Monday, September 24, 2007

கலர் பேர்ப்பிள்: எனது பிள்ளைகளா? எனது சகோதரர்களா?உலகத்திலுள்ள பெண்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் அடக்கியாளப்படுகிறார்கள். இந்த ஒரு விடயத்தில் மட்டும் தான் போலும் இன,மத,சாதி,வர்க்க,மொழி வேறுபாடில்லாமல் ஒடுக்குமுறையாளர்கள் எல்லோரும் இணைந்திருப்பது. நீண்ட காலமாகவே பெண்களை அடிமைகளாகவும், கீழானவர்களாகவும் வைத்திருந்தமை மனிதகுல வரலாற்றின் இருண்ட பக்கமாகவே இருந்து வருகிறது. அந்த இருண்ட பக்கத்தின் மீது சில ஒளிக்கீற்றுகளையாவது பாய்ச்ச முயன்று வருகிறார்கள் பிரக்ஞைபூர்வமான சில படைப்பாளிகளும் கலைஞர்களும்.

கறுப்பின மக்கள் மீதான ஒடுக்குமுறையும், ஏவப்பட்ட போர்களும் மூட்டி விடப்பட்ட உள்நாட்டுக் கலவரங்களும், அதன் விளைவான வறுமை, பட்டினி, சுகாதாரக் கேடு என்று அவர்கள் பட்டுக் கொண்டிருக்கும் இன்னல்களை வார்த்தைகளில் வடித்துவிட முடியாது. அதிலும் கறுப்பின மக்கள், அவர்களின் நிறத்தின் காரணமாகவே மற்றவர்களினால் அடக்கி ஒடுக்கப்படுவது துன்பகரமானது. வெள்ளையர்களின் அகராதியில் கறுப்பினப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவது ஒரு குற்றமாகவே கருதப்படவில்லை. மாறாகத் தமது உடமையின் மீதான உரிமையாகவே அது கொள்ளப்படுகிறது. ஒடுக்கப்படும் மக்கள் கூட்டத்தில் உள்ள பெண்கள் ஒடுக்குபவரின் சொத்தாகக் கொள்ளப்படுவது வரலாற்றிற்கு ஒன்றும் புதிதில்லை. மன்னர்களுக்கிடையிலான போர் முதல் இன்றைய தேசியவாதப் போர்கள் வரை இவற்றிற்கு நிறைய உதாரணங்கள் உண்டு.


ஆனால் அண்மைக்காலத்தில் இவை பற்றிச் சிறிதளவாவது பேசப்படும் சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதுவும் ஒடுக்கப்படும் பெண்ணின் நலனில் இருந்து என்பதற்கப்பால் எதிரியை அம்பலப்படுத்த உதவும் ஒரு கருவியாகவே அதிகமும் பாவிக்கப்படுகிறது. ஆனால் தமது இனத்துக்குள்ளேயோ, அல்லது தமது மதக்குழுக்களுக்குள்ளேயோ, தமது குழுமத்துக்குள்ளேயோ, சாதிக்குள்ளேயோ, குடும்பத்துக்குள்ளேயோ தமது ஆண்களால் நிகழ்த்தப்படும் வன்முறை பற்றி பேசப்படுவதேயில்லை. அதற்கும் காரணம் அதே அரசியல் தான். அதாவது இவற்றைப் பேசுவது எதிரிக்குச் சாதகமாக அமைந்து விடும். நமது பக்கத்தைப் பலவீனப்படுத்தி விடும் என்பது தான்.

குடும்பத்தில் பெண் மீது நிகழ்த்தப்படும் வன்முறை மற்றெல்லா வன்முறையை விடவும் மாறுபட்டதாயிருக்கிறது. அதன் பிரதான அம்சமே அது வன்முறையாகவோ அல்லது பெண்ணின் சுயம் மீதான அத்துமீறலாகவோ கொள்ளப்படுவதில்லை என்பது தான். கூடவே அந்த ஒடுக்குமுறை பெண்ணின் ஆளுமை விருத்திக்குத் தடையாக அமைந்துவிடுவதும் கவனத்திற் கொள்ளத்தக்கது.

இவ்வாறு குடும்பத்தில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை கதைத்தளமாகக் கொண்டு அலிஸ் வாக்கர் எனும் கறுப்பினப் பெண்ணால் எழுதப்பட்டதே கலர் பேர்ப்பிள் என்கிற நாவல். புலிட்சர் பரிசு வென்ற இந்நாவல் 1909இல் இருந்து 1947ஆம் ஆண்டுவரை ஜோர்ஜியாவில் வாழ்ந்து வந்த கறுப்பினப் பெண்களைப் பற்றியது.

ஜோர்ஜியாவில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த அலிஸ் வாக்கர் ஆரம்பகாலத்தில் கவிதை, சிறுகதை போன்றவற்றை எழுதுவதில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். இவர் எழுத்தாளராக மட்டுமன்றி பெண்ணியம், பொருளாதார சமத்துவம், சூழலியல் என்பவற்றிற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். 1968ஆம் ஆண்டு இவருடைய கவிதைகள் நூலாக வெளிவந்தன. இவருடைய கவிதைகளும், சிறுகதைகளும் சமுதாயத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியற் கொடுமைகள், வன்முறைகள், தனிமை, இனவேற்றுமை, ஒருபாலின உறவுமுறை, ஆபிரிக்காவில் நடைபெறும் சடங்குமுறையான பெண்களின் பிறப்புறுப்பின் கிளிடோரிஸ் (Clitoris) சேதப்படுத்தப்படுதல் போன்றவற்றைப் பற்றிப் பேசுபவையாக இருந்தன. 1982இல் வெளிவந்த கலர் பேர்ப்பிள் நாவல் அலிஸ் வாக்கரை உலகறியச் செய்தது மட்டுமல்லாது, ஆண்களைப் பற்றிக் கடுமையாக எழுதியிருந்தார் என்று விமர்சிக்கவும் வைத்தது.

எனினும் அலிஸ்வாக்கரின் கலர் பேர்ப்பிள் நாவல் பெண் எழுத்திற்கான உதாரணமாக விமர்சகர்களால் சுட்டப்பட்டது. பெண்ணினால் எழுதப்பட்டது என்ற காரணத்திற்காக அல்ல, பெண் எழுத்துக்கான மரபையும் தொடர்ச்சியையும் அது அடையாளம் காட்டியது என்பதால். கதை சொல்லும் முறைமையிலும், அது எழுப்பிய குரலிலும், முன்வைத்த பிரச்சினைகளிலும் அது பெண் எழுத்தை அடையாளப்படுத்தியது என்பதால் அது பெண் எழுத்திற்கான அடையாளமாக மாறிற்று.

இவ்வகையான ஒடுக்குமுறைக்குள்ளாகும் பெண்களின் பிரச்சினைகளை எந்தவிதமான அச்சமுமில்லாமல் வெளிக்கொணர்ந்து சர்ச்சைக்குள்ளான அலிஸ் வாக்கரின் கலர்ப் பேர்ப்பிள் நாவலை ஸ்ரிபன் ஸ்பீல்பெர்க் 1985இல் நெறியாள்கை செய்து திரைப்படமாக எம் முன் வைத்துள்ளார். இத்திரைப்படத்தில் கதை சொல்லியின் வாயிலாகவே கதை நகர்கிறது. தனிப்பட்ட ஒருவர் மீதான பாலியல் ஒடுக்குமுறையை சமூக அரசியலின் அக்கறைக்குரிய பொருளாக முன் வைக்கும் ஒருவரை கதைசொல்லியாகப் படைத்ததன் மூலம் ஸ்ரிபன் ஸ்பீல்பெர்க் வெற்றி பெற்றுள்ளார். இதில் சீலி என்னும் பெண் பாத்திரம் கதைசொல்லியாகப் படைக்கப்பட்டுள்ளது. நாவலின் தன்மை கெடாமல் திரைப்படத்தில் சீலியை நம்முன் நிறுத்தியதன் மூலம் ஸ்பீல்பெர்க் தன்னை ஒரு சிறந்த நெறியாளராக நிறுவிக் கொண்டுள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் நாம் நான்கு பெண்களைக் குறிப்பிட்டேயாக வேண்டும். சீலி, சீலியின் தங்கை நிட்டி, சோபியா, பாடகியாக வரும் ஷக். சீலியும் நிட்டியும் சகோதரிகள். தாய் இறந்ததும் பதின்நான்கு வயதான சீலி தனது வளர்ப்புத் தந்தையினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு இரு முறை கர்ப்பமுறுகிறாள். இதன் காரணமாக இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாகிறாள். அந்த இரண்டு பிள்ளைகளையும் சீலியின் தகப்பன் ஆபிரிக்காவில் வாழ்ந்து வரும் ஒரு மிசனறிக் குடும்பத்திற்கு விற்று விடுகிறான். சீலியின் தங்கை நிட்டியின் மேல் மனைவியை இழந்த நடுத்தர வயதுக்காரனான அல்பேர்ட் ஆசைப்படுகிறான். நிட்டியின் தந்தையிடமும் வந்து பெண் கேட்கிறான். ஆனால், வளர்ப்புத் தந்தையோ சீலி தான் மூத்தவள் என்றும் அவளைக் கல்யாணம் செய்யும் படியும் கூறுகிறான். அவனும் சீலியைப் பரிசோதனை செய்து பார்த்து அவளுக்கு எந்தக் குறையும் இல்லையென்று அறிந்து கல்யாணம் செய்து தன்னுடன் கூட்டிச் செல்கிறான். அங்கு சீலிக்கான இன்னொரு நரகம் உருவாக்கப்படுகிறது.

சீலியின் கணவன் அல்பேர்ட்டுக்கு அவளுடைய தங்கையின் மேலுள்ள ஆசை போகவில்லை. சீலியைப் பார்க்க வரும் அவளுடைய தங்கையை பலாத்காரமாக அடைய நினைக்கிறான். ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை. அதன் காரணமாக அவன் நிட்டியை வீட்டைவிட்டுத் துரத்துகிறான். சீலிக்கான ஒரேயொரு உறவான அவளின் தங்கையை சீலியிடமிருந்து பிரிக்கிறான். வீட்டை விட்டுத் துரத்தப்படும் நிட்டி கென்யாவில் வாழும் மிசனரிக் குடும்பத்தினரிடம் சேர்கிறாள். அங்கிருந்து அவள் சீலிக்கு எழுதும் கடிதங்கள் கூட சீலியின் கணவனால் மறைத்து வைக்கப்படுகிறது. இதன் காரணமாக தனது தங்கை இறந்து விட்டதாக சீலி நம்புகிறாள்.

சீலியின் கணவன் அவளை மிருகத்திலும் கேவலமாக நடத்துகிறான். இதனால் அவள் தன்னுக்குள்ளேயே குமைந்து போய் ஏவல் வேலை செய்யும் ஒரு அடிமையாய் வாழ்க்கையை நடத்துகிறாள். இவளுடைய வாழ்க்கையின் திருப்பு முனையாக வருகிறாள் ஷக் என்னும் பாடகி. சீலியின் கணவன் அல்பேர்ட் ஷக்கின் மேல் கொண்ட ஆசையின் காரணமாக அவளுக்குச் சேவகம் செய்கிறான். அவளோ அவனை மதிப்பதாகத் தெரியவில்லை. தன்னுடைய தேவையை எல்லாம் மனங் கோணாமல் செய்யும் மனைவியை கேவலமாக நடத்தும் இவன் இன்னொரு ஆளுமையுடைய பெண்ணுக்கு சேவகம் செய்து அவளைத் தன்னுடமையாக்கிவிட வேண்டுமென்பதில் கடும் பிரயத்தனப்படுகிறான். ஆனால் அவளோ இதற்கெல்லாம் மசியவதாயில்லை.

ஆரம்பத்தில் சீலியை அருவருப்பானவள் எனப் பேசும் ஷக், சீலியின் அன்பின் தூய்மை கண்டு அவளை ஆதரிக்கிறாள். இதன் காரணமாக அவர்கள் இருவருக்கும் இடையே நெருக்கமும், உறவும் ஏற்படுகிறது. ஷக்கின் மூலமாக சீலிக்கு கணவன் மறைத்து வைத்திருந்த, தான் இறந்து விட்டதாகக் கருதும் தனது தங்கையின் கடிதங்கள் கிடைக்கப் பெறுகின்றன. அதன் மூலம் தனது குழந்தைகளும் தனது தங்கையிடம் வளர்வதை அறிந்து கொள்கிறாள். தனது சகோதரியுடனும் பிள்ளைகளுடனும் சேர்ந்து விட வேண்டுமென்ற ஏக்கமும், அவாவும் அவளுள் எழுகிறது. அதன் பின்னர் அவளுக்குள் ஒரு புத்துணர்வு வருகிறது. தானும் ஒரு மனுசிதான் என்ற உணர்வினையும், தனது கணவனை விட்டுப் போக வேண்டுமென்ற தைரியத்தையும் ஷக்கின் மூலம் பெறுகிறாள். ஷக்கிற்கும் அவளுக்குமான உறவு அவளை ஒரு தைரியமுள்ள துணிகரமான பெண்ணாக மாற்றுகிறது. இது அவளை கணவனிடம் தனது விருப்பத்தைக் கூற உதவுகிறது. ஆனால் அவளது கணவன் தனது பிணத்தைத் தாண்டித்தான் நீ போக முடியும் என்று கூறுகிறான். இதனால் சீலி ஆவேசமடைகிறாள். உனது பிணத்தைத் தாண்டியென்றால் அதற்கும் நான் தயார் என்று சவால் விடுகிறாள். அவளது கணவன் திகைத்து நிற்கிறான்.

உயிர்ப்புப் பெற்ற சீலிக்கும் அவளது கணவனுக்கும் இடையே நடக்கும் உணர்ச்சிபூர்வமான உரையாடலின் சாரம் இது:

சீலி: நீ கீழ்த்தரமானவன். நான் உன்னிடம் இருந்து பிரிந்து செல்வதற்கான நேரம் உருவாகியுள்ளது. அது உன்னுடைய பிணத்தின் மேல்தான் என்றால் அதனை நான் வரவேற்கிறேன்.

கணவன்: என்ன சொல்கிறாய்?

சீலி: நீ என்னிடம் இருந்து எனது சகோதரி நிட்டியைப் பிரித்தாய். உனக்குத் தெரியும் இந்த உலகத்தில் எனக்குள்ள அன்பான உறவு அவள் மட்டும் தான் என்று. ஆனால் நிட்டியும், என்னுடைய பிள்ளைகளும் விரைவில் என்னுடன் வந்து சேரப் போகிறார்கள்.

கணவன்: நிட்டியும் உன்னுடைய பிள்ளைகளுமா? பெண்ணே நீ சொல்வது பைத்தியக்காரத்தனமாய் உள்ளது.

சீலி: ஆம். எனக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் ஆபிரிக்காவில் வசிக்கிறார்கள். அங்கு வேறு மொழியில் கற்கிறார்கள். நிறைவான சுதந்திரமான காற்றைச் சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய வாழ்க்கை நரகத்தால் சூழ்ந்துள்ளது. அவர்கள் ஒருபோதும் முட்டாள்களாகாமல், தேர்ச்சி பெற்றவர்களாக வளர்ச்சியடைந்தவர்களாக திரும்பி வருவார்கள்.

கணவன்: நீ போகும் போது என்னுடைய பணத்தில் ஒரு சல்லிக்காசையேனும் கொண்டு போக முடியாது.

சீலி: நான் ஏதாவது உன்னிடம் கேட்டேனா? நான் உன்னிடம் கேட்டேனா என்னைக் கல்யாணம் செய்யச் சொல்லி? நான் ஒரு போதும் உன்னிடம் ஒன்றும் கேட்கவில்லையே.


கணவன்: ஷக் திரும்பி வந்தாள். அவளிடம் திறமையுள்ளது. அவளால் பாட முடியும், எல்லோருடனும் தைரியமாகப் பேசிப் பழக முடியும். அவளால் தன்னுடைய காலில் நிற்க முடியும். உன்னால் என்ன செய்ய முடியும்? நீ அசிங்கமானவள். அருவருப்பான தோற்றமுடையவள், உன்னுடைய உடலமைப்புக் கேலிக்குரியது, உன்னால் மற்றவர்களுடன் சகஜமாகப் பழக முடியாது. ஷக்கிற்கு வேலைக்காரியாகத்தான் இருக்க முடியும். அவளுடைய மலக் கோப்பையை எடுப்பவளாகவும், அவளுடைய உணவினைச் சமைப்பவளாகவும், அதைக் கூட உன்னால் ஒழுங்காகச் செய்ய முடியாது. உன்னைக் கல்யாணம் செய்யவும் யாரும் பைத்தியக்காரர்களல்ல. ஆகவே நீ என்ன செய்யப் போகிறாய்? உன்னால் ஒரு பண்ணையை நடத்த முடியுமா? இல்லையே. உன்னைத் தண்டவாளம் போடும் கூலியாளாக வேலைக்கமர்த்தத்தான் முடியும். உன்னை இவ்வாறு சிந்திக்க வைத்தது யார்? உன்னைப் பார், நீ கறுப்பி. நீ அசிங்கமானவள். நீ ஒரு பெண். நீ ஒன்றுமில்லாதவள். நீ யாருக்கும் சாபமிடக் கூட முடியாது.

சீலி: நீ எனக்குச் செய்வது உனக்கே திரும்பி வரும் நீ எனக்குச் செய்யும் ஒவ்வொன்றும் உனக்குச் செய்வதாயே அமையும். நான் கறுப்பியாக இருக்கலாம். நான் அசிங்கமானவளாகக் கூட இருக்கலாம், ஆனாலும் நான் வாழ்வேன்.

வாழ்வேன் என்று சவால் விடும் பெண்ணாக சீலி மிளிர்கிறாள். அவளுடைய ஒடுங்கிப் போதல் என்கிற அம்சத்தை அவள் தூக்கி எறிகிறாள்.

அதேபோல இந்தப் படத்தில் வரும் இன்னொரு பெண் பாத்திரம் சோபியா. அவள் மிகவும் துணிச்சலுள்ள, நடந்தால் தரையே அதிரும் இறுமாப்புக் கொண்ட, யாருக்கும் அடங்காத ஒரு பெண். தனது மாமனாருடைய மேலாதிக்கத்தையோ, கணவனுடைய தான் ஆண் என்கிற முனைப்பையோ கிஞ்சித்தும் மதிக்காதவள். அவர்களுடைய தவறுகளைச் சுட்டிக் காட்டுபவள். ஒரு வேலையைத் தானே தனியே நின்று செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவள். தன்னைத் தாக்கிய தனது கணவனைத் திருப்பித் தாக்கும் வல்லமை கொண்டவள். இவ்வாறு வல்லமை பொருந்திய இவளை ஒரு பொழுது நகர மேயரின் மனைவி தனது வீட்டு வேலை செய்ய வருமாறு கேட்கிறாள். அதற்கு இவள் வர முடியாது என்று கூற அதனைத் தட்டிக்கேட்கும் மேயரின் கன்னத்தில் அறைகின்றாள். ஒரு வெள்ளையினத்தவனுக்கு கறுப்பினப் பெண் அறைவதாவது. அங்குள்ளவர்கள் சோபியாவை தாக்கி அவளைப் பொலிஸிடம் ஒப்படைக்கின்றனர். சிறைக்குச் செல்லும் சோபியாவின் ஆளுமை அங்கு அடக்கி ஒடுக்கப்பட்டு அவள் ஒரு நடைப்பிணம் போல் திரும்பி வருகிறாள். ஆளுமை மிக்க சுயம் கொண்ட பெண்ணை அதிகாரம் எப்படி ஒடுக்கி விடுகிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.


சீலி திரும்பி ஊருக்கு வரும்போது அவளின் வளர்ப்புத் தந்தை இறந்து போகிறான். தனது தங்கை எழுதிய கடிதத்தின் மூலமே சீலிக்கு அவன் வளர்புத் தந்தையென்று தெரிய வருகிறது. அதன் பின் அவள் தனக்குத்தானே கேட்கின்றாள்."எனது குழந்தைகள் எனக்குச் சகோதரர்களா? அல்லது எனது பிள்ளைகளா" என்று அதற்கு அவளுக்கு விடையே தெரியவில்லை.

இத் திரைப்படத்தில் பாத்திரப் படைப்புக்கள் மிகவும் நேர்த்தியாக, உயிர்த்துடிப்புடன் கையாளப்பட்டுள்ளது. ஒவ்வொருவரையும் கதாபாத்திரமாகவே வாழ வைத்துள்ளார் ஸ்ரிபன் ஸ்பீல்பெர்க்.

ஆபிரிக்க சமுதாயத்தில் மட்டுமல்லாமல் மத்திய கிழக்கு நாடுகளிலும் பெண்களின் பாலியல் உணர்வுகளை ஒடுக்கும் நடைமுறை வழக்கத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக சிறு வயதில் பெண்களின் பிறப்புறுப்பான கிளிடோரிஸ்ஸின் நுனியை வெட்டியெறியும் பழக்கம் எகிப்தில் பரவலாகக் காணப்படுகிறது. பெண்களின் காமவேட்கையைக் கட்டுப்படுத்தும் முறையாகவே தாங்கள் இதனைக் கைக்கொள்வதாக மதவாதிகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சடங்கின் மூலம் பல சிறுமிகள் உயிரிழந்துள்ளார்கள். ஆபிரிக்கச் சமுதாயத்திலும் சரி, அராபியச் சமுதாயத்திலும் சரி சடங்கு என்னும் பெயரில் பெண்களின் மீதான அடக்கு முறையின் அதிகாரத்திற்கு இது ஒரு உதாரணம் மட்டுமே.

ஆக ஆண்கள் அளவிற்கதிகமான பாலியல் உணர்ச்சியினால் பெண்களைப் பலாத்காரப்படுத்தலாம், வன்முறைக்குள்ளாக்கலாம், பல பெண்களை மணம் புரியலாம் அது தப்பில்லை. ஆனால் பெண்கள் தங்களது பாலியல் உரிமை குறித்துப் பேச முடியாது. தெரிவு குறித்துச் சிந்திக்க முடியாது. பதிலாக ஆணுக்கான வாரிசை உருவாக்குவதே பெண்ணின் கடமை என்று மதவாதிகளும், ஆணாதிக்க சிந்தனையாளர்களும் வலியுறுத்துகிறார்கள். இதுதான் தமக்கு விதிக்கப்பட்டதென ஏற்றுக் கொள்ளப் பழகிவிட்ட பெண்களும் எதிர்ப்புத் தெரிவிக்கத் திராணியற்றுள்ளனர். ஆனால் பெண்ணியச் சிந்தனையாளர்கள் இந்தச் சடங்குமுறைகளைக் கேள்விக்குள்ளாக்குகின்றனர். பெண்கள் ஒன்றுபட்டு இவற்றை எதிர்க்க வேண்டும் என்றும், பெண்ணினுடைய தெரிவுச் சுதந்திரத்தையும் ஆளுமையையும் சுயத்தையும் பேணப் போராட வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றனர்.

அந்த வகையில் அலிஸ் வாக்கருடைய இந்த நாவல் அதன் பணியைச் செவ்வனே செய்திருக்கிறது. அதனை நாவலின் ஆதாரசுருதி கெடாமல் படமாக்கியதன் மூலம் ஸ்பில்பேர்க் சினிமா உலகில் விதந்துரைக்கப்பட வேண்டியவராகிறார்.

தாயகம் - இலங்கை

செப் - நவ, 2006

No comments: