கொள்கின்றனர். இராணுவம் அவர்களைக் கொல்வதற்காகக் கொண்டு செல்கிறது. இந்தக் காட்சியிலிருந்தே திரைப்படம் ஆரம்பமாகிறது. இதன் போதுதான் சாவா கேட்கிறான் ‘நாங்கள் ஒன்றுமே செய்யாதபோது, அவர்கள் ஏன் எங்களைக் கொல்ல வேண்டும்?’
ஆற்றங்கரையெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தத்தின் வடுக்களாக பிணங்கள் சிதறியிருக்கின்றன. ஆற்றங்கரையில் இராணுவத்தினரால் முட்டுக்காலில் விடப்பட்டு ஒவ்வொரு நண்பர்களாகக் கொல்லப்பட சாவாவின் முறை வரும்போது இராணுவத்தின் மீது கெரில்லாக்களின் தாக்குதல் ஆரம்பமாகிறது. சாவா தப்பியோடுகிறான். தனது வீட்டையடையும் சாவா அப்பாவி மக்களுடைய காட்போட்டினாலான அந்த வாழ்விடங்கள் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருப்தனைக் காண்கிறான். தனது குடும்பம் இடம்பெயர்ந்தனை அறியாத அவன் தனது குடும்பம் அழிந்து விட்டதாக எண்ணிக் கதறுகிறான். ஆனால் சாவாவின் தாய் அவனைத் தேடி வருகிறாள். தாயுடன் செல்லும் அவன் பின்னர் வேறு சிலருடன் சேர்த்து அமெரிக்காவிற்கு அனுப்பி
வைக்கப்படுகிறான்.

இந்தப் படத்தில் நடித்துள்ள சிறுவர் சிறுமிகளின் நடிப்பை என்னவென்று சொல்வது. பயபீதியில் அவர்களின் முகத்தில் தோன்றும் அந்த உணர்வுகளும், துடிப்புடன் செயற்படும் திறனும் வியக்க வைக்கின்றன. சாதாரண சிறுவர்களது இளமைப்பருவம் போருக்குள் எவ்வாறு நெருக்கடிக்குள்ளாகிறது என்பதையும், போருக்குள் ஊடாடும் மனித உணர்வுகளையும திரைப்படம் இயல்பாக வெளிக்கொணர்கிறது.
இந்தத் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஈழத்துக் கவிஞையான சிவரமணியின் ‘யுத்தகால இரவொன்றின் நெருக்குதல் நமது குழந்தைகளை வளர்ந்தவர்களாக்கி விடுகிறது’ எனும் கவிதைவரிகள் ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. எல்சல்வடோரின் உள்நாட்டு யுத்தத்துள் சிறுவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி என்பதற்கப்பால் இத்திரைப்படம் ஏறத்தாழ 40 நாடுகளில் பல இலட்சக்கணக்கான சிறுவர்கள் இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதையும் அவர்களுடைய சிறுவர் பராயம் இந்தப் போர்களால் அழிக்கப்படுவதையும் நம் கண்முன் நிறுத்துகிறது.
globaltamilnews.net
24.05.2009