பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் போது ஏற்படும் வலிகள், பின்னர் அவர்கள் இல்லாது போகும்போது அந்த வெறுமை கொடுக்கும் வலிகள், தவறான வழியில் போகும் பிள்ளைகள் கொடுக்கும் வலிகள், கணவனால் துன்புறுத்தலுக்குள்ளாகி அதிலிருந்து மீள முடியாத வலிகள், சிந்திக்கத் தெரிந்த பிள்ளைகள் யாரோ ஒரு முட்டாளின் கைகளில் சின்னா பின்னப்படும்போது ஏற்படும் வலிகள். இந்த எல்லா வலிகளுமே எமது தாய்மாருக்கு வலிந்து திணிக்கப்பட்டுள்ளது.
கோவிந்த் நிஹாலினி 1940ஆம் ஆண்டு பாகிஸ்தான் கராச்சியில் பிறந்தார். 1947 இல் இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் இந்தியாவில் வசித்து வருகிறார். 1962ஆம் ஆண்டு பெங்களுரிலுள்ள ஸ்ரீ ஜெய சாம்றயேந்திரா உயர் கல்லூரியில் ஒளிப்படக்கலை சம்பந்தமாக பட்டம் பெற்றவர். இந்தியாவின் பிரபல இயக்குனரான ஷ்யாம் பெனகலின் ஆரம்பகாலப் படங்களில் இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாது கிறிஷ் கர்னாட், சத்யஜித்ரே படங்களுக்கும், ஒஸ்கார் விருது பெற்ற றிச்சார்ட் அற்றென்பெறோவின் காந்தி படத்திற்கும் இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிஹாலினியும், பெனகலும் பல சமூகப் பிரக்ஞையுள்ள படங்களை இயக்கியுள்ளனர். பதினைந்துக்கும் மேற்பட்ட சமூகப் பிரக்ஞையுடைய திரைப்படங்களை கோவிந்த் நிஹாலினி இயக்கியுள்ளார். அந்தவகையில் பெண்ணியவாதி, சமூகசேவையாளர், எழுத்தாளர் என்று பல வகையிலும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் மகாஸ்வேதாதேவியின் நாவலான Mother of 1084 என்கிற நாவலைத் திரைப்படமாக தந்துள்ளார் கோவிந்த் நிஹாலினி. இதற்கான திரைக்கதையையும் நிஹாலினியே எழுதியுள்ளார். இந்தத் திரைப்படம் 1998ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது
"நாங்கள் இளைஞர்கள் அம்மா. இள ரத்தம். நாங்கள் இந்த நகரத்தைச் சிவப்பாக்க விரும்புகிறோம். பாதுபாப்பில்லாத இந்த நகரத்தை ரோஜா மாதிரி சிவப்பாக, புரட்சிச் சிவப்பாக, இரத்தச் சிவப்பாக நாங்கள் மாற்றப் போகிறோம்.""நாங்கள் இந்த நகரத்தை பாதுகாப்பற்ற தன்மையிலிருந்தும் பயங்கரம் மற்றும் அச்சத்திலிருந்தும் விடுவிக்க விரும்புகிறோம். இத்தனை வருடங்களாக பயத்தினுள் எங்களை வைத்திருப்பவர்களிடமிருந்து விடுவித்துக் கொள்ள விரும்புகிறோம்."
"நான் ஒரு கனவு காணுகிறேன் அம்மா. அது ஒரு அற்புதமான கனவு. அது எல்லாவற்றையுமே தலைகீழாகப் புரட்டிப் போடுகின்ற கனவு. அது எல்லாவற்றையும் மாற்றும். இந்தச் சூழல், இந்த நிலைமைகள், இந்தச் சமூகம் எல்லாவற்றையும். அந்த உலகம் ஏழ்மை, நோய், அசுத்தம், பசி, ஊழல், மோசடி என எல்லாவற்றிலிருந்தும் விடுவிக்கப்பட்ட ஒரு உலகமாக இருக்கும்."
"இருட்டினில் வாழ்பவர்களுக்கு ஒளியைக் கொண்டு வருவது பற்றி நான் கனவு காண்கிறேன். என்னுடன் உள்ள நண்பர்களுடன் நான் இந்தக் கனவைப் பகிர்ந்து கொள்கிறேன். நாங்கள் எங்களுடைய கனவுகளைப் புரட்சியினூடாக நிதர்சனமாக்க விரும்புகிறோம். நாங்கள் ஒரு புதிய உலகத்தைச் சிருஷ்டிக்க விரும்புகிறோம். சமத்துவம், சமாதானம், நீதி என்பவற்றை எல்லோருக்கும் கொடுக்கும் ஒரு புதிய உலகமாக அது இருக்கும்."
1970களில் கல்கத்தாவின் வீதியெங்கும் இந்தக் குரல்கள் தான் ஒலித்துக் கொண்டிருந்தன. ஒடுக்குமுறைக்குள்ளான மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடத் தொடங்கினர். நக்சல்பாரி இயக்கம் இதற்கு தலைமை தாங்கி வழி நடத்தியது. இது பண்ணையாளர்களுக்கு எதிராகவும், முதலாளித்துவத்திற்கு எதிரானதுமான விவசாயப் புரட்சியாக வெடித்தது. மார்க்ஸ், லெனின், மாஓ போன்ற மாபெரும் தலைவர்களது கொள்கைகளை அடியாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கத்தில் ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் தமது கல்வியைத் துறந்து இணைந்து கொண்டிருந்தனர். இந்த இயக்கம் கல்கத்தாவில் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தமிழ்நாடு உட்பட பரவி வளர்ச்சி பெற்றது. இவ்வாறு இந்த இயக்கத்தில் இணைந்து கொண்ட இளைஞர்களைப் பயங்கரவாதிகள் என்று கூறி அன்றைய அரசாங்கம் நாயைச் சுடுவது போல் சுட்டுக் கொன்று குவித்தது. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இந்தப் போராட்டத்தில் காட்டிக் கொடுக்கப்பட்டு உயிர் துறந்தனர். அவ்வாறு நக்கசல்பாரி இயக்கத்தில் இணைந்து பின்னர் சக நண்பனாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு அந்த ஊர்ப் பண்ணையாளர்களால் படுகொலை செய்யப்படுகின்றனர் உயர் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த பிரத்தி என்ற இளைஞனும், அவனது நண்பர்களும்.
படம் அதிகாலையில் வரும் ஒரு தொலைபேசி அழைப்புடன் ஆரம்பிக்கிறது. பிணவறையில் வைக்கப்பட்டுள்ள 1084 ஆம் இலக்க பிணத்தை அவளுடைய மகனுடையது தானா என அடையாளம் காட்ட வருமாறு பொலிஸிலிருந்து அழைக்கும் குரல். அவள் பிணவறைக்குச் சென்று பார்க்கிறாள். அவளுடைய மகன் பிரத்தி கொல்லப்பட்டு விட்டான். அந்தப் பிணத்தினுடைய எண்தான் 1084. தாயினால் அடையாளம் காட்டப்படும் பிரத்தியின் உடல் பெற்றவளிடம் ஒப்படைக்கப்படாமல் பொலிஸாராலேயே எரியூட்டப்படுகிறது.
ஆனால், பிரத்தியினுடைய தந்தைக்கோ சகோதரர்களுக்கோ அவன் கொல்லப்பட்டது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. மாறாக அவனுடைய நக்சல்பாரிச் செயற்பாடுகள் பற்றி பத்திரிகைகளில் வந்து விடக் கூடாது. அதனால் தமது கௌரவத்திற்கு இழுக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்று கவலைப்படுபவர்களாக வெறும் சுயநலமிகளாக இருக்கிறார்கள். பிரத்தி என்று ஒருவன் இருந்தான் என்பதையே அவர்கள் மறந்து போகிறார்கள். அவனைப் பற்றி நினைப்பதையே பாவக்கேடாகக் கருதுகிறார்கள்.
ஆனால் தாயால் அப்படி இருக்க முடியவில்லை. அவள் மகன் மீது மிகுந்த அன்பும், மதிப்பும் வைத்திருக்கிறாள். அதுவரை தனது மகன் எங்கே போகிறான், எப்போது வருகிறான், என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று அறியாத தாய், மகனுடைய இறப்பின் பின்பே அவனைப் பற்றி இவ்வளவு காலமும் தான் அறிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறேனே என்று நினைத்து வருந்துகிறாள். மகனைப் பற்றி அறிந்து கொள்வதற்காக அவனுடைய நண்பர்களைத் தேடிப் பயணத்தை ஆரம்பிக்கிறாள். ஆனால் அவள் அறிந்திருக்கவில்லை அது அவளுடைய மகனைப் பற்றி அறியும் பயணமாக மட்டுமல்லாது அது ஒரு புதிய உலகத்தையே அவளுக்குக் காட்டப் போகிறது என்று.
பிரத்தியுடன் படுகொலை செய்யப்பட்ட அவனுடைய நண்பனின் தாயைச் சந்திக்கிறாள். அந்தத் தாய் பிரத்தியைப் பற்றிச் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அவளுக்கு ஒரு புதிய உலகைத் திறக்கிறது. தான் அறிந்து கொள்ளாத ஒரு உலகத்திற்கும் பிரத்திக்குமான உறவு அவளுக்குள் அதிர்வையும் வியப்பையும் ஏற்படுத்துகிறது. மகனின் மீதான அவளுடைய மதிப்பு உயர்கிறது.
பிரத்தியின் காதலியும் நக்சல்பாரி செயற்பாட்டாளர்களில் ஒருவருமான நந்தினி பிரத்தியைப் பற்றி இன்னொரு உலகத்தை அவளுக்குத் திறந்து காட்டுகிறாள். மகனைப் பற்றி மட்டுமல்லாது சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட ஏழை மக்களைப் பற்றியும் அறிந்து கொள்ள உதவும் ஒரு பயணமாக அவளுடைய இந்தத் தேடல் அமைந்து விடுகிறது.
போராளி மகனைப் பற்றிய அவளுடைய தேடல் இதுவரை அவள் கண்டுகொள்ளாதிருந்த ஒரு உலகத்தை அவளுக்குத் திறந்து விடுகிறது. அன்றாட உணவுக்கே அல்லற்படும் மக்கள், பணக்கார ஆதிக்க சாதியினரால் ஒடுக்குமுறைக்குள்ளாகும் ஏழை விவசாயிகள், காலங்காலமாக அடிமைகள் போல உழைத்து ஓடாகிய மக்கள் கூட்டம். இவர்கள் எல்லாம் அவள் வாழ்கிற அதே கல்கத்தாவில் தான் வாழ்கிறார்கள். ஆனால் கல்கத்தாவில் இப்படி ஒரு நிலைமை இருந்தது தெரியாமலே அவள் வாழ்ந்திருக்கிறாள். ஆனால் அவளுடைய மகன் பிரத்தியினுடைய நண்பர்கள் வட்டம் இந்த ஒடுக்கப்பட்டவர்களினாலேயே சூழ்ந்துள்ளது. அவன் இவர்களில் ஒருவனாக வாழ்ந்திருக்கிறான். இவர்களுக்காக போராடியிருக்கிறான். அந்தப் போராட்டத்திலேயே அவன் மரணித்திருக்கிறான். இதன் பின்னர் இவ்வளவு நாளாக தன் மகனைப் பற்றி அறிந்து கொள்ளாமல் இருந்து விட்டேனே என்ற ஆதங்கமும் கழிவிரக்கமும் மேலிட தனது வீட்டிலுள்ளவர்கள் மீதும், தனது உயர்குடி சமூகத்தின் மீது அவளுக்கு வெறுப்பும், கோபமும் ஏற்படுகிறது. அந்த வெறுப்பு தனது கணவனைப் புறக்கணிக்க வைக்கிறது, மகளின் படாடோபமான திருமண வைபவத்தைக் கூடப் புறக்கணிக்க வைக்கிறது.
"பிரத்தி, நீ இந்த அறையில் பல பொருட்களைக் கொண்டு வந்து சேமித்து வைத்துள்ளாய். எனக்கு ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. மணிக்கணக்கில் தனியாக இந்த அறையில் இருந்திருக்கிறாய. அதைக்கூட நான் பெரிதாக உணரவில்லை, சாதாரணமாக உன்னுடைய வயதில் இருப்பவர்களுக்கிருக்கும் சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள், கனவுகளோடு இருக்கிறாய் என்றே நான் நினைத்தேன். ஆனால் நீ ஆபத்துக்களோடு இருந்திருக்கிறாய்? நான் உன்னுடைய அம்மா. ஆனால், எந்த மாதிரியான அம்மா? உன்னைப் பற்றி எதையும் கண்டுகொள்ளாத, அறிந்து கொள்ளாத அம்மா. உன்னுடைய முகத்தில் தெரிந்த புன் சிரிப்பையும், அமைதியையும் கண்டு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த அம்மா" என்று தன்னைத்தானே நொந்து கொள்கிறாள். ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அதிகளவு அன்பும், அக்கறையும் கொண்டு அவர்களுக்காகவே வாழ்ந்த தனது மகனைத் தான் விளங்கிக் கொள்ளாதற்கான தண்டனை தான் தன்னுடைய மகனுடைய இந்தப் பிரிவு என்று தேம்புகிறாள்.
மகனை தொடர்ந்த தாய் அவனது இலட்சியங்களைப் பின் தொடர்பவளாகிறாள். தன்னுடைய வங்கி வேலையை இராஜினாமா செய்யும் சுஜாதா, மனித உரிமைகளுக்கான ஆவணக் காப்பகம் ஒன்றை நிறுவி மனித உரிமைகளைக் காக்கும் பணியில் ஈடுபடுகிறாள். நந்தினியும் பழங்குடி மக்களின் உரிமைகளைக் காக்கும் போராளியாக தன் வாழ்வைத் தொடர்கிறாள்.
நந்தினி ஒரு போது பிரத்தியின் தாயிடம் சொல்கிறாள், "எதுவும் இன்னும் மாறிவிடவில்லை. சுரண்டலும் கயமையும் அயோக்கியத்தனமும் அதிகாரமும் தொடர்ந்து நிலவுகிறது" என்று.
அந்த வரிகள் எவ்வளவு உண்மையானது. அன்றிலிருந்து இன்றுவரை தமது சுய இலாபங்களுக்காக காட்டிக் கொடுப்பும், வன்முறைகளும் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கிறது. அதை நாங்கள் எமது கண்ணூடே பார்த்த வண்ணம் கையாலாகாத்தனமானவர்களாகத்தான் இருக்கிறோம்.இன்றும், தமது பிள்ளைகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாத அம்மாக்கள் கயவர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு கொன்றொழிக்கப்பட்ட, காணாமற்போன தமது பிள்ளைகளைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
கோவிந்த் நிஹாலினி அந்தத் தாயினுடைய பயணத்தூடாக எங்களையும் பயணிக்க வைக்கிறார். நாங்கள் அறிந்து கொள்ளாத, எமது ஊடகங்கள் எங்களுக்குக் காட்டாத, எமது சினிமா எங்களுக்கு மறைக்கிற ஒரு உலகத்திற்கு எங்களைப் பயணிக்க வைக்கிறார். அந்தப் பயணம் மறைக்கப்பட்ட உலகத்தை, மறைக்கப்பட்ட உண்மைகளை எங்களைத் தரிசிக்க வைக்கிறது. அந்த உலகத்தை எங்களுடன் நெருங்க வைக்கிறது. எங்களுடைய அறியாமை இருளின் மீது ஒளியைப் பாய்ச்சுகிறது.
செப் - ஒக், 2007
தாயகம் - இலங்கை
No comments:
Post a Comment