Tuesday, October 16, 2007

PROVOKED ஐ முன்னிறுத்தி பெண்கள் மீதான வன்முறை குறித்துச் சில குறிப்புகள்!



* கனடாவைச் சேர்ந்த பல்தேவ் முத்தா சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சொல்கிறார், நான்கு தெற்காசியப் பெண்களில் ஒருவர் உடல் ரீதியாக, உணர்வு ரீதியாக, பொருளாதார ரீதியாக, உள ரீதியாக. துஸ்பிரயோகம் செய்யப்படுகிறார்களென.

* கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் பெண்களில் பத்து வீதமானவர்கள் கணவரைக் கொலை செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டவர்கள் என இலங்கையின் பத்திரிகைக் குறிப்பு ஒன்று கூறுகிறது. மகஸின் சிறைச்சாலையில் 550 பெண் கைதிகள் இருக்கிறார்கள். அவர்களில் எட்டுப்பேர் 18வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் என்றும் அந்தக் குறிப்புக் கூறுகிறது.

ஒருவர் பெண்ணாகப் பிறப்பதில்லை. பெண்ணாக உருவாக்கப்படுகின்றார் என்கிறார் சிமோன்தி பூவா. உண்மைதான் பெண் பிறக்கும் போதே மூடக்கருத்துக்களை மூட்டையாகத் தொப்புள் கொடியில் கட்டிக் கொண்டு பிறப்பதில்லையே. அவர்களைத் தங்களுக்கு ஏற்றவளாக இந்த சமூகம் உருவாக்கி விடுகின்றது. தாங்கள் விரும்பிய மகளாக, தங்களுக்கு ஏற்ற சகோதரியாக, தங்களுக்கு ஏற்ற காதலியாக, தங்களுக்கு ஏற்ற மனைவியாக, தங்களுக்கு ஏற்ற தாயாக என்று தங்களுக்கேற்றாற் போல அவளை உருவாக்கிக் கொள்கின்றனர். அவளை அவளாக வாழ அனுமதிப்பதில்லையல்லவா?

ஏற்கெனவே நாம் உருவாக்கி வைத்திருக்கும் சாத்திரங்கள், சம்பிரதாயங்கள், கலாசாரப் போலிமைகள் எல்லாவற்றினதும் காவியாக அவளை உருவாக்கி விடுகிறோம். பெண் குழந்தையாக இருக்கும் போதே இந்த ‘புடம் போடும்’ பணி ஆரம்பித்து விடுகிறது. பெண்குழந்தையை சுய கௌரவமிக்கவளாக, தனது பிரச்சினைகளைத் தானாகவே எதிர்கொள்பவளாக, தைரியமிக்கவளாக எமது ஆண் குழந்தைகளை வளர்ப்பதைப் போல வளர்ப்பதற்கு எமது பெற்றோர்களால் முடிவதில்லை. அப்படி யாராவது ஒரு பெண் சுயமான ஆளுமையுடன் வளர ஆரம்பித்து விட்டால் அவள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் சங்கடங்களும் ஏராளம்.

இந்த நிலையில் ஈழத்தமிழ்ச் சமூகத்தில் பெண் என்பதால் அவள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை விட, போரும் அவள் மீது மேலதிகச் சுமைகளைத் திணித்து விடுகின்றது. கடந்த பத்தாண்டுகளில் போரின் காரணமாக புலம் பெய்ர்ந்த ஈழத் தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் இன்னொரு பரிமாணத்தையன. அவர்கள் அடையாளப் பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். தங்களது தனித்துவத்தை நிலைநாட்ட அவர்கள் பாரம்பரியங்களுக்குள் சென்று விடுகிறார்கள். இவர்கள் எவ்வளவுதான் முன்னேறிய சமூகத்துள் வாழ்ந்தாலும் தங்களது தனித்துவத்தை வெளிப்படுத்த கலாசாரக்காவியான பெண் தேவைப்படுகிறாள். தாலியும் குங்குமமும் வந்து சேர்ந்து விடுகின்றன. சாதியும் மதமும் இதற்குத் துணைக்கழைக்கப்பட்டு விடுகின்றன.

அங்கு பிறந்து வளர்ந்த பெண்கள் இந்தப் பாத்திரத்திற்குப் பொருந்துவது சற்றுக் கடினம் என்று தெரிந்து கொண்டதால் இங்கிருந்து பெண்களைத் தருவித்து மணம் முடித்துக் கொள்கின்றனர் பெரும்பாலான இளைஞர்கள்.

அந்த வகையில் இங்கிருந்து கூட்டிச் செல்லும் பெண்கள் அங்கு எதிர்கொள்ளும் நெருக்கடிகள் ஏராளம். அவர்கள் மேற்கு கிழக்கு என்ற இரண்டு வேறுபட்ட கலாசாரங்களுக்கிடையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவ்வாறு சிக்கித் தவித்த ஒரு பெண் சிறையிலேயே தனது சுதந்திரத்தைக் காண்கிறாள். ஜக் மோகன் முந்ராவின் Provoked திரைப்படம் அந்த உண்மைக் கதையை எங்கள் முன் கொண்டு வந்திருக்கிறது.

2001 லண்டன் திரைப்பட விழாவில் பவாந்தர் என்ற என்னுடைய திரைப்படத்தைப் பார்த்துவிட்டு மூன்று சமூக செயற்பாட்டாளர்கள் Circle of Light என்ற புத்தகத்தை வாசிக்கும்படி என்னிடம் தந்தார்கள். அவர்கள் தாங்கள் பெண்களுக்கெதிரான வீட்டு வன்முறைகள் குறித்து செயற்படுவதாக என்னிடம் தெரிவித்தார்கள். லொஸ் ஏஞ்சலுக்குப் போகும் வழியிலேயே நான் அதனை வாசித்து முடித்தேன். சிறையிலிருந்த கிரண்ஜித்திடம் “நீ எப்படி உணருகிறாய்” என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அவள் சொல்கிறாள் “நான் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறேன்” என. சிறையில் அவள் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறாள். இது திரைப்படத்திற்கு ஒரு முக்கியமான அம்சமென நான் உணர்ந்தேன். அப்போதே நான் தீர்மானித்தேன் இதனை நான் படமாக்குவதென என்று கூறுகிறார் இத் திரைப்படத்தின் நெறியாளரான ஜக் மோகன் முந்ரா.

ஏப்ரல் 2007இல் லண்டன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்தத் திரைப்படம் 1989ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை கூறுகிறது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்தவள் கிரண்ஜித். பல்கலைக்கழகம் செல்ல வேண்டும், நன்றாகப் படிக்க வேண்டும், வழக்கறிஞராக வேண்டும், உலகைச் சுற்றிப் பார்க்க வேண்மென்று பல கனவுகளைச் சுமந்து கொண்டு வாழும் தாய் தந்தையரை இழந்த 19 வயது கிரண்ஜித்திற்கு அவளுடைய கனவுகள் ஒரு நாள் முடிவுக்கு வருகின்றன. லண்டனிலிருந்து அவளுடைய உறவினனான தீபக் என்பவன் வந்ததே அதற்குக் காரணமாகி விடுகிறது. அவளது சகோதரி தீபக்கிற்கு கிரண்ஜித்தைக் கல்யாணம் செய்து வைக்கிறாள். கல்யாணத்தின் போது கிரண்ஜித் தனது சகோதரியிடம் கேட்கிறாள் எனக்கு அவனைத் தெரியாது, என்னுடைய படிப்பு என்னாவது என்று. அவன் நல்லவன் உன்னைத் தொடர்ந்து படிப்பதற்கு அனுமதிப்பான் என அவளுடைய சகோதரி கூறுகிறாள். தனது சகோதரியின் கூற்றை நம்பி கிரண்ஜித் தீபக்கை திருமணம் செய்து லண்டன் செல்கிறாள்.


ஆனால் லண்டன் வாழ்க்கை அவள் நினைத்ததற்கு மாறாக இருக்கிறது. அவள் ‘நல்ல மனைவியாக’ இருக்கவே வேண்டப்படுகிறாள். அவனுக்குப் பிடித்த உணவு வகைகளைச் செய்து வைப்பது. அவனுடைய ஆடைகளைத் தோய்த்து உலர்த்தி வைப்பது. அவனுடைய இச்சைக்கு இணங்கிப் போவது. அவனுடைய நண்பர்களுடைய கேளிக்கை விருந்துகளில் ‘நல்ல மனைவி’யைப் போல கலந்து கொள்வது. அவனுக்காகக் குழந்தையைச் சுமப்பது என்று, அவள் அவனுக்காகச் செய்பவைகள் ஏராளம். இப்படி அவனுக்காகவே தனது வாழ்க்கையை வாழ்ந்தவள் ஒரு நாள் தூங்கிக் கொண்டிருக்கும் கணவன் மீது எண்ணெய் ஊற்றி எரித்து விடுகிறாள்.

அவனுக்காகவே வாழ்ந்தவள் ஏன் அவனைக் கொலை செய்தாள்? ஏன் அவ்வாறு அவள் தூண்டப்பட்டாள்?

Provoked திரைப்படம் அதனை விரித்துச் சொல்கிறது.

வெளிப்படையாகப் பார்த்தால் அவள் ஒரு கொலைக் குற்றவாளி. அதுவும் வேறுயாரையுமல்ல, தன்னை லண்டனுக்கு அழைத்து வந்த, தனக்கென ஒரு அழகான வீட்டை வாங்கித் தந்த, தனக்கு உணவளிக்கின்ற, தனக்கு உடுபுடவைகள் வாங்கித் தருகின்ற, சினிமாவுக்கு அழைத்துச் செல்கின்ற என்று தன்னுடைய தேவைகள் எல்லாவற்றையும் கவனிக்கின்ற கணவனைக் கொன்றவள்.

இவற்றையெல்லாம் தாண்டி அவளைத் தூண்டியது எது?

அவனுடனான பத்து வருட வாழ்வில் அவள்பட்ட உடல் உள வதைகளும் வலிகளும் தான் என்று சுருக்கமாகக் கூறிவிட முடியும். ஆனால், அந்தப் பத்து வருடத்தில் என்ன நடந்தது? அவள் எவ்வாறு இம்சைப்படுத்தப்பட்டாள்? அவளுடைய உடலெங்கும் யாருக்கும் காட்டிட முடியாதபடி காயங்கள் ஏற்படக் காரணமென்ன? அவள் எப்படி கணவனாலேயே பலாத்காரப்படுத்தப்பட்டாள்? ஆணாதிக்கமும் அதனூடாகக் கிடைக்கிற அதிகாரமும் அவனுடைய சுயநலமும், பொறாமையும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை எப்படி நரகமாக்கி விடுகிறது.

இந்தக் கேள்விகளுக்கான பதில்களாக திரைக்கதை விரியும் முறை எங்களை அதிர வைக்கிறது. ஆனால், சட்டத்தின் கண்களுக்கு இவை எதுவுமே அகப்படுவதில்லை. அது மட்டுமல்ல தனது நிலையை எடுத்துச் சொல்லுமளவிற்கு அவளுக்கு துணிவையோ, ஆங்கில அறிவையோ இந்தச் சமூகம் கொடுக்கவும் இல்லை. கணவனைக் கொன்றதற்கான தண்டனையை ஏற்றுக் கொள்வதைத் தவிர அவளுக்கு வேறு வழியிருக்கவில்லை. ‘இந்த வழக்கில் தற்காப்பு என்பதைப் பயன்படுத்த முடியாது. ஏனெனில் அவள் உடல் ரீதியாகத் தாக்கப்பட்டது அவன் கொல்லப்படுவதற்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னர். ஆகவே அந்தக் கொலை தற்பாதுகாப்புக்கானதல்ல, முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்யப்பட்டது என்று நீதிமன்றம் கூறி விடுகின்றது. எனவே அவள் சிறை செல்ல நேர்கிறது. இந்த இடத்தில் தான் குறுக்கிடுகிறார்கள் Southall Black Sisters என்ற அமைப்பினர்.


Southall Black Sisters
அமைப்பு 1979ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் Southall இல் நடந்த இனக்கலவரத்தின் போது கட்டியெழுப்பப்பட்டது. இவ்வமைப்பு கறுப்பின மற்றும் ஆசியப் பெண்களுக்கான மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சட்டத்தினால் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் முகமாகவும் உருவாக்கப்பட்டது. அவர்கள் கிரண்ஜித்துக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணர்ந்தார்கள். அந்த வழக்கை மீள எடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கினார்கள். சிறையிலே இருந்த கிரண்ஜித்தைச் சந்தித்து அவளுக்கு நம்பிக்கையூட்டினார்கள். அவர்கள் கொடுத்த நம்பிக்கை கிரண்ஜித்தை தன்னுடைய கடந்த காலத்தைப் பற்றிப் பேச வைக்கிறது. ஆங்கிலத்தை சிறையிலேயே கற்பதனூடாக தன்னை தனக்கு நேர்தவைகளை அவளாகவே வெளிப்படுத்த முடிகிறது.

Southall Black Sisters உடனடியாக கிரண்ஜித்தின் விடுதலைக்காக களத்தில் இறங்கிப் போராடுகிறார்கள். ஊடகங்கள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் இந்த வழக்கில் நேர்ந்த அநீதியை மக்களுக்குக் கொண்டு செல்கின்றனர். கிரண்ஜித்திற்கு நீதி கிடைக்க வேண்டுமென்று வேண்டுகின்றனர். சிறையில் இருக்கும் சக பெண் கைதியின் சகோதரரின் உதவியுடன் கிரண்ஜித்தின் வழக்கை திரும்பவும் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்கின்றனர். கொலையை விட அவளை அதற்குத் தூண்டிய காரணங்கள் வலிமையானவை என்பது நிரூபிக்கப்படுகிறது. இவர்களின் அயராத முயற்சியின் காரணமாக இறுதியாக கிரண்ஜித் விடுதலையாகுகிறாள்.

கிரண்ஜித் வழக்கின் தீர்ப்பு பிரிட்டனின் நீதித்துறையில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திய விவகாரமானது. அவளுடைய மனுவும் வழக்கு விசாரணையும் சட்டங்கள் தொடர்பான முன்னுதாரணமானது. இவ்வழக்கு லண்டனில் வீட்டு வன்முறை தொடர்பான ஒரு முக்கியமான வழக்காக கருதப்பட்டது. அது பிரிட்டிஸ் சட்டத்திலேயே மாற்றத்தை ஏற்படுத்தியது. ‘Provoked’ எனும் சொல்லின் அர்த்தமே மறுவார்ப்புச் செய்யப்பட்டது.

பிரிட்டன் நீதிமன்றம் முதன்முறையாக ‘பொறுப்பற்ற தன்மையுடன் நடந்து கொண்டதையும், தூண்டப்படுவதற்கு காரணமாக இருந்ததையும் ஏற்றுக் கொண்டது. எப்போதும் பாதிப்புக்காளாகும் பெண் தனது எதிர்ப்பு நடவடிக்கையை உடனடியாக எடுப்பதில்லை என்பதையும் அங்கீகரித்து, காலம் தாழ்த்தியேனும் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கலாம் ஏனெனில் அவளுக்கு எப்போதும் ஒரு பயமிருக்கும், மீண்டும் தான் அவ்வாறு தாக்கப்படலாமென என்பதையும் ஏற்றுக் கொண்டது. அந்த வகையில் இத்திரைப்படம் மிக முக்கியமாகிறது.

சரிநிகர்

செப் - ஒக் 2007









No comments: