Saturday, July 4, 2009

Shooting Dogs: இனப்படுகொலை மற்றும் ஐ.நா பற்றிய அவலக் கவிதை



மென்மையான இசை உணர்வுகளை மீட்டிச் செல்லும் இந்த இயற்கை எழில் கொஞ்சும் கிராமங்களின் அழகியலை, ஆன்மாக்களைச் சிதைத்தவர்கள் யார்?

எல்லாம் எப்பொழுது ஆரம்பமாகிறது?

சொர்க்கம் எப்பொழுது நரகமாகிறது?

கீழ்மைப்படுத்தப்படுதல் பற்றிய பச்சாதாபத்திற்குரிய புரிந்துணர்வின்மையிலிருந்தே இவை எல்லாம் ஆரம்பமாகிறது. அது நாகரிகமடையாத பழங்குடி இனமோ அல்லது நாகரிகமடைந்த இனம் சார்ந்தோ ஒருபோதும் இருக்கவில்லை. எப்போதும் பேராசையும், அகந்தையும் கொண்ட வல்லரசின் கீழ் இருந்தது. இந்தப் பயங்கரமான கீழ்மைப்படுத்தலை நாங்கள் புரிந்து கொள்ள ஆரம்பிக்கும்போது, மிகவும் காலங் கடந்திருப்பதை எம்முன்னேயுள்ள யுத்த சூழல் எமக்குப் புலப்படுத்திய வண்ணம் உள்ளது.

ஜாதிக ஹெல உருமய வாளையும் கோடரியையும் கையில் எடுக்க அறைகூவல் விடுத்துள்ளது. அது என்னவோ வெளிநாட்டவருக்கு எதிரானது போலத் தோன்றினாலும் உண்மையில் சிறுபான்மையினருக்கு ஆதரவாகத் தற்போது குரல் எழுப்பும் வெளிநாட்டினருக்கு எதிராகத் தான் அந்த அறைகூவல் என்பது தற்போதிருக்கும் இலங்கை அரசியல் சூழலில் புரிய வைக்க வேண்டிய ஒன்றல்ல. இதுவே சிறுபான்மையினருக்கு எதிரான அறைகூவலாக மாறாது என்பதற்கும் எந்த உத்தரவாதமுமில்லை.

இரண்டாம் உலகப் போரின் பின்னர் மிகப் பெரும் படுகொலைக்களமான ருவண்டாவில் 1994 இல் மூன்றே மூன்று மாதங்களில் 8 இலட்சம் ருட்சி சிறுபான்மையோர் பெரும்பான்மையினராகிய ஹுட்டுவினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். அது நடந்ததும் ஒரு ஏப்ரலில்தான். இந்த அறைகூவல் விடுக்கப்பட்டிருப்பதும் அந்தப் படுகொலை நடந்து 15ஆவது ஆண்டு ஏப்ரலில் தான்.

இந்தப் படுகொலையில் பெருமளவான ருட்சி சிறுபான்மையோர் வாளால் வெட்டியும் கோடரியால் கொத்தியுமே படுகொலை செய்யப்பட்டனர். இதற்காக சீனாவிலிருந்து அன்றிருந்த ருவண்டா அரசாங்கம் மூன்று இலட்சம் வாட்களை இறக்குமதி செய்திருந்தது என்று சொல்கிற போது ஐந்தாவது தடவையாகவும் ஐநாவின் பாதுகாப்புக் கவுன்சிலில் இலங்கை விவகாரத்தை எடுப்பதற்கு சீனா தடை விதித்திருப்பதையும், இலங்கை அரசுக்குப் போதுமான ஆயுத விநியோகம் செய்வதும் ஞாபகத்திற்கு வருகிறது.

ஹெல உருமயவின் வாளைக் கையிலெடுக்க விடுக்கும் இந்த அறைகூவலும், சோசலிச(?) சீனா ஒரு நாட்டில் ஐம்பது வருடங்களுக்கு மேலாக மறுக்கபட்டிருக்கும் நமது சமத்துவமான உரிமைகள் பற்றிப் பேசத் தடையாக இருப்பதும் திரும்பவும் திரும்பவும் ருவண்டாவையே ஞாபகத்திற்குக் கொண்டு வருகிறது.

இனத்துவேசத்துக்கு ஆட்பட்ட சிறிய இனக்குழுமங்கள் பற்றிய, மனித உரிமைகள் பற்றி வாய் கிழியப் பேசும் ஐக்கிய நாடுகள் சபையினால் கைவிடப்பட்ட ஒரு இருண்ட கண்டத்தின் கறையுண்ட வரலாற்று ஆவணங்களில் ஒன்றாக அமைந்தருக்கிறது மைக்கல் கற்றன் ஜோன்ஸின் Shooting Dogs திரைப்படம்.
1994 ஏப்ரலில் ருவண்டாவில் ஹுட்டு பெரும்பான்மை இனத்தவர்களால் ருட்சி சிறுபான்மை இன மக்கள் மீது நடத்தப்பட்ட பாரிய மனிதப்படுகொலை பற்றிய பதிவாக இத்திரைப்படம் உள்ளது.

இத் திரைப்படம் ஐ.நாவின் பாராமுகம் பற்றியே அதிகமாகப் பேசுகிறது. இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்தப் படத்தின் தயாரிப்புக் குழுவில் இருப்பவர்கள் ருவண்டாவின் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பதும், அவர்கள் தங்களது கதைகளைத் தாங்களே சொல்வதும் தான். அதுமட்டுமல்லாது இனப்படுகொலையின் வரலாற்றைச் சொல்லும் அதேவேளை இனப்படுகொலையைச் சூழ நடப்பவற்றையும் இத் திரைப்படத்தில் வெளிப்படுத்துகிறார் இயக்குனர் மைக்கேல் கற்றன் ஜோன்ஸ்.

மரியா ஓடிக் கொண்டிருக்கிறாள். ஐ.நா இராணுவம் ருவண்டாவின் கிகாலியிலுள்ள ஈகொல் தொழில்நுட்பக்; கல்லூரியில் தன்னை நம்பியிருந்த இரண்டாயிரத்துக்கும் அதிகமான ருட்சி மக்களை ஹுட்டு இனத்தவர்களின் கொலை வெறிக்கு விருந்தாகக் கொடுத்து நாட்டை விட்டு வெளியேறுவதுடன் மைக்கேலின் கமெரா இயங்கு தளத்திற்கு வருகின்றது.

ஆரவாரத்துடனும், உற்சாகத்துடனும் இயங்கிக் கொண்டிருக்கிறது அழகிய மலைப்பாங்குடன் கூடிய கிஹாலி பிரதேசம். வெள்ளையின கிறிஸ்தவ பாதிரியாரான கிறிஸ்தோபரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கிறது ஈகொல் தொழில்நுட்பக் கல்லூரி. அதில் ஆசிரியனாக இருக்கிறான் உயர்ந்த இலட்சியங்களைக் கொண்ட வெள்ளையின இளைஞனான ஜோ. இந்த தொழில்நுட்பக் கல்லூரியின் வளாகத்திற்குள்ளேயே ருவண்டாவின் சமாதானத்தைக் கண்காணிக்கும் பொருட்டு ஐ.நாவால் அனுப்பப்பட்ட ஐ.நா இராணுவமும் தங்கியுள்ளது.

இந்த மகிழ்ச்சிகளை, உற்சாகங்களை, ஆரவாரங்களை குலைத்துப் போடும்படியாக அமைகிறது ஜனாதிபதி ஜுவெனல் ஹபிஅரிமானாவின் படுகொலை.

நூற்றாண்டுகளாக ருவாண்டாவில் ஹுட்டு, ருட்சி மற்றும் த்வா மக்கள் கூட்டத்தினர் ஒரே விதமான கலாசாரம், மொழி, மதம் என்பவற்றைப் பிற்பற்றுபவர்களாக இருந்தனர். 19ஆம் நூற்றாண்டில் மேற்குலகம் ஆபிரிக்காவைத் தம் மத்தியில் கொலனிகளாகப் பங்கு போட்டுக் கொண்ட போது கொங்கோவை பெல்ஜியமும், உகண்டாவை பிரிட்டனும், ருவண்டாவை ஜேர்மனியும் தமக்குள் பங்கு போட்டுக் கொண்டன. முதலாம் உலகப் போரில் ஜேர்மனியைத் தோற்கடித்த பெல்ஜியம் ஜேர்மனியிடமிருந்த ருவண்டாவைத் தனது கொலனியாக்கியது.

பெல்ஜியம் ருவண்டாவை விட்டு 1959இல் வெளியேறிய போது ஹுட்டு பெரும்பான்மையினரிடம் ஆட்சியைக் கையளித்துவிட்டு வெளியேறியது. இதன் பின்னர் நடைபெற்ற முதலாளித்துவ ஜனநாயகத் தேர்தலில் பெரும்பான்மை ஹுட்டுக்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.

தசாப்த கால சுதந்திரத்திற்குப் பின் தனிமைப்படுத்தப்பட்ட ருட்சி இனத்தவருக்கு எதிராக நிறுவனமயப்படுத்தப்பட்ட படுகொலைகளை ஹுட்டு பெரும்பான்மையினர்; நடத்தத் தொடங்கினர். நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் ருட்சிகள் ஹுட்டுக்களால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு கட்டாயமாக நாடுகடத்தப்பட்டனர்.

இதன்போதெல்லாம் ருட்சி சிறுபான்மையினர் தமது சமத்துவ உரிமைகள் வேண்டி பலமுறை பேச்சுவார்த்தைகள் நடாத்தினர். அவை யாவும் ஹுட்டுக்களால் உதாசீனம் செய்யப்பட்டதால் தோல்வியைத் தழுவின. இதனால் அதிருப்தியடைந்த ருட்சிகள் 1988இல் அடக்குமுறையை எதிர்த்து தமது உரிமைகளை வென்வென்றெடுப்பதற்காக ருவாண்டன் தேசபக்த முன்னணியை (RPF) ஆரம்பித்தனர். உகண்டாவை தளமாகக் கொண்டியங்கிய இந்த இயக்கம் 1990ஆம் ஆண்டு ஹுட்டுக்களின் ஆட்சிக்கு எதிராக தாக்குதலை ஆரம்பித்தது. எனினும் 1993 வரை படுகொலை தொடர்ந்ததோடு போரும் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

இதேவேளை இரண்டு தரப்பாரிடையேயும் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி அதிகாரப்பரவலாக்கல்; முறையில் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட வைப்பதற்கான முயற்சியில் ஐ.நா. ஈடுபட்டது. அப்போது ருவண்டாவின் ஜனாதிபதியாக இருந்த ஹபியரிமானா இதனை ஏற்றுக்கொண்டு இதற்கான பேசசுவார்த்தைக்காகத் தன்ஸானியாவுக்குச் சென்று வரும் போது 1994 ஏப்ரல் 6ஆம் திகதி விமான விபத்தில் கொல்லப்படுகிறார்.

இது விபத்தா அல்லது படுகொலையா என்ற சந்தேகம் இதுவரை தீர்க்கப்படவில்லை. ஜனாதிபதி ஹபியரிமானா சிறுபான்மையினருடன் அதிகாரங்களைப் பகிரிந்து கொள்ளத் தயாராக இருந்ததும் அதற்காகப் பேச்சுவார்த்கைளில் ஈடுபட்டதும் பெரும்பான்மையின ஹுட்டுக்களிடையே அதிருப்தியைத் தோற்றுவித்திருந்தது. அந்தப் பெரும்பான்மை அதிருப்தியாளர்கள் தான் ஜனாதிபதியைக் கொன்றனர் என்ற அபிப்பிராயமும் நிலவுகிறது. மறுபுறத்தில் ருட்சி கெரில்லாக்களின் விமானத் தாக்குதலில் தான் இவர் கொல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் ருட்சி இனப் போராளிகளான ஆர்.பி.எப்தான் தமது ஜனாதிபதியைக் கொலை செய்தார்கள் என்பதன் அடிப்படையில் ஹுட்டு பெரும்பான்மை இனத்தவர்கள் இராணுவத்தினதும், அரசியல்வாதிகளினதும் உதவியுடன் ருட்சிக்களின்மேல் இனப்படுகொலைகளை மேற்கொள்கிறார்கள். ருட்சிகளினுடைய இருப்பிடங்கள் பற்றி ஏற்கெனவே தயாரிக்கப்பட்டிருந்த அட்டவணைக்கேற்பவும், அடையாள அட்டையின் இனப் பாகுபாட்டிற்கேற்பவும் ருட்சி மக்களின் இருப்பிடங்கள் கண்டு பிடிக்கப்பட்டு குடும்பங் குடும்பமாக வாள்களால் வெட்டியும், சுட்டும் படுகொலை செய்கிறார்கள். றுவாண்டாவின் தெருவெங்கும் பிணங்கள் குவிந்திருந்தது. இது ஆர்.பி.எப்பை அழிப்பதற்கான நடவடிக்கையாகக் கூறிக் கொள்ளப்பட்டபோதும் ஆர்.பி.எப்பை அழிப்பதன் பேரில் அப்பாவிப் பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள்.

ஏற்கெனவே சிறுபான்மையினருக்கு எதிராக பெரும்பான்மையினரின் கட்டுப்பாட்டில் இருந்த ஊடகங்கள் இனவாதத்தை வளர்த்து விட்டிருந்தன. ருட்சிகள் எதியோப்பியாவிலிருந்து வந்தவர்கள் என்கிற கருத்து நிலவுவதனால் அவர்களை ‘எதியோப்பியாவுக்கே திருப்பி அனுப்புவோம்’, ‘கரப்பான்களைப் போல் நசுக்கிக் கொல்லுவோம்’ என்ற கோசம் பிரபலப்படுத்தப்பட்டது. (சிறுபான்மையினரான ருட்சிகள் கரப்பான் பூச்சிகள் என்றே ஹுட்டுக்களால் அழைக்கப்பட்டு வந்தனர்.)

ஜனாதிபதியின் படுகொலையை அடுத்து ருட்சி கரப்பான் ப10ச்சிகளைகளை ஒழிக்கும் காலம் வந்து விட்டது என பெரும்பான்மையினரின் கட்டுப்பாட்டிலிருந்த மில்கொலின்ஸ் சுதந்திர வானொலியே பிரச்சாரத்தை ஆரம்பித்து படுகொலையை ஆரம்பித்து வைத்தது.

தமது உயிரைக் காப்பாற்றும் பொருட்டு மக்கள் தேவாலயங்கள், பாடசாலைகள் என பலவற்றில் தஞ்சம் புகுகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் ஈகொல் தொழில்நுட்பக் கல்லூரியில் தஞ்சம் கோருகிறார்கள். ஐநா படைகள் அங்கிருப்பதால் தாம் பாதுகாக்கப்படலாம் என நம்புகிறார்கள். ஆனால் ஐ.நா அமைதிப் படையின் இராணுவ கப்டன் இது ஒரு இராணுவ முகாம் என்றும் அவர்களை அங்கு தங்க வைக்க முடியாதெனவும் மறுக்கிறான். எனினும் பாதிரியார் கிறிஸ்தோபர் அந்த மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு தமக்கிருப்பதாகக் கூறி அந்த மக்களை உள்வாங்கிக் கொள்கிறார்.

இந்த மக்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக, மனிதாபிமானம் கொண்ட மனித ஆத்மாக்களாக பாதிரியார் கிறிஸ்தோபரும், ஆசிரியன் ஜோவும் இருக்கிறார்கள். கிஹாலியில் நடந்து கொண்டிருப்பவற்றை உலகிற்குக் காட்டுவதற்கு விரும்புகிறான் ஜோ. அதற்காக பி.பி.சியின் உதவியை நாடலாமென பாதிரியாரிடம் கூறுகிறான். தனது பிபிசி நண்பியான ரேச்சலை அழைத்து வர ஜோ செல்கிறான். முதலில் தனக்கு வேலை இருக்கிறதெனக் கூறி மறுக்கும் ரேச்சல் பின் ஐரோப்பியர்களும் அங்கு சிக்கியுள்ளார்களென்றதும் வரச் சம்மதிக்கிறாள்.

வரும் வழியில் ஹுட்டுக்களால் வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டு முட்டுக்காலில் விடப்படுகிறார்கள். அப்போது ருட்சிக்களை வாள்களால் வெட்டிக் கொல்லும் காட்சியைக் காண்கிறான் ஜோ. அந்தச் சூழல் அவனை உறைந்து போகச் செய்கிறது. அதைவிட அதைச் செய்பவர்களில் ஒருவன் தனது நண்பனும், கல்லூரியின் வாகன சாரதியுமான பிரான்கொஸ் என காணும் போது அதிர்ச்சியில் உறைந்து போகிறான்.

பிரான்கொஸ் அவர்களைப் போகும்படி கூறும்போது தன்னிலையிலில்லாதவனாக வானகத்தை ஓட்டிச் செல்கிறான். வரும் வழியெங்கும் பிணங்கள் வெட்டிக் குவிக்கப்பட்டிருக்கின்றன. இனப்படுகொலைகளின் கொடுரங்களை பி.பிசி பதிவு செய்கிறது. தொழில்நுட்பக் கல்லூரி சுற்றிவர கொலை வெறிகொண்ட ஹுட்டு காடையர்களால் சு10ழப்பட்டு ருட்சிக்கள் தப்பிக்க வழியில்லாமல் தடுக்கப்பட்டிருக்கிறது. தொழில்நுட்பக் கல்லூரிக்குள் இருக்கும் ருட்சிக்களை வெளியில் அனுப்புமாறு கையில் கோடரியுடனும் வாளுடனும் ஆரவாரத்துடன் கோசமிட்டபடி இருக்கின்றனர்.

ஜோவினால் அழைத்துவரப்பட்ட பிபிஸி செய்தியாளர் ஐ.நாவின் இராணுவக் கப்டனை நேர்காணும் போது ருட்சிகளையும் அவர்களை ஆதரிப்போரையும் ஹுட்டுவினர் கொலை செய்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்ளும் கப்டன், சிலர் இதனை இனப்படுகொலை என்கிறார்களே நீங்கள் அவ்வாறு அழைப்பீர்களா என்று கேட்டவுடன் பதிலளிக்க முடியாமல் தடுமாறுகிறான். இது இனப்படுகொலை என்றால் அதில் தலையிட்டு அதனைத் தடுக்க வேண்டிய கடப்பாடு ஐநாவுக்கு இருக்கிறதல்லவா என்று கேட்டதும் கோபமடைந்த கப்டன் கமெராவை நிறுத்துமாறு கத்துகிறான். தான் ஐநாவின் பாதுகாப்புக் கவுன்ஸில் அல்ல என்றும் அதன் ஆணையின்படி செயற்படும் ஒருவன் மட்டுமே என்றும் வேண்டுமானால் நியூயோர்க்குடன் தொடர்பு கொண்டு அதன் ஆணையை மாற்றுங்கள் என்றும் கோபத்துடன் கூறுகிறான்.

நோய்வாய்ப்பட்டிருக்கும் குழந்தைக்கு மருந்து வாங்கும் பொருட்டு வெளியில் செல்லும் பாதிரியார் கிறிஸ்தோபர் மருந்து விற்பனை செய்பவனின் வீட்டில் கொலை செய்யப்பட்ட ருட்சிகளின் பிணங்களைக் காண்கிறார். மருந்து ஹுட்டுவிற்கா ருட்சிக்கா என மருந்து விற்பவன்; கேட்கிறான். ஹுட்டுவிற்கு எனசொல்லியதாலும் அதிக பணம் கொடுத்ததாலும் அவருக்கு மருந்து கிடைக்கிறது. வரும் வழியில் கிறிஸ்தவ சகோதரிகள் தங்கியுள்ள கொன்வென்ட்டிற்குச் செல்லும் அவர் அங்கே ருட்சிகளான அந்த சகோதரிகள் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொடுரமாக வெட்டிக் கொல்லப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து போகிறார். திரும்பி வரும் தெருவெங்கும் இரத்தத்தில் உறைந்து போயிருந்த ருட்சி மக்களின் பிணங்களை நாய்கள் தின்று கொண்டிருக்கின்றன.

இந்தப் படுகொலைகளின் தீவிரத்தைத் தாங்க முடியாமல் மனங் கொதித்துப் போய் தள்ளாடியபடி திரும்பும் கிறிஸ்தோபரிடம், இந்த வன்செயல்களால் கிஞ்சித்தும் சலனப்படாத ஐ.நா இராணுவக் கப்டன் தெருவில் கிடக்கும் பிணங்களை நாய்கள் தின்னுவதனால் சுகாதாரக்கேடு எனவும் அவைகளைத் தாம் கொல்லப் போவதாகவும் அதனால் மக்களை பயப்படாமல் இருக்கும்படி கேட்டுக் கொள்ளும்படி கேட்கிறான்.

வெகுண்டெழுந்த பாதிரியார் கிறிஸ்தோபர் அவனைத் திருப்பிக் கேட்கிறார் இந்த நாய்களைக் கொல்வதால் பிரச்சினை தீராது. புதுப்புதுப் பிரச்சினைதான் உருவாகும். பதிலாக (தொழில்நுட்பக் கல்லூரியின் வாசலுக்கு வெளியே வாட்களுடனும், கோடரிகளுடனும் ருட்சிகளைக் கொல்வதற்காக ஆரவாரத்துடன் காத்திருக்கும் ஹுட்டு கொலை வெறிக் கும்பலை நோக்கியபடி) அந்த நாய்களை உன்னால் கொல்ல முடியாதா? தெருநாய்களைக் கொல்லத்தான் உன்னால் முடியும். இந்த வெறிநாய்களை அல்ல. உனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரம் அப்படி. அவரிடமிருந்து காட்டமாக வரும் பதிலால் கப்டன் அதிர்ந்து போகிறான்.
இந்தக் கேள்வியின் மூலம் வெட்டப்பட்டுக் கிடக்கும் பிணங்களை தின்னும் தெருநாய்களை சுகாதாரக்கேடென்று சுட முனையும் ஐ.நா படையினர் இவ்வளவு மக்களும் படுகொலை செய்யக் காரணமாக இருந்த வாளோடு திரியும் நாய்களை நோக்கி ஒருபோதும் துப்பாக்கியைத் திருப்பியதில்லை என்பதை மட்டுமல்ல, அப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்தக் கூட அவர்களால்; முடியவில்லை என்பதைத் துல்லியமாக விளக்குகிறார் இயக்குனர் மைக்கல் ஹற்றன் ஜோன்ஸ். இதனையே படத்தின் தலைப்பாகவும் அவர் கொண்டு வருகிறார்.

இந்த சம்பவத்தின் பின் முகாமிலுள்ளவர்களின் உணவுத் தயாரிப்பிற்காக எரிப்பதற்கு விறகு கேட்கும் மரியாவிடம் கல்லுரி வளாகத்தினுள் அவளை அழைத்துச் சென்று பைபிள்களை எடுத்துக் கொடுத்து விறகாகப் பயன்படுத்தும்படி கூறுகிறார் பாதிரியார் கிறிஸ்தோபர்.

இந்தவேளையில் கல்லூரிக்குள் சிக்குண்டிருக்கும் ஐரோப்பியர்களை அவர்களுடைய நாடுகளுக்கு அனுப்ப பிரான்ஸ் இராணுவம் வருகிறது. அவர்களிடம் தங்களையும் காப்பாற்றும்படி இறைஞ்சிக் கேட்கும் கறுப்பின மக்களை ஏறெடுத்தும் பார்க்காத பிரான்ஸ் இராணுவம் ஐரோப்பிய ஆண், பெண்களைத் திருமணம் செய்த ருட்சியினரையும் இந்த மக்களுடன் விட்டு விட்டு தாம் வந்த கடமையை நிறைவேற்றும் பொருட்டு வெள்ளையின மக்களை மட்டும் ஏற்றிக் கொண்டு புறப்படுகிறது. அவர்களுடன் பி.பி.சி செய்தியாளர்களும் செல்கின்றனர். பி.பி.சியின் கடமையும் இத்துடன் முடிந்து போகிறது.

இன்னொரு சந்தர்ப்பத்தில் பாதிரியார் கிறிஸ்தோபர் ஐநா இராணுவக் கப்டனிடம் கேட்கிறார். ஹுட்டுக்கள் ஏன் ஐநா இராணுவத்தைக் கொன்றார்கள். அவர்கள் ஒன்றும் முட்டாள்களில்லையே. அவர்கள் அதன் விளைவுகளை அறிவார்கள் தானே?

கப்டன் சொல்கிறார். அவர்கள் விளைவுகளை அறிவார்கள். அந்த விளைவுகளை எதிர்பார்த்தே அவர்கள் செய்தார்கள். சோமாலியாவில் 30 ஐநா இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஐநா அங்கிருந்து வெளியேறியது. இங்கு 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அப்படியானால் இங்கிருந்தும் ஐநா வெளியேறுமா! எனக் கேட்கிறார் பாதிரியார் கிறிஸ்தோபர்.

நான் ஒரு சிப்பாய் மட்டுமே! என்கிறான் கப்டன்.

கப்டன் கூறியதற்கு ஏற்ப நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஆயத்தமாகிறது ஐநா இராணுவம். ஆனால் மக்கள் தங்களைக் காப்பாற்றும்படி அல்லது அழைத்துச் செல்லும்படி கதறுகிறார்கள். ஐ.நா இராணுவத்தின் வாகனங்களின் முன் விழுந்து அவர்களைப் போகவிடாமல் தடுக்கிறார்கள். தாங்கள் கைவிடப்பட்டால் ஹுட்டுக்களால் கொல்லப்படுவோம் எனக் கதறுகிறார்கள்.

மரியாவின் தந்தை கப்டன் சார்ள்ஸிடம் கேட்கிறான். ‘‘நீங்கள் போவதானால் எங்கள் எல்லோரையும் சாகடித்து விட்டுப் போங்கள். நாங்கள் வாள்களால் வெட்டுப்பட்டுச் சாக விரும்பவில்லை. எங்களை உங்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுங்கள். அதற்கு நாங்களே பொறுப்பென எழுதிக் கையொப்பமிட்டுள்ளோம். பெரியவர்களைக் கொல்லாவிட்டாலும் சிறுவர்களையாவது கொன்று விட்டுச் செல்லுங்கள். எங்களின் கண்களின் முன் எங்கள் பிள்ளைகள் வெட்டுப்பட்டுச் சாவதை நாங்கள் விரும்பவில்லை’’ என்று இறைஞ்சுகிறான். ஐ.நா. இராணுவமா இந்த இறைஞ்சல்களுக்கெல்லாம் உருகப் போகிறது. அந்த அதிகாரம் தனக்கு வழங்கப்படவில்லையெனக் கூறி இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ருட்சி மக்களை அனாதரவாக விட்டு விட்டு தொழில்நுட்பக் கல்லூரியை விட்டு வெளியேறுகிறது.

வன்னியிலும் ஐ.நா. மனிதாபிமானப் பணியாளர்களை வெளியேற்றுவதற்கும் சிறிலங்கா அரசால் இவ்வாறான ஒரு வழிமுறையே பின்பற்றப்பட்டது. மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்பட்டதும் தமது பணியாளர்களை அங்கிருந்து வெளியேறுமாறு ஐ.நா. பணித்தது. ஐ.நா. வெளியேறியதும் தம் மீது படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்படும் என்று மக்கள் கதறி ஐ.நாவைத் தடுத்தும் கூட அது அங்கிருந்து வெளியேறியது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. வெளியேறியதும் அவ்வளாகத்தைச் சுற்றி கையில் வாளுடனும் கோடரியுடனும் நிற்கும் ஹுட்டுக்கள் வளாகத்தினுள் நுழைந்து படுகொலையில் இறங்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்த பாதிரியார் தனது கையாலாகா நிலைமையை உணர்கிறார். சிறுவர்களையாவது காப்பாற்றும் பொருட்டு தனது வாகனத்தின் பின்புறத்தில் மரியா உட்பட பல சிறுவர்களை ஏற்றி படங்கினால் அவர்களை மூடி வெளியே கொண்டு செல்கிறார்.

வழியில் அவரை மறிக்கும் ஹுட்டு இனத்தவனால் அவர் படுகொலை செய்யப்பட, மரியா மற்ற சிறுவர்களையும் தப்ப வைத்து தானும் தப்பி ஓடுகிறாள். பிணங்களைக் கடந்து கடந்து ஓடிக் கொண்டேயிருக்கிறாள். அந்தக் காட்சியை ஒட்டியவாறே ருவண்டாவில் இனப் படுகொலை நடக்கவில்லையென ஐ.நாவால் கூறப்படும் கருத்தினையும் இயக்குனர் காட்சிப்படுத்தியிருப்பது, ஐ.நாவின் கீழ்த்தரமான செயலை ஆணித்தரமாக, ஆதாரத்துடன் நிரூபிப்பது போல் உள்ளது.

புதிதாகப் பிறந்த குழந்தைகளை, கர்ப்பிணிப் பெண்களை கருவுடன் சிதைத்து இறைச்சிக்கு மிருகங்களை அறுப்பதுபோல் அறுத்துத் தள்ளியபோது ஐ.நா பாராமுகமாக, அதிர்ச்சியற்ற நிலையில் பார்த்துக் கொண்டிருக்கிறது. பின் அங்கு ஒரு இனப்படுகொலையே நடக்கவில்லை என்கிறது.

பல சமயங்களில் ஐ.நா இராணுவத்திடம் ருட்சிகளால் உதவிகள் கோரப்படும் போதெல்லாம் இந்தப் பிரச்சினையில் தலையிட தமக்கு அதிகாரம் இல்லை, தாம் சமாதானத்தைக் கண்காணிப்பதற்காக மட்டுமே அங்கு வந்திருப்பதாகக் கூறித் தட்டிக் கழித்து விடுகின்றது. ருட்சிக்கள் கொல்லப்படுவதைத் தட்டிக் கேட்க தமக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை என்று கூறிய சமாதானத்தை மட்டும் கண்காணிப்பவர்களான ஐ.நா. பிரச்சினைகளுக்குள் ஆட்படாத வெள்ளையர்களைக் காப்பாற்றி அவர்களை அவர்களுடைய நாடுகளுக்கு பாதுகாப்பாக அனுப்புவதில் மும்முரமாக ஈடுபட்டு அவரவர் நாடுகளுக்குப் பாதுகாப்பாக அனுப்பியும் வைத்தது. இதனை என்னவென்பது. இங்கே ஹுட்டுக்களின் இனவெறி மட்டுமல்ல, ஐ.நாவின் நிறவெறியும், பாராமுகமும் கூட கைகோர்த்துள்ளமையை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டியிருக்கிறதல்லவா?

படத்தின் இறுதிக் காட்சியில் மரியா ஓடிக் கொண்டிருப்பது போல வன்னியில் நமது மக்களும் ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். கொல்லப்பட்டுக் கிடக்கும் சடலங்களைக் கடந்து காயப்பட்டுக் கிடக்கும்
மனிதர்களில் முட்டி மோதி ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள் திசையறியாது அநாதரவாக நிர்க்கதியாக!

globaltamilnews.com
05.05.2009



No comments: