Monday, September 24, 2007

ஒசாமா: ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு பொறி!




“நாங்கள் பசியுடன் இருக்கிறோம்”

“எங்களுக்கு வேலை கொடுங்கள்”

“எங்களுக்கென்று அரசியல் இல்லை’’

“நாங்கள் விதவைகள்”

யார் இந்தப் பெண்கள். இவர் களின் குரல்கள் உங்கள் காதுகளில் விழுகிறதா? இந்தத் தேசத்திலுள்ள அடக்கி ஒடுக்கப்பட்ட ஒட்டு மொத்தமான பெண்களின் குரல்களாக இவை உங்களுக்குத் தெரியவில்லையா? சம்பவங்களின் சூழ்ச்சியினால், தேசத்தின் காவலர்களால் கணவன்மாரை இழந்த, மகன்மாரை இழந்த, சகோதரர்களை இழந்த பெண்களின் ஒட்டுமொத்த குரல்கள் அல்லவா இவை.

இந்தக் குரல்கள் தான் அடக்கு முறைக்குள்ளாகியுள்ள தேசமெங்கும் இப்பொழுது ஒலித்துக் கொண்டிருக்கிறது. சொல்லவொணாத் துன்பங்களை மனதோடு பூட்டி வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த அப்பாவிப் பெண்களை நாம் என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? மறைமுகமாக ஒலித்துக் கொண்டிருந்த இந்தக் குரல்களை வெளியுலகிற்குக் கொண்டு வர நாம் முனைந்திருக்கிறோமா? ஆனால் தனது நாட்டுப் பெண்களின் அவலத்தை ஒசாமா எனும் திரைப்படத்தினூடாக, வெளியுலகிற்குக் கொண்டு வந்து எமது கண்முன் நிறுத்தியுள்ளார் இயக்குனர் சித்திக் பார்மக்.

1962இல் ஆப்கானிஸ்தானில் பிறந்த சித்திக் பார்மக், மொஸ்கோ திரைப்படக் கல்லூரியில் திரைப்படத் துறையில் முதுமாணிப் பட்டம் பெற்றவர். புதிய அரசு உருவாக்கப்பட்ட பின்னர் 1992இலிருந்து 1996வரை ஆப்கானிஸ்தான் திரைப்பட நிறுவனத்தில் முகாமையாளராகக் கடமையாற்றியவர். தலிபான்களின் ஆட்சியில் இவருடைய படங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டிருந்தன. இவருடைய நான்காவது திரைப் படமான ஒசாமா 2003ஆம் ஆண்டு வெளி வந்தது. தலிபான்களின் ஆட்சியில் ஆப்கானிய மக்களுக்கு இழைக்கப்பட்ட குறிப்பாக பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் உண்மைக் கதைகளைக் கூறுவதாக இந்தப் படம் அமைந்துள்ளது. 1996ஆம் ஆண்டு ஆப்கானின் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் 2001ஆம் ஆண்டு வரை கொடுங்கோல் ஆட்சியை நடத்தினர். இங்கு கட்டாய பர்தா அணிதல், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது, வேலைக்குச் செல்லக் கூடாது. களியாட்டங்கள் எதிலும் ஈடுபடக் கூடாது போன்ற பல கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தனர். அதன்படி நடந்து கொள்ளாதவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. திரைப்படங்கள் எடுப்பதற்குக் கூட தடை விதிக்கப்பட்டிருந்து. இந்தத் தடையையும் தாண்டி காபூல் நகர வீதியெங்கும் ஒசாமாவை உலாவ விட்டிருக்கின்றார் இயக்குனர் சித்திக் பார்மக். தலிபான்களைப் பற்றி எடுக்கப்பட்ட முதல் திரைப் படமும் இதுவாகும்.

படத்தின் ஆரம்பமே பெண் களின் மீதான தலிபான்களின் வன்முறைகளை எடுத்துக் காட்டுகிறது. நீதி கேட்டுப் போராட்டம் நடத்தும் பெண்கள் துப்பாக்கியால் சுடப்பட்டும், தண்ணீரைப் பாய்ச்சியும் கலைக்கப்படுகின்றனர். சிதறியோடும் பெண்கள் கூட்டத்திலிருந்து தலிபான்களிடம் அகப்படும் பெண்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதைக் காட்டும் சித்திக், பின்னர் அதனைப் படம் பிடித்துக் கொண்டிருக்கும் வெளிநாட்டுக்காரரைத் தாக்கி கமெராவைப் பறிப்பதோடு தனது கமெராவை எமக்கு முன் நகர்த்துகிறார்.

பதின்ம வயதுச் சிறுமி, தாய், தாயின் தாய் என மூன்று தலை முறைப் பெண்களைப் பின்னிப் பிணைந்ததாக இந்தத் கதை பின்னப்பட்டுள்ளது. போரில் தனது கணவனையும், சகோதர னையும் பலி கொடுத்த ஆண் துணையற்ற இந்தக் குடும்பத்தில் பட்டினிச்சாவு மட்டுமே முடிவு என்றாகின்றது. வைத்திய சாலையில் செய்து வந்த வேலையும் பெண்கள் வேலை செய்யக் கூடாது என்ற தலிபான்களின் கடுமையான உத்தரவின் பேரில் பறிபோக, செய்வதறி யாது புலம்பும் அந்தத் தாயின் நிலை மனதைப் பிசைகிறது. இறுதியில் தனது மகளை ஒரு ஆணாக வேசமிட்டு வேலைக்கு அனுப்புவது என முடிவெடுக்கிறாள் அவள். தலைமயிர் வெட்டப்பட்டு, தனது கணவனின் ஆடைகளை தனது மகளுக்கு அணிவிக்கிறாள். தலிபான்களுக்குத் தெரிந்தால் தன்னைக் கொன்று விடுவார்கள் என்ற பேத்தியின் அச்சத்தை கதைகளைச் சொல்லித் தேற்றுகிறாள் பாட்டி. அவளுக்கு ஒசாமா என்று பெயரும் வைக்கப்படுகிறது.

இந்த இடத்தில் ஒரு சின்னப் பெண்ணின் கண்களில் தெரியும் பயம், சுற்றியிருப்ப தெல்லாம் தலிபான்களாகத் தென்படும் அச்சம் என்பவற்றை மிகத் தத்ரூபமாக வெளிக்கொண்டு வந்துள்ளார் சித்திக். ஒவ்வொரு நிமிடமும் தலிபான்களிடம் அவள் அகப்பட்டுவிடுவாளோ என் கின்ற அச்சம் எம்மையும் தொற்றி எம்மை இருக்கையின் விளிம்புக்குக் கொண்டு வந்து விடுகிறது. அதற்கு மரினா கொல்பகரியின் அற்புதமான நடிப்பே காரணம்.

அடுத்த நாள் தனது கணவனின் நண்பனிடம் உண்மையைச் சொல்லி மகளை வேலைக்குச் சேர்த்து விடுகிறாள் தாய். அதன் பின்னரான அந்தச் சிறுமியின் எந்தவொரு செயலிலும், எங்கே தன்னைத் தலிபான்கள் அவதானித்து விடுவார்களோ, தன்னைக் கொன்று விடுவார்களோ என்ற பதற்றம் காணப்படுகிறது. தொழுகைக்குப் போகச் சொல்லி தலிபான்களிடம் இருந்து வரும் உத்தரவின் பேரில் தொழுகைக்குச் செல்லும் அவள் செய்ய வேண்டிய தொழுகைக்கான கடமைகளை தவறாகச் செய்வதை தலிபான் ஒருவன் அவதானிக்கிறான். இதனால் மற்றச் சிறுவர்களுடன் சேர்த்து தலிபான்களால் கட்டாயமாக மதரசாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறாள்.

மதரசாவில் இவர்களுக்கு மத போதனைகளுடன், சுகாதாரமாக இருத்தல் பற்றியும் கற்பிக்கப்படுகிறது. எஸ்பன்டி என்ற சிறுவனைத் தவிர மற்றச் சிறுவர்களுக்கு அவள் ஒரு சிறுமி என்பது தெரியாது. ஆனால் இவளினுடைய செயல்களை வைத்தும், குரலை வைத்தும் பெண் என்பதனைக் கண்டு பிடித்து விடுகிறார்கள். ஆனால் எஸ்பன்டி அவளை ஆண் என நிரூபிக்கக் கடும் பிரயத்தனப்படுகிறான். ஒசாமாவை மரத்தில் ஏறிக் காட்டுமாறு கூறுகிறான். அவளும் மரத்தில் ஏறுகிறாள். பின் இறங்க முடியாமல் தவிக்கும் அவளைத் தலிபான்கள் இறக்கி, தண்டனையாகக் கிணற்றுக்குள் கட்டித் தொங்க விடுகிறார்கள். அந்த அதிர்ச்சியில் அவள் பருவம் அடைந்து விடுகிறாள். மதகுருவான முல்லாசாஹிப் அதனைக் கண்டு விடுகிறார். அவள் பெண்ணென நிரூபிக்கப் பட்டு தலிபான்களின் சிறையில் அடைக்கப்படுகிறாள்.

அதன் பின்னர் தண்டனைக்குரியவர்களுக்கு ஆண்களின் முன்னிலையில் வழக்கு நடக்கிறது. பெண்களின் போராட்டத்தை படம் பிடித்த வெளிநாட்டுக்காரர் உளவாளி என்று கூறிச் சுட்டுக் கொல்லப்படுகிறார். தலிபான்களின் ஆட்சியில் வைத்தியசாலையில் வேலை செய்ததற்காக வெளிநாட்டுக்காரர் என்றாலும் பெண் என்ற காரணத்திற்காக பெண் வைத்தியர் உயிருடன் மண்ணிற்குள் புதைக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். போராட்டத்தில் ஈடுபட்ட வேறும் சில பெண்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. ஒசாமாவிற்கு தண்டனையாக அல்லாவின் பெயரினாலும், மதத்தின் புனிதத்தைக் கட்டிக் காப்பதற்காகவும் மன்னிப்பு வழங்கி மதரஸாவை நடத்தும் வயது போன கிழவனான முல்லா சாஹிப்புக்கு தலிபான்களால் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. ஒரு சிறுமிக்கு இதை விடப் பெரிய தண்டனை என்னவாக இருக்கும்?

சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வரும் கிழவன் அவளை உள்ளே விட்டு வெளியில் பெரிய பூட்டாகப் போட்டுப் பூட்டி விட்டுச் செல்கிறான். பூட்டப்பட்ட வீட்டிற்குள் தலிபான்களால் இந்தக் கிழவனுக்கு தானம் கொடுக்கப்பட்டு வாழ்க்கை சீரழிக்கப்பட்ட பல பெண்கள் காட்டப் படுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தாம் எப்படி இங்கு கொண்டு வரப்பட்டோம், எப்படிச் சகிப்புத் தன்மையுடன் வாழ்கிறோம் என்றெல்லாம் சிறுமியிடம் கூறுகிறார்கள்.

தலிபான்கள் எங்களுடைய வீடுகளை. எங்களுடைய காணிகளை, எங்களுடைய தோட்டங்களை எரித்து விட்டார்கள். எங்களுக்கென்று ஒன்றுமில்லை. அவர்கள் எங்களைக் கைது செய்து இந்த முல்லா விற்குத் திருமணம் செய்து வைத்து விட்டனர். எமது வாழ்க்கையைப் பாழாக்கி விட்டனர். எமக்கு வாழ்வதற்கென்று அங்கே ஒன்றுமில்லை. நாங்கள் இந்த முல்லாவை வெறுக்கிறோம். எங்களுடைய இளமையை, எங்களுடைய வாழ்க்கையை இந்தக் கொடியவன் பாழாக்கி விட்டான். ஆனால் எங்களால் என்ன செய்ய முடியும்? நாங்கள் அகதிகள். ஆனால் சேற்றிலிருந்து செந்தாமரை என்று சொல்வார்களே அது போல் சிறுவன் எஸ்பன்டி யைக் கூறலாம். இங்கு அவனை மட்டுமே மனித ஆத்மாவாக சித்திரித்துள்ளார் சித்திக். பெண்கள் போராட்டத்தை தலிபான்கள் சிதறடிக்கும் போது அவன் உண்மையாகவே அழுது, புலம்புகிறான். ஒஸாமா ஆணாக வேடமிட்ட ஒரு சிறுமி என்பது அவனுக்குத் தெரியுமாயினும் அவளைக் காட்டிக் கொடுக்காமல் அவளுக்குப் பக்கபலமாக நிற்கிறான். சிறுமி தலிபான்களிடம் பிடிபடும் பொழுது தனது கையாலாகாத்தனத்தையிட்டு வருந்துகிறான். சிறுவர்கள் புனிதமானவர்கள், கள்ளங்கபட மற்றவர்கள். அவர்கள் ஆண், பெண், சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்தவர்கள். அவர்களின் உலகம் மிகப் பரந்தது. பெரியவர்களாகிய நாம் தான் அவர்களை மீளவே முடியாத பாதாளத்தில் தள்ளி விடுகிறோம் என்கிற எண்ணத்தை சித்திக் பார்மக் எங்களில் எழ வைத்து விடுகிறார்.

அது மட்டுமல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரினதும் ஆன்மாவையும் தட்டி எழுப்பி, பலமிழந்த பெண்களின் பலமுள்ள ஆன்மாவாக தன்னை நிலை நிறுத்தி, கலாசாரம் என்ற பெயரில் அடிமைத்தனத்தைக் கட்டிக் காப்பவர்களையும், மூடநம்பிக்கைகளுக்கு ஆட் பட்டுப் போனவர்களையும் நோக்கித் தனது கேள்விகளை எழுப்புகிறார் சித்திக். எங்களுடைய கலாசாரத்தின் பேரிலான அடிமைத்தனங்களும், மூட நம்பிக்கைகளும் கூட பெண்களுக்கு மட்டும்தான். ஆண்களுக்கு அது கிஞ்சித்தும் கிடையாது என்பது வேறு விடயம். தங்களுக்குரிய விலையுயர்ந்த அஃறிணைப் பொருட்களைப் பத்திரமாகப் பூட்டி வைப்பது போல், உயிருள்ள பெண்களைத் தனது காம இச்சைகளுக்கு மட்டுமேயாகப் பூட்டி வைக்கும் கிழவன் முல்லாவின் தந்திரம், தற்போது பல வீடுகளில் நடந்து கொண்டிருக்கும் ஒன்று. அவரவர்களின் வீடுகளைத் திறந்து பார்த்தால் தான் தெரியும் அப்பாவிப் பெண்களின் அவல வாழ்க்கை.

சரிநிகர்

மர்ச் - ஏப்ரல், 2007



















No comments: