Sunday, September 23, 2007

ஆமைகளாலும் பறக்க முடியும்!


போரில் முதற்பலி உண்மை என்பார்கள். அது உண்மை தான். ஆனால் அந்த உண்மை பலியாகும் போதே இன்னும் இரண்டு தரப்பினர் கூடவே பலியாகி விடுகிறார்கள். பல்வேறு காரணங்களால் நாம் அவர்களைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. ஒரு தரப்பினர் சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்கள். மறுதரப்பினர் எதுவுமே அறியாத சிறுவர்கள். உலகில் எங்கெங்கெல்லாம் போர் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் இந்தப் பலி கொள்ளல் நடந்தேறி விடுகிறது. ஆனால் இந்த இரு தரப்பினரும் சமூகத்தில் குரலற்றவர்களாக இருப்பதால் இவர்கள் பலி கொள்ளப்படும் சம்பவங்கள் பெருமளவில் வெளிவருவதில்லை. சிறுவர்களையும் பெண்களையும் பாதுகாக்க பல்வேறு அமைப்புக்களும், பல்வேறு சாசனங்களும் உருவாக்கப்பட்டாலும் அவற்றால் இவர்களைப் பாதுகாக்க முடியாத கையறு நிலைமையே இன்று வரை காணப்படுகிறது.

இந்தக் குரலற்றவர்களின் குரலாக இருக்க விரும்பியவர்களுள் ஒருவர் தான் பக்மன் ஹோபாடி. இவர் குர்திஸ் திரைப்பட நெறியாளர். குர்திஸ் திரைப்படத்தின் முன்னோடி என்று சொல்லப்படும் குணேக்குப் பின்னர் குர்திஸ் திரைப்படம் குறித்துப் பேச வைத்த இன்னொரு நெறியாளர் இவர். அவருடைய அண்மைய திரைப்படம் Turtles Can Fly (ஆமைகளாலும் பறக்க முடியும).

துருக்கி, ஈரான், ஈராக் ஆகிய மூன்று நாடுகளுக்குள்ளும் சிதறுண்டு அல்லற்படுகிற மக்களுடைய வாழ்க்கை தான் குர்திஸ் மக்களுடைய வாழ்க்கை. அவர்களுடைய விடுதலைக்கான போர் தசாப்தங்களாகத் தொடர்ந்து வருகிறது. அவர்கள் துருக்கியிடமிருந்து தங்களுடைய தேசத்தை விடுவிக்க வேண்டி இருக்கிறது. ஈரானிடமிருந்து தங்களுடைய தேசத்தை விடுவிக்க வேண்டி இருக்கிறது. ஈராக்கிடமிருந்தும் தங்களுடைய தேசத்தை விடுவிக்க வேண்டி இருக்கிறது. ஆக போரே வாழ்க்கையாகி விடுகிறது.
போரே வாழ்க்கையான பிறகு எஞ்சுவது எதாகவிருக்கப் போகிறது? வாழ்வு தொலையும். உறவுகள் தொலையும். இருப்பிடம் தொலையும், அயல் தொலையும், இப்படி எல்லாம் தொலைந்த பிறகு எஞ்சுவது சர்வதேச தொண்டர் ஸ்தாபனங்கள் பெருமனத்துடன் வழங்குகிற கூடாரமும், பிச்சாபாத்திரமும் தானே? அவர்கள் மிக நாகரிகமாக இடம் பெயர்ந்தோர் என்று சொல்லும் அகதி வாழ்க்கை தானே? அதே இந்த மக்களுடைய வாழ்க்கை ஆகி விடுகிறது.

ஈராக் - துருக்கி - குர்திஸ் எல்லையிலும் அது தான் நடந்தது. 1988இல் சதாம் ஹீசைன் வட ஈராக்கிலுள்ள நூற்றுக் கணக்கான குர்திஸ் கிராமங்களை தரை மட்டமாக்கினார். இரசாயன ஆயுதங்களையும் இயந்திரத் துப்பாக்கிகளையும் கொண்டு ஆயிரக்கணக்கான குர்திஸ் இனமக்களைக் கொன்று குவித்தார். குர்திஸ் மக்கள் மீது ஈராக் நடாத்திய அடாவடித்தனமான போரில் கொல்லப்பட்டோரும், காயப்பட்டோரும், பாலியல் வன்புணர்வுக்காளானோரும் எண்ணிலடங்கார்.

அதேவருடத்தில் தான் அமெரிக்க விவசாய விளைபொருட்களை வாங்குவதற்காக 500 மில்லின் டொலர்களை அமெரிக்க அரசாங்கம் அவருக்கு மானியமாக வழங்கியுள்ளது. குர்திஸ் இனமக்களுக்கெதிரான இந்தப் படுகொலையை வெற்றிகரமாக நடாத்தி முடித்த அடுத்த ஆண்டில் மானியத் தொகையை இருமடங்காக்கி ஒரு பில்லியன் டொலர்களை அமெரிக்கா சதாமுக்கு வழங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது மட்டுமல்லாது அந்திராஸ் கிருமிகளை உற்பத்தி செய்யும் உயர்தர நுண்ணுயிர் வித்துக்களையும் ஹெலிகொப்டர்களையும் இரசாயன உயிரியல் ஆயுதங்களை உற்பத்தி செய்யத் தேவையான இடு பொருட்களையும் சதாமுக்குக் கொடுத்ததும் அமெரிக்காதான்.

சதாம் மிக மோசமான அட்டுழியங்கள் செய்து வந்த காலத்தில் தான் அமெரிக்க, பிரிட்டிஷ் அரசாங்கங்கள் அவருடைய நெருங்கிய கூட்டாளிகளாக இருந்து வந்தன.

இன்று மனித உரிமை மீறலில் உலகில் முன்னணியிலிருக்கும் துருக்கிய அரசாங்கம் அமெரிக்காவின் நெருங்கிய நண்பன். துருக்கிய அரசாங்கம் பல ஆண்டுகளாக குர்திஸ் இன மக்களை நசுக்கிப் படுகொலை செய்து வருகிறது என்ற உண்மை தெரிந்தும் கூட அந்த நாட்டிற்கு வழங்கும் ஆயுதங்களையும் வளர்ச்சி நிதியையும் அமெரிக்கா நிறுத்தவில்லை.

பின்னர் அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்த போது அது தன்னை குர்திஸ் மக்களின் நண்பனாகக் காட்ட முனைந்தது. குர்திஸ் மக்களுடைய எதிரி தமக்கும் எதிரி என்று புனைய ஆரம்பித்தது. ஆனால் மேற்சொன்ன தகவல்கள் குர்திஸ் இன மக்களின் மீதுள்ள அக்கறையினால் ஜனாதிபதி புஷ் ஈராக்கின் மீது யுத்தம் தொடுக்கவில்லை என்பதை எமக்குப் புலப்படுத்துகிறது.

பக்மன் ஹோபாடி இந்த அரசியற் பின்புலங்களை நன்கு அறிந்த ஒரு நெறியாளர் என்பதை அவருடைய திரைப்படங்கள் புலப்படுத்துகின்றன.

அக்ரின், ரெஹா, ஹென்கோர், பசோ, சற்றலைற் என்று பதினைந்து வயதிற்குட்ட சிறுவர்கள் தான் அவருடைய Turtles Can Fly திரைப்படத்தின் கதாபாத்திரங்கள். அவர்கள் எல்லோரும் அகதிகள். அங்குள்ள முகாம்களில் வசிப்பவர்கள். பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயதேயான சிறுமி அக்ரின், ரெஹா என்கிற குழந்தையை எப்போதும் முதுகில் சுமந்து திரிபவள். அவளுடைய சகோதரன் ஹென்கோர் இரண்டு கைகளையும் போரில் இழந்தவன். அவர்களுடைய தாயையும் தந்தையையும் போர் காவுகொண்டு விட்டது. சற்றலைற் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவன் தான் அங்குள்ளவர்களில் வயது கூடியவன், பல விடயங்களை அறிந்தவன். அறிந்ததாகக் காட்டியும் கொள்பவன். போரைப்பற்றிய செய்திகளை அறிய அன்ரனாவுடனான தொலைக்காட்சி போதாது என்று சொல்லி ஒவ்வொரு அகதிமுகாமிலும் சற்றலைற் டிஷ் வாங்கச் சொல்லி அறிவுறுத்துபவன். அதனைப் பூட்டிக் கொடுக்கும் தொழில்நுட்பம் அறிந்தவன். அதனாலேயே அவன் சொந்தப் பெயர் மறைந்து சற்றலைட் என்று அறியப்படுபவன். அவனுக்குத் துணையாக இரு சிறுவர்கள். ஒருவன், ஒரு காலைக் கண்ணிவெடியில் இழந்த பசோ. ஊன்றுகோலே அவனது மறுகால். மற்றையவன் எட்டோ ஒன்பதோ வயதான சிறுவன். இவர்களோடு ஒரு சிறுவர் பட்டாளம்.

இவர்கள் தமது வாழ்க்கையை எப்படி வாழ்கிறார்கள்? அகதி முகாமில் தருகிற அற்ப நிவாரணத்தைத்தவிர எப்படி அவர்கள் உழைக்கிறார்கள்? சிறுவர் உழைப்பைப் பற்றியும், சிறுவர் உரிமைகளைப் பற்றியும் பேசும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைமையகங்கள் இருக்கும் நாடுகளினால் விற்கப்பட்டு, போரில் ஈடுபடும் நாடுகளினால் அந்தப்பிரதேசங்களில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை எடுத்து விற்கிறார்கள். கண்ணிவெடிகளை எடுப்பதற்கு சிறுவர்களைக் குழுக்குழுவாகப் பிரித்துவிடுவது, அவர்கள் எடுத்துவரும் கண்ணிவெடிகளை விற்றுக் கொடுப்பது என்று எல்லாவற்றையும் 'எல்லாமும் அறிந்த' சற்றலைற்றே செய்கிறான். அப்பிள் பழங்களைப் பொறுக்குவதற்கு முதுகில் கூடையைச் சுமந்து செல்வது போல காலையில் இந்தச் சிறுவர்கள் முதுகில் கூடை சுமந்து செல்கிறார்கள் கண்ணிவெடி அகற்ற.

"எவ்வளவு காலம் குர்திஸ்தானில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தது என்று தெரியாது. எனது தாயார், பாட்டி போன்றவர்கள் இதைப் பற்றிப் பல கதைகள் கூறியுள்ளனர். கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்தே குர்திஸ்தான் ஒரு கண்ணிவெடி விதைப்புப் பிராந்தியமாக இருந்து வருகிறது. அமெரிக்க, ஐரோப்பிய ஆயுத உற்பத்தியாளர்கள் அவற்றைச் சர்வாதிகாரிகளாகிய சதாம் போன்றோருக்கு விற்றதன் விளைவே அவை. இவை அகற்றப்பட்ட பூமியாக குர்திஸ்தான் மாற நீண்ட காலம் எடுக்குமென நான் நினைக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்தியாலமும் அப்பாவி ஏழைகள் கண்ணிவெடிகளுக்கு இலக்காகி கொல்லப்பட்டோ, முடமாக்கப்பட்டோ வருகிறார்கள்" என்று இத்திரைப்படத்தின் நெறியாளரான பக்மன் ஹோபாடி ஒரு நேர்காணலில் கூறுகிறார்.


படத்தில் இன்னொரு விடயம் முக்கிய இடம் பிடிக்கிறது. அது தான் ஊடகங்கள். அதுவும் தொலைக்காட்சிகள். முகாம்களில் வாழும் குர்திஷ் மக்கள் போரைப்பற்றிய செய்திகளை அறிவதற்கு தொலைக்காட்சிகளையே நம்பி இருக்கிறார்கள். ஆனால் தொலைக்காட்சியில் அவர்களுடைய மொழியில் செய்திகள் இல்லை. அவர்களுக்குப் புரியாத மொழியான ஆங்கிலத்தில் தான் செய்திகள் வருகின்றன. அவர்கள் மிகச்சிரமப்பட்டு பணம் சேர்த்து வாங்கிப் பூட்டும் சற்றலைட் டிஷ் கூட அவர்களுக்கான செய்தியையோ, அவர்களுடைய பிரதேசம் பற்றிய செய்தியையோ தருவதில்லை. ஆனாலும் தொலைக்காட்சி முன் காத்திருக்கிறார்கள். நவீன தொழில் நுட்பம் அவர்களைக் காத்திருக்க வைத்திருக்கிறது. அது அவர்களுக்கானதாக இல்லை. அவர்களிடமிருந்து பணம் பிடுங்குவதானதாக மட்டுமே உள்ளது என்பதை மிக அழகாக திரைப்படத்தில் கொணர்ந்திருக்கிறார் பக்மன் ஹோபாடி.

ஆனால் படத்தின் மையம் கண்ணிவெடிகளோ ஊடகங்களோ அல்ல. அந்தப் பதின்ம வயதுச்சிறுமி. அவள் காவிக்கொண்டு திரிகிற அந்தக் குழந்தை. அது அவளுடைய குழந்தையா என்றால் ஆம். இல்லை என்றால் இல்லை. அவள் ஒரு போது அந்தக் குழந்தையிடம் அன்பு பாராட்டுகிறாள். உணவூட்டுகிறாள். தாலாட்டுகிறாள். இன்னொரு கணமோ தன்னுடைய குடும்பத்தையும், தன்னுடைய வாழ்க்கையையும் அழிக்க வந்து சேர்ந்த ஒன்று என அதனைத் திட்டுகிறாள். அதனை இரத்தக்காயம் வருமளவுக்கு அடிக்கவும் செய்கிறாள். இது ஏன்?

படத்தின் ஆரம்பக்காட்சியின் போதே மலைப்பாங்கான அப்பிரதேசத்தின் மலைமீது ஏறி குதித்து தற்கொலை செய்கிறாள் அக்ரின் என்ற அந்தச் சிறுமி. காட்சி பின்னகர்ந்து கதை சொல்ல ஆரம்பிக்கிறது.

ஒருமுறை நள்ளிரவில் முகாமை விட்டு வெளியேறி சற்றுச் தொலைவிலுள்ள குளத்தில் இறங்குகிறாள். தன்னுடன் எடுத்து வந்த மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தனது துப்பட்டாவில் நெருப்பைப் பற்ற வைக்கிறாள். குளத்தின் கரையில் நின்று குழந்தை அம்மா என்று அழைக்கிறது. ஒரு கணம் ஒரே கணத்தில் நீரில் அமிழ்ந்து தன்னைச் சுற்றிப் படர்ந்த தீயை அணைத்துவிட்டு லாம்பையும் தூக்கிக் கொண்டு முகாமுக்கு விரைகிறாள். அங்கு குழந்தை சகோதரனுடன் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறது.

ஒரு நாள் அவள் தனது சகோதரனிடம் கேட்கிறாள்:

சிறுமி: நான் சோர்ந்து போயிட்டேன். நாங்கள் இங்கிருந்து எப்போது போகிறோம்?

சகோதரன்: விரைவில் போவோம்.

சிறுமி: இனி ஒருபோதும் இங்கிருக்க என்னால் முடியாது. நாங்கள் இங்கை என்ன செய்து கொண்டிருக்கிறோம்? ஏன் எங்களாலை போக முடியாமல் இருக்கு?

சகோதரன்: நான் ஒரு கனவு கண்டேன். நாங்கள் இரண்டு, மூன்று நாட்களில் போய்விடுவோமென. பிள்ளைக்கு குணமானதும் நாங்கள் போவோம்.

சிறுமி: பிள்ளைக்கு குணமாகுமட்டும் இருக்கிறதென்றால் நீ இரு, நீ வராவிட்டால் நான் போகிறேன்.

சகோதரன்: மெதுவாகப் பேசு. பிள்ளை எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும். உனக்கு நான் எவ்வளவு தரம் சொல்வது?

சிறுமி: எல்லாரும் போகிறார்கள். நாங்கள் மட்டும் இருக்கிறோம்.

சகோதரன்: நீ ஒவ்வொரு நாளும் போக வேணுமென்று சொல்கிறாய். இப்ப ஏன் நீ போக வேணும்? போறதெண்டால் போ.

சிறுமி: நான் எப்படித் தனியப் போக முடியும்? நீ எப்படி இந்தப் பிள்ளையைப் பார்த்துக் கொள்வாய்? பிள்ளையை விட்டுட்டுப் போகலாம், நாங்கள் இந்தப் பிள்ளையை விட்டுட்டுப் போனால் யாராவது இந்தப் பிள்ளையை எடுத்து வளர்ப்பினம்.

சகோதரன்: இல்லை, நாங்கள் சேர்ந்தே போவோம்.

சிறுமி: நாங்கள் அவனையும் கொண்டு போக முடியாது. சனங்களிடம் நாங்கள் என்ன சொல்வது? இவன் எப்படிப் பிறந்தான் என்று சொல்வது? அல்லது நாங்கள் அவனை றோட்டிலை கண்டெடுத்தோம் என்று சொல்வதா?


அவளால் எப்படிச் சொல்ல முடியும். ஈராக்கிய இராணுவத்தினர் குர்திஸ் மீது போர் தொடுத்து வந்த போது அவர்களால் தான் சின்னாபின்னமாக்கப்பட்டதை. அந்த அவமானத்தின் சின்னமாக அக்குழந்தை பிறந்ததை எப்படிச் சொல்ல முடியும்? அந்தப் போரிலேயே தனது பெற்றாரை இழந்ததை எப்படி மறக்க இயலும்?

அது அவளுடைய குழந்தையா?

அவள் பெற்ற குழந்தை.

இவை எவற்றையுமே அறியாத குழந்தை. அவளை அம்மா என்று அன்பு ததும்ப அழைக்கும் குழந்தை.

ஆனாலோ, அவளுடைய தாய் தந்தையரைக் கொன்ற, அவளுடைய குடியிருப்புக்கு நெருப்பு வைத்த, அவளுடைய சுற்றத்தை கொன்றொழித்த, அவளை நிர்க்கதியாக்கிய, அவளைச் சின்னாபின்னமாக்கிய படையினரின் குழந்தை.

அது அவளுடைய குழந்தையா?

அவள் பெற்றதால் அவளுடைய குழந்தை ஆகிவிடுமா? அவளுடைய எதிரியின் குழந்தை அல்லவா?

சமூகத்தில் அவள் எப்படிச் சொல்வது அவளுடைய குழந்தை என்றா? அவளுடைய எதிரியின் குழந்தை என்றா?

ஒரு பதின்ம வயதுச் சிறுமியின் உளவியலை மிக நேர்த்தியாக, நேர்மையாக நம்முன் வைக்கிறார் பக்மன் ஹோபாடி.

அமெரிக்க ஈராக் யுத்தத்திற்கு சில காலங்களுக்கு முன் ஆரம்பமான திரைப்படம், அமெரிக்காவின் வருகையுடன் முடிவடைகிறது. குர்திஸினுள் அமெரிக்க இராணுவம் வருகிறது. ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா மீது ஈர்ப்புக் கொண்ட சற்றலைட் ஒரு போது குழந்தையைக் காப்பாற்றும் முயற்சியில் அமெரிக்கக் கண்ணிவெடியிலேயே தனது ஒரு காலை இழக்கிறான். அமெரிக்கப் படைகளின் வரவு அவனுக்கு சுவாரசியமற்றதாகி விடுகிறது. படத்தின் இறுதிக்காட்சியில் தெருவில் அமெரிக்கப்படைகள் அணிவகுத்து வருவர். அதற்கு எதிர்த்திசையில் சற்றலைற் தனது ஊன்றுகோலுடன் நடந்து கொண்டே இருப்பான்.

மூன்றாவது மனிதன்

செப் - ஒக், 2006


1 comment:

deep said...

Dear Manitharsa:
is it possible to get Revathi's contact info from you? Revathi, who wrote the poem 'koneswarikal' and so on in sarinigar.

If u do so, plz let me know here or to my email: ktdeepa@gmai.com

Thanks in advance.
pratheepa