Tuesday, August 3, 2010

நரகத்தை நோக்கிய ஒரு பாதை... The Road to Guantanamo‘நீ அல்ஹைய்தாவா?’ கேட்பது ஒரு அமெரிக்க அதிகாரி. ஆணவமும் அகங்காரமும் அவன் முகத்தில். அவனுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருக்கும் ஆசிப் சொல்கிறான் “இல்லை”. அந்த அமெரிக்க அதிகாரியுடன் இருக்கும் அமெரிக்கப் படையினன் இவனைத் தாக்குகிறான். மீளவும் அந்த அதிகாரி கேட்கிறான். நீ அல்ஹைய்தா தானே? இவன் மீளவும் “இல்லை” என்கிறான். திரும்பவும் தாக்குகிறான் அந்தப் படையினன். இவன் அல்ஹைய்தாவா இல்லையா என்ற உண்மை அல்ல முக்கியம். அவர்கள் சொல்வதற்கு இவன் தலையாட்ட வேண்டும் என்று மட்டுமே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அதனை மேலும் நிறுவுகிறது இன்னொரு விசாரணை:

கைது செய்யப்பட்டுள்ள ஸாபிக்கிடம் விசாரணையை மேற்கொள்ளும் வோஸிங்டனிலிருந்து வந்த பெண் அதிகாரி தொலைக்காட்சியில் 2000ஆம் ஆண்டு ஒசாமா பின்லேடன் உரையாற்றும் போது, அல்ஹைய்தா உறுப்பினர்கள் உட்கார்ந்திருந்து அவருடைய உரையைக் கேட்பது போன்ற ஒரு காட்சியைக் காட்டி ‘இதிலிருப்பவர்களை உன்னால் இனம் காண முடிகிறதா? எனவும், அதில் தெளிவில்லாத ஒரு காட்சியைக் காட்டி இது ஆசிப், இது றுஹேல், இது நீ’ எனவும் கூறுகிறாள்.

‘2000 ஆம் ஆண்டு நாங்கள் ஆப்கானிஸ்தானுக்கு வரவில்லை. அப்போது நாங்கள் இலண்டனில் இருந்தோம்’ என்று ஸாபிக் கூறுகிறான்.

‘நான் இந்த ஒளிப்பதிவு நாடாவில் உன்னைப் பார்த்தேன். அந்த நேரம் நீ ஆப்கானிஸ்தானில் தான் இருந்துள்ளாய்’ என அந்த அதிகாரி விடாப்பிடியாகக் கூறுகிறாள்.

இல்லையென மறுக்கும் ஸாபிக்கிடம் இது நீதான் என மீண்டும் மீண்டும் கூறி அவனை ஒத்துக் கொள்ளும்படி வற்புறுத்துகிறாள். கடைசிவரை அவனும் மறுக்கிறான்.

பெற்றதாயினால் கூட பிள்ளையினை அடையாளம் கண்டு பிடிக்க முடியாதபடி தெளிவில்லாத அந்த ஒளிப்பதிவு நாடாவில் உள்ள காட்சியில் நீதான் உள்ளாய் என ஒப்புவிக்க வைக்கும் தந்திரோபாயத்தை கையாள்கிறாள் அந்த முட்டாள் அதிகாரி.

அவளுக்குத் தேவையானதெல்லாம் உண்மை அல்ல. அதிலிருப்பது அவர்கள் தான் என்றும் அவர்கள் அல்ஹைய்தா உறுப்பினர்கள் என்று ஒத்துக் கொள்வதும் தான்.

உலகம் முழுவதும் அதிகாரத்திலிருப்பவர்கள் தேடுவது உண்மையை அல்ல. அவர்கள் விரும்புவதை மற்றவர்கள் சொல்ல வேண்டும், ஏற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புகிறார்கள்.

இதனை அற்புதமாக வெளிக்கொண்டு வந்திருக்கும் திரைப்படம் தான் த றோட் ரு குவான்டனமோ.

ஆப்கானிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டு பின் குவான்டனாமோ வதைமுகாமிற்கு அனுப்பி வைக்கப்படும் ஆசிப் இக்பால், றுஹேல் அஹமட், ஸாபிக் றசூல் எனும் மூன்று இளைஞர்களின் உண்மைக்கதையை மையமாக வைத்தும், குவான்டனாமோ வதைமுகாம் பற்றிய பயங்கரமான அதிர்வினை எமக்குள் ஏற்படுத்திச் செல்லும் வகையிலும் The Road to Guantanamo (குவான்டனாமோவிற்கான வழி) என்கிற திரைப்படத்தை எமக்குத் தந்திருக்கிறார் மைக்கேல் வின்ரர்பொட்டம் எனும் பிரிட்டன் நெறியாளர்.

ஒரு ‘டொக்யூ ட்ராமா’ (Docudrama) வாக உருவாக்கப்படடிருக்கும் இப்படைப்பு, திரைப்படத்திற்கான அனுபவத்தைத் தரும் அதேவேளை ஒரு செய்திக்குப் பின்னாலுள்ள பல்வேறு உண்மைச் செய்திகளையும், தகவல்களையும் கொண்டுள்ள ஒரு ஆழமான செய்தி அறிக்கை தரும் அனுபவத்தையும் எமக்குத் தருகிறது

இத்திரைப்படத்தின் முதல் காட்சியே கீழைத்தேச நாடுகள் தொடர்பாக அமெரிக்காவும், பிரிட்டனும் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன என்பதை வெளிப்படுத்தி விடுகின்றது.

‘இவர்களில் சிலர் மிக மோசமான மனிதர்களென்பது எனக்கு நன்றாகத் தெரியும்’ எனும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஸ் உரையாற்றும் போது, அருகில் அன்றைய பிரிட்டிஸ் பிரதமர் ரொனி பிளேயரும் நிற்பதான ஒரு இணைப்புக் காட்சியுடனேயே படம் ஆரம்பமாகிறது.


இங்கிலாந்தின் ரிப்ரன் நகரில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிப் 2001 ஆம் ஆண்டு செப்ரம்பர் 28ஆம் திகதி தனது திருமணத்திற்காக இலண்டனிலிருந்து பாகிஸ்தானின் கராச்சிக்குப் பயணமாகிறான். அவனுடன் கூடவே அவனுடைய நண்பர்களான றுஹேல் அஹமட், ஸாபிக் றசூல், மொனீர் அலி ஆகிய மூவரும் செல்கிறார்கள்.

பாகிஸ்தான் சென்றடையும் அவர்கள் அங்கிருக்கும் பள்ளிவாசலுக்குத் தொழுகைக்குச் செல்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் பணியாற்றுவதற்குத் தொண்டர்களைக் கோரும் அங்குள்ள இமாமின் பேச்சால் கவரப்பட்டு முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களுக்கு உதவ காபூல் நகரை நோக்கிப் பயணமாகிறார்கள்.

முதலில் தலிபான்களின் இதயபூமி என அழைக்கப்படும் கந்தகாரை வந்தடையும் அவர்கள் பின்னர் அமெரிக்காவால் குண்டுத் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இருண்ட உலகமான
காபூலை நோக்கிப் பயணமாகிக் கொண்டிருக்கும் போது ஆசிப் கடும் நோய்வாய்ப்படுகிறான்.

கடும் போரும், சிதிலமடைந்த நகருமான காபூலில் இருந்த நாட்களில் அவர்களினால் அங்குள்ள மக்களுக்கு எதுவுமே செய்ய முடியாமல் இருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் திரும்பவும் பாகிஸ்தானுக்குத் திரும்பி வர முயற்சிக்கிறார்கள். பாகிஸ்தான் செல்வதற்காக வாகனமொன்றில் ஏறி இறுதியாகத் தலிபான்களின் கட்டுப்பாட்டினுள் இருந்த குண்டுஸ் நகரத்திற்கு வரும் போது குண்டுஸ் நகரமும் அமரிக்கப் படையினால் கைப்பற்றப்படுகிறது. இந்தவேளையில் அமெரிக்க இராணுவத்தினால் கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அங்கிருந்து தப்பும் முயற்சியில் நண்பர்களில் ஒருவனான மொனீர் காணாமற் போய்விடுகிறான். இறுதிவரை அவனுக்கு என்ன நடந்தது என்று கண்டறியப்படவேயில்லை. கடுமையான எறிகணைத் தாக்குதல்களில் இவர்களுடன் வந்த பலர் இறந்து போகிறார்கள். வழியெங்கும் இறந்தவர்களின் உடலங்கள் சிதறிக் கிடக்கின்றன.

நம்பிக்கையை இழந்து போனவர்களாக காபூலை நோக்கிப் பயணமாகும் போது ஆப்கானின் நோர்தேன் அலையன்ஸ் (Northern alliance- ஆப்கான் இராணுவத்தினராலும், தலிபான்களுக்கெதிரான ஒட்டுக் குழுக்களினாலும் உருவாக்கப்பட்ட அமைப்பு. மேற்கத்தைய ஊடகங்களினாலேயே இது Northern alliance என அழைக்கப்பட்டது.) படையிரால் கைது செய்யப்படுகிறார்கள். கைது செய்யப்படும் இளைஞர்களிடமுள்ள பெறுமதிமிக்க பொருட்கள் அவர்களால் அபகரிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் கைக்கூலிகளாகச் செயற்பட்ட இந்த நோதேர்ன் அலையன்ஸ் இராணுவத்தினர் அல்கெய்தா அமைப்பின் உறுப்பினர்களென தம்மிடம் அகப்பட்ட அப்பாவி இளைஞர்கள் பலரை அமெரிக்க இராணுவத்திற்கு தலைக்கு 5 ஆயிரம் டொலர்படி விற்றுள்ளனர் எனத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த மூவருடன் பல நூற்றுக்கணக்கானவர்கள் கென்டைனர் ஒன்றினுள் நோர்தேன் அலையன்ஸ் படையினரால் பலவந்தமாகத் திணிக்கப்படுகிறார்கள். மூச்சு விடக் கூட முடியாமல் ஒவ்வொருவரும் அச்சமுற்றிருக்கும் வேளை மூடப்பட்ட கென்டைனருக்கு வெளியிலுள்ள படையினர் இவர்களை நோக்கிச் சுடுகிறார்கள். இருண்ட உட்பகுதிக்குள் என்ன நடக்கிறதென்று தெரியாத பலர் இறந்து போகிறார்கள்.

அதிர்ஸ்டவசமாகத் தப்பிய ஆசிப், றுஹேல், ஸாபிக் மூவரும் உயிர் பிழைத்த மற்றவர்களுடன் சேர்த்து ஆப்கானிஸ்தானின் வடபகுதியிலுள்ள செபஹர்ன் சிறையில் தள்ளப்படுகிறார்கள். பின்னர் கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் விமானம் மூலம் கியூபாவிலுள்ள குவான்டனாமோ சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்படும் அவர்கள் முதலில் அங்குள்ள எக்ஸ்ரே முகாமிலும், பின்னர் டெல்ரா முகாமிலும் தடுத்து வைக்கப்படுகிறார்கள். இம்முகாம்களில் முடிவற்ற சித்திரவதைகளுக்கும், விசாரணைகளுக்கும் இவர்கள் ஆளாகிறார்கள்.

40 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் குவான்டனாமோ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என இன்னொரு குறிப்புக் கூறுகிறது.

பெருமளவு கல்வியறிவுள்ளவர்களையும், புத்திசாலிகளையும், ஒழுக்கமுள்ளவர்களையும் தமக்கேற்றவாறு மூளைச்சலவை செய்வதற்குப் பயன்படுத்த முடியாதென்பதனால் உலகம் பூராவுமுள்ள அரசாங்கங்கள் தமது படையில் இணைத்துக் கொள்ளப்படும் நபர்கள் திருப்பிக் கேள்வி கேட்காதவர்களாகவும், இனவாதிகளாகவும் இருப்பதனையே விரும்புகின்றனரென்பதையும் இத்திரைப்படம் மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

ஏனெனில் குவான்டனாமோ வதைமுகாமில் விசாரணை செய்த சிஐஏ மற்றும் எம் 15 இன் அமெரிக்க, பிரித்தானிய அதிகாரிகள் இந்தவிதமான ஆட்களாகத்தான் இருந்தார்கள். அதாவது தாம் நினைப்பதைக் கைதிகள் ஏற்றுக் கொண்டு, அவர்கள் குற்றம் செய்யாதவர்களாக இருந்தாலும் குற்றம் செய்தவர்களென ஒப்புக்கொள்ள வேண்டுமென்பது இந்த அதிகாரிகளுடைய அவாவாக இருக்கிறது. அவர்களுக்கு உண்மையை அறிந்து கொள்வதில் எந்தவிதமான அக்கறையுமிருக்கவில்லை. தங்களது செயல்களை நியாயப்படுத்துவதற்கு மட்டுமே அவர்கள் விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள் என்பதை பல காட்சிப் படிமங்களினூடு இயக்குநர் எங்களுக்கு புரியவைக்கிறார்.

செப்ரம்பர் 11க்குப் பின் ஈராக் மீதானதும், ஆப்கானிஸ்தான் மீதும் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தை அமெரிக்கா கட்டவிழ்த்து விட்டது.

அன்றைய நாட்களில் ஈராக்கில் தான் ஊட்டி வளர்த்த சதாம் குசேனை ஒழித்துக் கட்டுவதில் அமெரிக்கா மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சதாமின் ஆதரவாளர்களெனச் சந்தேகிக்கப்பட்டவர்களெல்லாம் கைது செய்யப்பட்டு அபுகிராப் சிறைச்சாலையில் அமெரிக்க இராணுவத்தினால் கடுமையான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். காணாமற் போனார்கள்.
அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஸ்ஸின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த வன்முறைகள் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் என்ற போர்வையினால் மூடிமறைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 11 சம்பவத்துக்குக் காரணமான பயங்கரவாதி ஒசாமா பின்லேடனையும் அவரது பயங்கரவாத அமைப்பான அல்ஹைய்தா அமைப்பையும் துவம்சம் செய்வோமெனும் பெயரில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட யுத்தத்தின் போது அல்ஹைய்தா உறுப்பினர்களெனும் சந்தேகத்தின் பேரில் அங்குள்ள அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கியூபாவில் அமைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் மிகப் பெரிய சித்திரவதை கூடாமான குவான்டனாமோ வதை முகாமில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கைதிகள் சட்ட ரீதியான எந்தவித உதவிகளும் கிடைக்கப் பெறாத வகையில் தடுக்கப்படுவதோடு, தொடர்ச்சியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.

எவ்வாறு அப்பாவிகள் பொய்யான விசாரணை, சித்திரவதைகளின் மூலம் குற்றவாளிகளாக்கப்பட்டு தண்டனை அனுபவிக்கிறார்கள். அவர்களின் வாழ்நாள் எவ்வாறு இந்த மாதிரியான முட்டாள் அதிகாரிகளின் கைகளில் சிக்கிச் சின்னாபின்னப்பட்டுப் போகிறதென்பதை இத்திரைப்படம் மிகவும் காத்திரமாக எடுத்துக் காட்டுகிறது.

இறுதியில் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாமல் இந்த மூவரும் பிரிட்டனிற்குத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். அவர்களுடைய வாழ்நாளில் இரண்டு வருடம் பொய்க் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், பலத்த சித்திரவதைகளுடன் வீணாகக் கழிய வைக்கப்பட்டுள்ளது.

குவான்டனாமோவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கானோரில் ஒரு சிலர் மீது மட்டுமே ஏதாவதொரு குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டிருக்கிறதென செய்திகள் கூறுகின்றன. இலங்கையிலும் இதேபோன்ற பிரச்சினைகளே நிலவுகின்றது. எந்தவிதக் குற்றச்சாட்டுக்களும் இல்லாமல் பல வருடங்களாகப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான அப்பாவி இளைஞர், யுவதிகள் வெலிக்கடையிலும், பூஸாவிலும், இதர முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிப்பதற்கோ அல்லது இவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கோ முடியாதபடி பயங்கரவாதத் தடைச்சட்டம் வலுவாக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் என்ற பெயரில் உலகெங்குமுள்ள அப்பாவிப் பொதுமக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அண்மையில் இலங்கையிலும் வன்னிப் பகுதியில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட யுத்தம் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் என்ற போர்வையிலேயே மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்தியாவின் மேற்கு வங்த்திலும் பழங்குடி மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய அரசாங்கத்தின் அட்டூழியங்களும் பயங்கரவாத்திற்கெதிரான யுத்தம் என்ற போர்வையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் போரின் போது ‘சந்தேகத்தின் பேரில்’ எனும் பதத்துடன் கைது செய்யப்படும் யுவதிகளும் இளைஞர்களும் சித்திரவதைக் கூடங்களிலும், வதைமுகாம்களிலும் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் பற்றிய எந்தவித தகவல்களும் வெளியில் தெரியவருவதில்லை.

அண்மையில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனும் பெயரிலும், விடுதலைப்புலி உறுப்பினர்கள் என்ற பெயரிலும் ஆண்களும், பெண்களுமாக 9 ஆயித்துக்கும் மேற்பட்டவர்கள் அரசாங்கப் படைகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் உண்மையில் விடுதலைப் புலி உறுப்பினர்களா? அவர்களில் எவ்வளவு பேர் சாதாரண அப்பாவிப் பொதுமக்கள்? என்பது யாருக்கும் தெரியாது. கைது செய்யப்பட்டவர்களைப் பார்வையிடவோ அல்லது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் சட்டரீதியான உதவி பெறுவதற்கோ அனுமதி வழங்கப்படவில்லை. அவர்களுக்கு என்ன நடைபெறுகிறதென்பது எவருக்கும் தெரியாததொன்றாகவேயுள்ளது. அவர்களின் உறவினர்களுக்குக் கூட அவர்கள் உயிருடன் உள்ளார்களா? அப்படி இருந்தால் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரியாமலுள்ளது.

பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற கோதாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள போரில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களும் யுவதிகளும் அரச பயங்கரவாதத்தின் கீழ் அனுபவிக்கும் தொடர் கொடுமைகளுக்கும் சித்திரவதைகளுக்குமான முடிவு எங்கிருந்து ஆரம்பிக்கப்படப் போகிறது?

அதனை எங்கிருந்து தொடங்குவது?

இந்தத் திரைப்படம் எம்முள் அத்தகையதொரு கேள்வியை ஏற்படுத்துகிறதல்லவா?

குளோபல் தமிழ் செய்திகள்
03.08.2009

No comments: