Monday, October 19, 2009

வன்முறைகளால் எழுதப்படும் தீர்ப்புகளும் அப்பாவிப் பெரும்பான்மையினரின் மௌனக் குரல்களும் OCCUPATION 101 – Voices of the Silenced Majority
இயக்குநர்கள்: அப்துல்லா ஒமீஸ், சுபியான் ஒமீஸ் சகோதரர்கள்

உலகில் பல மடங்கு எண்ணிக்கையிலான மனிதர்கள் அகதி முகாம்களில் பயங்கரங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கே மக்களுக்கான வாழ்க்கை தொலைக்கப்பட்டிருக்கின்றது. அங்கு இன்று சிறுவர்களுக்கான ஒரு இடமில்லை, விளையாடத் தெருக்களில்லை, மரங்களில்லை. ஒன்றுமேயில்லை. அவர்களின் அறிவும் எதிர்காலமும் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பட்டினியாலும், குண்டுகளாலும் சிதைக்கப்பட்ட மக்கள் சித்தம் கலங்கிய நிலையில் தற்கொலையை நாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வரலாறு எப்போதுமே ஏதோ ஒரு வன்முறை நிகழ்வுக்காகக் காத்துக் கொண்டுதானிருக்கிறது போல் படுகிறது. கடந்த சில மாதங்களாக இலங்கையின் வடபகுதியில் இடம்பெற்ற இனப்படுகொலையும், அகதி முகாம்களுக்குள் முடக்கப்பட்ட எங்களின் மக்களின் வாழ்வும் இதனைத்தானே சொல்கின்றன. காலங்காலமாக அந்த மக்கள் வாழ்ந்த இடங்களைத் தகர்த்து, மக்களைக் கொன்றழித்து புல்டோசர்களால் செப்பமிடும் தந்திரத்தை இலங்கை அரசாங்கம் மட்டுமல்ல, பல நாடுகளிலுள்ள அரசாங்கங்கள், அண்டை நாடுகள் தமது களிப்புக்குரிய விடயங்களாகச் செய்து கொண்டுதானிருக்கின்றன.

ஏன் கடந்த பல வருடங்களாகப் பலஸ்தீனத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. இஸ்ரேலியர்களின் தாக்குதல்களுக்கு உட்பட்டு வரும் பலஸ்தீனிய மக்கள் தலைமுறை தலைமுறையாக அகதி முகாம்கள் எனப்படும் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு உண்ண உணவின்றி, ஆடைகள் இன்றி, சுகாதாரம் இல்லாத நிலையில் வாழ்ந்து வருவது எம் கண்முன்னே நடைபெறும் இன்னொரு நிகழ்வு.

பலஸ்தீனத்தில் என்ன நடக்கிறது? இவர்கள் செய்த தவறுதான் என்ன? நாசிகளின் வெறித்தனத்திற்கு பலியாக்கப்பட்டுக் கொண்டிருந்த யூதர்களை தமது சகோதரர்களாக எண்ணி அடைக்கலம் கொடுத்தமையா? அல்லது இன்று பலஸ்தீனம் அழிக்கப்பட்டு பெரும்பான்மை இடங்கள் இஸ்ரேல் எனப்படும் மாபெரும் யூத நாடாக வளர்ச்சிபெற அனுமதித்த அவர்களின் அப்பாவித்தனங்களா?

இந்தக் கேள்விகளை எம்மிடம் எழுப்பிச் செல்கிறது அப்துல்லா ஒமிஸ், சுபியான் ஒமிஸ் சகோதரர்களின் OCCUPATION 101 எனும் விவரணப்படம். அயர்லாந்து, அல்ஜீரியர்கள், இந்தியர்கள், ஆப்ரோ அமெரிக்கர்கள், தென் ஆபிரிக்கர்கள் மீது ஆட்சியாளர்களினால் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளின் காட்சிப் படிமங்களுடனும், நெல்சன் மண்டேலாவின் உரையுடனும் ஆரம்பமாகும் இந்த விவரணப்படம் பலஸ்தீனத்தில் மக்களின் மீது ஏவிவிடப்படும் வன்முறையைக் காட்சிப்படுத்துவதுடன் தொடர்கிறது. மேலும் இஸ்ரேலிய – பலஸ்தீனப் பிரச்சினைகளுடன் சம்பந்தப்பட்ட புலமையாளர்கள், வரலாற்றாளர்கள், சமாதானச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், மனிதாபிமானப் பணியாளர்கள், மாணவர்கள், பெண்கள், சிறுவர்களின் நேர்காணல்களின் மூலம் இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் நகர்த்தப்படுகின்றது.

இந்த விவரணப்படத்தில் வெஸ்ற் பாங்கிலும், காஸாவிலும் இஸ்ரேல் செய்த திட்டமிட்ட குடியேற்றங்களை மட்டுமல்லாது இஸ்ரேலுக்கும் அதனுடைய ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கும் அமெரிக்காவின் பொருளாதார, இராணுவ இராஜதந்திர உதவிகள் எப்போதும் பாரியளவில் கிடைத்து வந்துள்ளதை புள்ளிவிபரங்கள் ஆதாரங்கள் மற்றும் வரைபடங்களின் உதவியுடன் விளக்கியுள்ளனர் ஓமிஸ் சகோதரர்கள்.

பலஸ்தீனியர்களின் இடங்கள், அவர்கள் வாழ்ந்த குடியிருப்புக்கள், அவர்களின் அன்புக்குரியவர்கள், அவர்களின் ஆன்மாக்கள் என்பன புல்டோசர்களால் தகர்க்கப்பட்டு கட்டாய இராணுவக் குடியிருப்புக்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருப்பதையும், மந்தைகளைப் போல் நடத்தப்படும் அந்த மக்களின் சொல்லொணாத் துயரங்களையும் இந்த விவரணத் திரைப்படம் விவரித்துச் செல்கிறது இது எங்களின் மக்களின் துயரங்களையும் நெருக்கமாக விவரித்துச் செல்வது போன்ற ஒரு உணர்வை என்னுள் ஏற்படுத்தியதென்பதை நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.

யன்னல்களைச் செல் உடைத்தது. எல்லாமே எரிந்தும், உடைந்தும் போனது. அவர்கள் ஏன் என்னுடைய பொருட்களையும், விளையாட்டுச் சாமான்களையும் உடைத்தார்கள்? நான் என்னுடைய பொருட்கள் பலவற்றை இழந்து விட்டேன். எங்களுடைய ஆடைகளைக் கூட நாங்கள் இழக்க வேண்டி ஏற்பட்டது. நாங்கள் உடுப்பதற்கு உடைகளை எங்கள் அயலவர்களிடம் கெஞ்சிப் பெற்றுக் கொண்டோம். நாங்கள் சாப்பிடும் உணவில் காஸ் மணம் வீசுகிறது. உடுப்புகளில் கூட காஸ் மணம் வீசுகிறது, ஆனால் அவற்றை எறிய எம்மால் முடிவதில்லை. ஏனெனில் எம்மிடம் வேறு உடுப்புகள் இல்லை. நீங்கள் மணந்து பார்த்தால் எங்களுடைய உடுப்புகள் எவ்வளவு நாறுகிறதென்று தெரியும். இஸ்ரேலியர்கள் வந்து எங்கள் வீடுகளைப் பார்க்க வேண்டும் அது எப்படி இருக்கிறதென்று. எங்களுடைய உடுப்புகளை மணந்து பர்க்க வேண்டும் அது எப்படி நாறுகிறதென்று. அந்தக் காஸ் மணம் எங்களைச் சாகிற அளவிற்கு மூச்சுத் திணற வைக்கிறது. என்னுடைய உடைகளை மணந்து பாருங்கள் அதில் காஸ் மணக்கிறது. நான் என்ன செய்ய முடியும்? எனக்கு என்னுடைய அப்பா வேண்டிக் கொடுத்த சன்கிளாஸைக் கூட போடக் கொடுத்து வைக்கவில்லை. அம்மா வாங்கித் தந்த பிறேஸ்லெற், நெக்லஸ், மோதிரம் என்பவற்றைக் கூட போட்டு அனுபவிக்க முடியவில்லை. என்னுடைய உடைமைகளை நான் எப்படி அனுபவிக்க முடியும். நான் பாடசாலை செல்லும்போது துப்பாக்கிச் சத்தங்களைக் கேட்கிறேன். அவற்றைக் கேட்டு நான் மிகவும் பயப்பிடுகிறேன். எனது உடல் முழுக்க நடுங்க ஆரம்பிக்கிறது.'

இது இஸ்ரேலியர்களினால் துரத்தப்பட்டு அகதி முகாமில் வாழ்ந்து வரும் ஒரு பலஸ்தீன சிறுமியின் கூற்று. இப்படி எத்தனையெத்தனையோ சிறுவர்களிடம் கேட்டால் அவர்களின் வயதை மீறிய பல கதைகள் அவர்களிடம் இருக்கின்றன.

பலஸ்தீன அகதி முகாமில் வாழ்ந்து வரும் ஒரு பெண் இவ்வாறு கூறுகிறார்.

இஸ்ரேலிய இராணுவத்தினர்களுடன் புல்டோஸர்களும் வந்தது. அதிர்ச்சியடைந்த நான் என்னுடைய வீட்டை உடைக்க வேண்டாமென்று அவர்களுடன் வாக்குவாதப்பட்டேன். அவர்கள் எனது தலைமயிரைப் பிடித்திழுத்து எனக்கு அடிக்க ஆரம்பித்தார்கள். புல்டோஸர்கள் தகர்க்கும் வேலையை ஆரம்பித்திருந்தன. எனது மகன் வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்தது எனக்கு ஞாபகம் வந்தது. அவனைத் தூக்குவதற்காக நான் வீட்டுக்குள் ஓடினேன். நான் ஓடும் பொழுது இராணுவத்தினர் என்னைப் போகவிடாமல் இழுத்து என்னை அடித்து உதைத்தனர். அவர்களிடம் இருந்து விடுவித்துக் கொண்டு நான் வீட்டுக்குள் ஓடி எனது மகனைத் தூக்கிக் கொண்டு வெளியில் வந்தேன்.

அதற்குப் பிறகு ஒரு நாள் நான் எனது பிள்ளைகளுக்கு உணவு சமைத்துக் கொண்டிருந்த போது எனது மகள்களில் ஒருத்தி மரத்தில் கயிற்றைப் போட்டு தற்கொலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள். நான் அவளிடம் கேட்டேன் என்ன செய்து கொண்டிருக்கிறாயென. அவள் கேட்டாள் ‘நாங்கள் எப்படி இந்த வெளியில் வாழ்வது? எனக்கு சாவதைத் தவிர வேறு வழியில்லை. எனக்கு வாழ விருப்பமில்லையென.’ அது எங்களுக்கு ஒரு துயரார்ந்த தருணமாகும். ஒரு கணம் நினைத்துப் பாருங்கள் தன்னுடைய மகள் தற்கொலைக்கு முயன்று கொண்டிருப்பதைப் பார்க்கும் தாயின் நிலை என்னவாக இருக்குமென்று. பிள்ளைகளுடைய மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இரவுகளில் தூங்குவதேயில்லை.

இந்த விவரணப்படம் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பிக்கிறது. அந்தக் காலப்பகுதியில் பலஸ்தீனப் பிராந்தியத்தில் 3.2 வீதமான யூதர்களே இருந்தார்களெனவும் மீதி 96.8 வீதமானோர் அராபிய முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களுமாவர் எனவும் யூதர்களின் தொகை அங்கு எவ்வாறு காலத்துக்குக் காலம் அதிகரித்து வந்ததென்பதையும் விளக்கும் இப்படம் கடந்த 60 வருடங்களாக ஐ.நாவால் அங்கீகரிக்கப்பட்ட நிலங்களில் எவ்வாறு யூத சட்டவிரோதக் குடியேற்றங்கள் உருவானதென்றும், எவ்வாறு இஸ்ரேல் உருவாக்கப்பட்டதென்றும் இஸ்ரேல் - பலஸ்தீன மோதல்களின் வரலாற்றுப் பின்புலங்களையும், தற்போதைய நிலைமைகளையும் எடுத்துக் காட்டுகின்றது.

குறிப்பாக 1880இல் முதற்கட்டமாக யூதர்கள் ஐரோப்பாவிலிருந்து குடிபெயர்ந்ததையும், 1920இல் ஏற்பட்ட பதற்றத்தையும், 1948 மற்றும் 1970இல் ஏற்பட்ட போர்களையும், 1987 முதலாவது இன்ரிபாடாவையும், ஒஸ்லோ சமாதான உடன்படிக்கையையும், குடியேற்றங்கள் விஸ்தரிக்கப்பட்டமை பற்றியும், ஐக்கிய அமெரிக்காவின் வகிபாகத்தைப் பற்றியும், 2000ஆம் ஆண்டின் இரண்டாவது இன்ரிபாடாவையும், காஸாவிலிருந்து இஸ்ரேல் பின்வாங்கி தடுப்புச் சுவர்களை உருவாக்கியமையையும் பற்றி இது பேசிச் செல்கிறது.

யூதர்களைத் தமது சகோதரர்களாக நினைத்துப் பழகிய பலஸ்தீனிய மக்கள் 1920இல் தங்களுடைய நிலங்கள் அபகரிக்கப்பட்டபோதே முதற் தடவையாக வெகுண்டெழுந்தார்கள். அப்போதுதான் பலஸ்தீனர்களுக்கும் - யூதர்களுக்குமிடையே மோதல்கள் ஆரம்பித்தது. இதற்கு முன்பாக இவர்களுக்கிடையே மோதல்கள் எதும் இடம்பெறவில்லை. இதற்கு முன்னர் யூதர்களும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் பலஸ்தீனத்தில் அமைதியாக வாழ்ந்து வந்துள்ளனர் என்று இப்படம் கூறுகிறது.

மிகச் சிறப்பான முறையில் தொகுக்கப்பட்டுள்ள படிமங்களும், சொற்களும் ஆர்வமூட்டக்கூடிய ஒரு முடிவை நோக்கி நம்மை அழைத்துச் செல்கின்றன. சாதாரண பலஸ்தீனப் பிரஜை ஒருவரின் நாளாந்த வாழ்க்கை மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் சட்டபூர்வமற்ற முறையிலும், துரோகத்தனமான முறையிலும் அதிகாரம் செலுத்துகின்றனர். இஸ்ரேலிய யூதர்களின் கீழ் பலஸ்தீனிய முஸ்லிம்களும், பலஸ்தீனியக் கிறிஸ்தவர்களும் தாழ்த்தப்பட்டுள்ளார்கள். பின் காலனித்துவ வரலாற்றுக் காலகட்டத்தில் ஒடுக்குமுறையும் அசமத்துவமும் மாறிமாறியும், ஒருங்கிணைந்தும் வருகின்றன என்பதை இந்தச் செயல் எமக்கு உணர்த்துகிறது.

இதற்கு முழு ஆதரவு அளிக்கிறது அமெரிக்கா. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா நாளாந்தம் 8 மில்லியன் டொலர்களை இஸ்ரேலுக்கு உதவியாக வழங்கி வருவதாகவும், 1949 – 1996 வரை அமெரிக்கா 62.5 பில்லியன் டொலர்களை இஸ்ரேலுக்கு கொடுத்துள்ளது. எனவும் இந்த விவரணப்படம் கூறுகிறது.

1947இல் ஐ.நா பாலஸ்தீனத்தை இரு கூறாக்கி பலஸ்தீனியர்களின் நிலப்பரப்பில் 56 சதவீதத்தை ஜியோனிஸ்டுகளுக்கு கொடுத்தது. மூன்றில் இரண்டு பங்கினரான பலஸ்தீனிய மக்களுக்கு 43 வீதமான நிலத்தையும், மூன்றில் ஒரு பங்கினரான இஸ்ரேலியர்களுக்கு 56 வீதமான நிலத்தையும் ஐ.நா பங்கிட்டு வழங்கியது. அதன் பிறகு ஜியோனிஸ்டுகள் பலஸ்தீனர்களின் நிலப்பரப்பில் 78 சதவீதத்தை அபகரித்துக் கொண்டனர். 1948இல் இஸ்ரேல் ஒரு நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இப்பிரகடனம் வெளியாகியவுடன் அமெரிக்கா இஸ்ரேலை அங்கீகரித்தது. இலட்சக்கணக்கான பலஸ்தீனிய மக்கள் அகதிகளாக்கப்பட்டு கிட்டத்தட்ட பலஸ்தீனமென்ற நாடே இல்லாமற் போயுள்ளது. அடுத்தடுத்து வந்த இஸ்ரேலிய பிரதமர்களின் கண்களுக்கு இந்த மக்கள் நசுக்கியெறியப்பட வேண்டிய வெட்டுக்கிளிகளாகவும், இரண்டு கால்களைக் கொண்ட மிருகங்களாகவுமே தெரிந்தனர். மனித ஆத்மாக்களாகத் தெரியவில்லை. அன்றிலிருந்து இன்றுவரை அவமானப்படுத்தல்களும், மிருகத்தனமான தாக்குதல்களும் பலஸ்தீனிய மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

1993இல் நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் இஸ்ரேல் - பலஸ்தீனிய சமாதான உடன்படிக்கை கொண்டு வரப்படுகிறது. அதற்கு பின்னர் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுடைய எண்ணிக்கை இரண்டு மடங்காக இரண்டு இலட்சத்திலிருந்து நான்கு இலட்சமாக அதிகரித்தது. நோர்வேயால் மேற்கொள்ளப்பட்ட ஒஸ்லோ சமாதான உடன்படிக்கை காலத்தில் மட்டும் 740 வீடுகள் தகர்க்கப்பட்டுள்ளன என ஒமிஸ் சகோதரர்களால் புள்ளிவிபரமிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஐ.நாவால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் எல்லாவற்றையும் அமெரிக்காவும், இஸ்ரேலும் நிறைவேற்றாமல் இருந்து வருகின்றன. இஸ்ரேலியர்களால் பலஸ்தீனியர்கள் மீது தொடுக்கப்பட்ட அனைத்து யுத்தத்திலும் ஏதோ ஒரு வகையில் அமெரிக்காவின் பங்கு இருந்து வந்துள்ளது. பலஸ்தீனிய மக்களின் குடியிருப்புக்களை தகர்த்து அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிப்பதில் அமெரிக்க ஏவுகணைகளின் பங்களிப்பே அதிகமாகவுள்ளதென்பது நாமறிந்த ஒன்று.

இந்த விவரணப்படத்தில் வரும், வீடுகளைத் தகர்த்து முன்னேறிவரும் இஸ்ரேலிய டாங்கிகளுக்குச் சிறுவனனொருவன் கல்லெறியும் காட்சிப் படிமமானது இளம் தலைமுறையினரிடம் தூண்டிவிடப்படும் வன்முறைகளைப் பறைசாற்றுகிறது. கோபம், விரக்தி என்பவற்றைக் கட்டுப்படுத்த முடியாத பலஸ்தீனியர்கள் இஸ்ரேலியத் தெருக்களிலும், பொது இடங்களிலும் மனித வெடிகுண்டுகளாக மாறி வெடிக்கின்றனர். இதன் காரணமாக பலஸ்தீனிய மக்களின் மேல் இஸ்ரேலியர்கள் இரக்கமற்ற தாக்குதல்களை நடத்தி அவர்களை மேலும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர்.

‘ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டபோது யூதர்கள் செழுமையுடன் வாழ்ந்த ஒரேயொரு பிரதேசம் பலஸ்தீனம்தான். மேற்குலகத்தவர்களிடமுள்ள பல தவறான ஐதீகங்களில் ஒன்று யூதர்களும் பலஸ்தீனர்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மோதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான்’ என்று கூறுகிறார் கத்தோலிக்க சமூகசேவையாளரான டக்ளஸ் டிக்ஸ்.

‘இராணுவ நிர்வாகத்தின் கீழ் பலஸ்தீனர்களுக்கு சிவில் உரிமைகள் எதுவும் இல்லை. ஏனெனில் அவர்கள் இந்நாட்டின் பிரஜைகள் அல்ல’ என இஸ்ரேலின் மனித உரிமைச் சட்டத்தரணி அலெக்றா பச்சேகோ தெரிவிக்கிறார்.

கொள்கைகள் பற்றிய கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த பில்லிஸ் பெனிஸ் திட்டமிட்ட இராணுவக் குடியேற்றத்தை இவ்வாறு வரையறுக்கிறார் ‘பௌதீக ரீதியாக உங்களுடைய நிலத்தில் ஒரு அந்நிய இராணுவம் குடியிருந்து உங்களுடைய வாழ்க்கையை அது கட்டுப்படுத்துமானால் இது ஒருவகையான குடியேற்றம்தான். அதாவது இராணுவத்தினரையும், குடியேற்றக்காரர்களையும் கொண்ட ஒரு திட்டமிட்ட குடியேற்றம் அது.’

வீடுகளைத் தகர்ப்பதற்கு எதிரான இஸ்ரேலியக் குழுவைச் சேர்ந்த ஜெப் கால்ப்பர் சொல்கிறார் ‘பலஸ்தீனர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுகின்ற நடவடிக்கையின் ஒரு அம்சமே இது. இது ஒருவகையான இனச் சுத்திகரிப்புத்தான். பலஸ்தீனியர்களுடைய நிலங்கள் தெரிவு செய்யப்பட்டு குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றது. அந்நிலங்களில் என்ன இருந்தாலும் அவை புல்டோஸர் போட்டு இடித்தழிக்கப்பட்டு புதிய இஸ்ரேலிய நகரம் உருவாக்கப்படுகிறது. 2000ஆம் ஆண்டிலிருந்து 4000க்கும் மேற்பட்ட வீடுகள் இவ்வாறு தகர்க்கப்பட்டுள்ளன.’

இஸ்ரேலிய சமாதானச் செயற்பாட்டாளர் ஆதம் கெல்லர் கூறுகிறார் இரண்டு விதமான குடியேற்ற வாசிகள் அங்கு குடியேறியுள்ளனர். முதலாவது வகையினர் கோட்பாட்டு ரீதியாகக் குடியேறியவர்கள். அவர்கள் நினைக்கிறார்கள் இந்தப் பிராந்தியம் யூதர்களுக்கு கடவுளால் வாக்களிக்கப்பட்ட பூமியென்று. அதனால் இந்த பிரதேசத்திற்கு வந்து குடியேறுவது தங்களுடைய கடமையென அவர்கள் நினைக்கிறார்கள். இரண்டாவது வகையினர் சாதாரண இஸ்ரேலிய குடியேற்றவாசிகள். ஏனென்றால் அவர்களுக்கு வீட்டு வசதிகள் உட்பட பல்வேறு வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்கிறது. உதாரணமாக அங்குள்ள ஒரு வீட்டில் அவர்கள் பத்து வருடங்கள் குடியிருந்தால் அதன் பிறகு அவர்கள் வீட்டுக்காக எந்தப் பணத்தையும் செலவிடத் தேவையில்லை.’

ஹைஃபா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இஸ்ரேலிய வரலாற்றாசிரியரான இலான் பபே சொல்கிறார் ‘யூதக் குடியேற்ற வாசிகள் பலஸ்தீனத்திற்கு வந்தபோது அவர்களில் பெரும்பாலானவர்கள் பலஸ்தீனம் வெறுமையாக இருப்பதாக நம்பினார்கள். ஏனெனில் அவர்கள் அவ்வாறுதான் கல்வி ஊட்டப்பட்டுள்ளார்கள்.’

இவ்வாறு பலஸ்தீனியர்களுக்குச் சார்பாகவும், எதிரானதுமான பலரின் நேர்காணல்கள் இந்த விவரணப்படத்தினுள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. முடிவில்லாத போருள் மறைந்திருக்கும் உண்மைகளையும், தகவல்களையும் ஆய்வுக்குட்படுத்தும் இந்தப் படம் தவறான எண்ணக் கருக்களையும், ஐதீகங்களையும் கேள்விக்குள்ளாக்குகிறது. இஸ்ரேலிய இராணுவ அதிகாரத்தின் கீழான வாழ்க்கையை இது விபரிக்கிறது.

பலஸ்தீனிய - இஸ்ரேலிய மோதல்களைப் பற்றி இவ்வாறான விவரணப்படம் இதுவரை உருவாக்கப்படவில்லை. இதனைவிட இந்த விவரணப்படம் மைக்கேல் மூரின் Fahrenheit 911, Bowling for Columbine மற்றும் நோம் சொம்ஸ்கியின் Manufacturing Consent போன்ற ஆவணப்படங்களைப் போல வலிமையான ஆதாரங்களையும், உணர்ச்சிகரமான படிமங்களையும் தனி ஆளுமைகளின் நேர்காணல்களையும் கலவையாகக் கொண்டதாக அமைந்துள்ளதென திரைப்பட விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

அமெரிக்க ஊடகங்கள் பலஸ்தீனப் பிரச்சினையின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளன எனத் தெரிவிக்கும் அப்துல்லா, சுபியான் சகோதரர்கள் இந்த விவரணப்படத்தை நாங்கள் தயாரித்த போது பலஸ்தீன மக்கள் தங்கள் ஆத்மாவின் ஒரு பகுதியை எங்களிடம் பங்கிட்டுக் கொண்டார்கள். நாங்கள் அவற்றை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்றோம் என்கிறார்கள். இதன் மூலம் ஏந்த ஒரு நாட்டிலும் மோதலை அறிக்கையிடுவதில் ஊடகங்களிடமிருந்த பாரபட்சத்தை இப்படம் அம்பலப்படுத்துகிறது.

globaltamilnews.net
July 05 2009