Saturday, January 8, 2011

Born on the fourth of July: போரின் திறக்கப்படாத பக்கங்கள்


இயக்குனர்: ஒலிவர்ஸ்ரோன்
லங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்ட வீடியோ கிளிப் போர்க்குற்றங்கள் தொடர்பில் புதியதொரு சர்ச்சையை உருவாக்கி விட்டிருக்கிறது. அதனை அல்ஜசீரா, பிபிஸி, சனல் 4, சி.என்.என். எனப் பல தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியிருப்பினும் சனல் 4 க்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே ஏற்கெனவே இருந்த முறுகல் நிலைமை காரணமாக அதனை சனல் 4 வெளியிட்டதாக இலங்கை அரசால் கொள்ளப்பட்டு அதற்கெதிரான பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் ஊடக அமைச்சு முதல் இராணுவப் பேச்சாளர் வரை உடனடியாகவே அவ்வீடியோவை நிராகரித்து மறுத்துரைத்திருந்த போதிலும் அது எந்த வகையில் போலியானது என்பதனை அவர்கள் இதுவரை நிரூபிக்கவில்லை.

இராணுவத்தினரால் எடுக்கப்பட்டிருந்த அவ்வீடியோ கைமாறி தமது கைகளுக்கு வந்து சேர்ந்ததாக இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதனை வெளியில் உலாவவிட்ட இராணுவத்தினருக்கு இலங்கையின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் நோக்கம் இல்லாதிருந்திருக்கலாம். ஆனால் இராணுவத்தினரிடையே அவ்வாறான எவரும் இல்லாதிருக்க முடியாது என்று சொல்வதற்கில்லை. உலகம் முழுவதும் நடைபெற்ற போர்களில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரில் போரின் கொடுரங்களையும் வலியையும் உணர்ந்த அதேவேளை மனச்சாட்சியுள்ள ஒரு சிலரால் போரின் மறைக்கப்பட்ட பகுதிகள் வெளிக்கொணரப்பட்டதும் வரலாற்றின் புதிய பக்கங்கள் திறக்கப்பட்டதும் நடந்தேறியிருக்கிறது.

அண்மையில் பார்க்கக் கிடைத்த Born on the fourth of July என்ற திரைப்படம் அத்தகையதொன்று. இந்தத் திரைப்படத்தின் நெறியாளரான ஒலிவர் ஸ்ரோன் வியட்னாமுக்கெதிராக அமெரிக்கா நடாத்திய யுத்தத்தில் பங்கேற்றவர் என்பது ஒரு விடயம். அதேவேளை அந்தத் திரைப்படத்திற்கு மூலமாக இருந்த Born on the fourth of July என்பது வியட்னாம் யுத்தத்தில் பங்கு பற்றி ஊனமுற்றுத் திரும்பிய அமெரிக்காவின் சுதந்திர தினமான யூலை மாதம் நான்காம் திகதி பிறந்த றொன் கொவிக் எனும் இராணு வீரனின் வாழக்கை வரலாற்று நூலாகும். வியட்னாம் யுத்தத்தில் தனது இடுப்புக்குக் கீழான பகுதி செயலற்றுப் போக சக்கர நாற்காலியிலிருந்தபடியே தன் வராலற்று நூலை எழுதி முடித்தார் என்பதும் இன்னொரு விடயம்.

அது மட்டுமன்றி அவர் இன்றுவரை யுத்தத்திற்கெதிரான முன்னணிப் போராளியாக இருந்து வருகிறார். தனது வாழ்க்கைக் காலத்தில் யுத்தத்திற்கு எதிராகப் போராடியதற்காகப் 12 முறை சிறை சென்றிருக்கிறார். அவருடைய Born on the fourth of July என்ற அந்நூல் வியட்னாமியப் போர் பற்றிய புதிய பார்வையை வழங்கியது. அது திரைப்படமாக வெளிவந்த போது ஓரு வகையில் அத்திரைப்படம் அமெரிக்கா வியட்னாமில் நடந்து கொண்ட முறைக்காக வியட்னாமியர்களிடம் மன்னிப்புக் கோரியதாக அமைந்தது என்கின்றனர் விமர்சகர்கள்.

இந்தத் திரைப்படத்திற்கான திரைக்கதையையும், றொன் ஹொவிக்கும் ஒலிவர் ஸ்ரோனும் இணைந்தே எழுதியிருக்கின்றனர்.
Born on the fourth of July திரைப்படம் அமெரிக்க ஜனாதிபதியாயிருந்த ஜோன் எப். கென்னடியின் உரையுடன் ஆரம்பமாகின்றது. கென்னடி நாட்டு மக்களுக்கு அதுவும் இளைஞர்களுக்கு அறிவூட்டும் வகையில் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். “நாடு உனக்கு என்ன செய்தது என்று கேள்வி கேட்காதே? நாட்டிற்கு நீ என்ன செய்தாய் என்று கேள்?” என அவர் இளைஞர்களைப் பார்த்துச் சொல்கிறார்.

அப்போது சிறுவனாக இருந்த ஹொவிக் தாயாருடன் அமர்ந்து அந்த உரையை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது தாயார் ஹொவிக்கிடம் சொல்கிறார் 'நீயும் ஒருநாள் இவ்வாறு பெருங் கூட்டத்தின் முன் உரையாற்ற வேண்டும். அதுவும் அவரைப் போல் உரையாற்ற வேண்டும். அப்போது பல நல்ல விடயங்களைச் சொல்ல வேண்டும்”.

இதன் தாக்கமாக அவன் இளைஞனான போது படையினருக்கு ஆட்திரட்டுவதற்கு கடற்படை அதிகாரிகள் கல்லூரிக்கு வந்த போது உடனடியாகவே அதில் இணைந்து கொள்கிறான்.

இதற்கு ஹொவிக் மட்டும் காரணமல்ல. அவருடைய றோமன் கத்தோலிக்கப் பின்னணியைக் கொண்ட குடும்பச் சூழலும் காரணமாக இருக்கிறது. அந்தக் கிராமமோ ஏற்கெனவே தேசப்பற்றால் பீடிக்கப்பட்டிருந்த ஒரு கிராமம். அத்தோடு தாயின் கண்டிப்பு மிக்க வளர்ப்பு, சிறு வயதிலிருந்தே சுறுசுறுப்பும், திறமையும் மிகுந்த வீரனாக அவனை வளர்க்கிறது.

அவனுடைய கல்லூரியில் ஒரு ஹீரோவாகவும், விளையாட்டு வீரனாகவும் அவன் இருக்கிறான். கல்வியிலும் வாழ்விலும் உயர்நிலையாக்கம் பெற உழைக்க வேண்டும் என்ற உந்தித்தள்ளலும், கண்டிப்பும் நாட்டுப்பற்றும் கொண்ட அவனுடைய நடுத்தரவர்க்கக் குடும்பச் சூழல் அவனை இராணுவத்தில் இணைந்து கொள்ள வைத்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

1966 இல் படையில் பணியாற்றச் சென்ற ஹொவிக் 1968 இல் வியட்னாமில் நடந்த மோதலில் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகிறான். வலது காலிலும், பின்னர் தோளிலுமாக துப்பாக்கிச் சன்னங்கள் பாய்கின்றன. களத்திலிருந்து மிகுந்த இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் அங்கிருந்த இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறான்.

எலிகள் சாதாரணமாகவே ஓடிவிளையாடும் எவ்வித வசதிகளுமற்ற மிக மோசமான வைத்தியசாலை அது. போதிய வைத்தியர்களோ தாதிகளோ மருந்துகளோ இல்லை. அப்படி ஒரு வைத்தியசாலையை அவன் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. ஏற்கெனவே குண்டடிபட்டதில் உடல் முழுக்க வலியுடனும், குண்டடிபட்டதன் காரணமாக இடுப்புக்குக் கீழ் செயலிழந்தும் உள்ள நிலைமை அவனை எரிச்சலடைய வைக்கிறது. இது குறித்து வைத்தியரிடம் முறையிடுகிறபோது அவர் சொல்கிறார். அரசாங்கம் போதிய வசதிகளை எமக்கு ஒதுக்கவில்லை. இருப்பவற்றை வைத்துக் கொண்டு தான் நாம் எல்லோரையும் பராமரிக்க வேண்டியிருக்கிறது என்று.

அங்கிருந்து மீண்டு அமெரிக்கா வரும் ஹொவிக் அதன் பின்னர் எதிர்கொள்ளும் சமூக யதார்த்தம் உளவியல் நெருக்கடி, மனச்சாட்சியின் உலுப்பல், வாழ்வின் மீதான காதலும் கானலும் தான் மீதிக்கதை.

அமெரிக்க சுதந்திர தினமான ஜுலை நான்காம் திகதியன்று சுதந்திரதினக் கொண்டாட்டம் நடைபெறுகிறது. அன்று படைவீரர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் அவன் பேச அழைக்கப்படுகிறான். சக்கர நாற்காலியில் இருந்தபடி பேச ஆரம்பித்த அவன் சிறிது நேரத்தில் பேச முடியாமல் திணறுகிறான். மேடையில் இருந்தபடியே கூட்டத்தை உற்று நோக்குகிறான். இரண்டு செவ்விந்தியர்களை கமெரா காண்பிக்கிறது. அதேநேரம் அவனது காதுகளுள் ஒரு குழந்தையின் அழுகையொலி கேட்க ஆரம்பிக்கிறது. அவனுடைய நினைவுகள் பின்நோக்கிச் செல்கின்றன.

கெரில்லாக்கள் இருப்பதாகக் கருதி வியட்னாமில் ஒரு கிராமத்தைச் சுற்றிவளைத்து சுட்டுத் தள்ளுகின்றனர் ஹொவிக் தலைமையிலான படைப்பிரிவினர். ஓவ்வொரு குடிசையாக தேடுதல் நடாத்தும் போது தான் தாங்கள் சுட்டது கெரில்லாக்களை அல்ல. அப்பாவிச்சனங்களை அதுவும் பெண்களையும் சிறுவர்களையும் என்று தெரிய வருகிறது.

ஓரு குடிசையில் தாய் குழந்தை ஒன்றை அரவணைத்தபடி இறந்து கிடக்கிறாள். அவளது உடலில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்திருக்கின்றன. அவளது மடியில் கிடந்த குழந்தையோ வீரிட்டுக் கத்தியபடி இருக்கிறது. தாங்கள் சுட்டது அப்பாவிச் சனங்களை என்று நம்பியிருந்த ஹொவிக்குக்கு இது அதிர்ச்சியளிக்கிறது. அந்தக் குழந்தையைக் காப்பாற்ற முயற்சிக்கிறான். ஆனால் கெரில்லாக்களிடமிருந்து வரும் எதிர்த்தாக்குதலில் இருந்து தப்புவதற்காக மற்றவர்கள் இவனை இழுத்துக் கொண்டு ஓடுகின்றனர். அக்குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் போனது அவனது மனச்சாட்சியை அழுத்துகிறது. அது அவன் மனதில் ஆழமாய் பதிந்தும் போய்விடுகிறது. அந்தக் குழந்தையின் அழுகுரல் இறுதி மட்டும் அவனுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாது எதிரியென நினைத்து தனது சக இராணுவ வீரனொருவனைச் சுட்டுக் கொன்ற தனது செயலையும் அவனால் ஜீரணிக்க முடியாமல் போகிறது. அவனை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் இச்செயல்கள் வியட்னாமில் அமெரிக்கப்படையினரின் வீரத்தைப் பற்றி, தாய் நாட்டுக்கான அர்ப்பணிப்புப் பற்றி பேச முயன்றும் பேச விடாது அவனைத் தடுத்து விடுகிறது. அவன் பேசவில்லை. அவனால் பேச முடியவில்லை.

இன்னொருமுறை தனது நண்பர்களைச் சந்திக்க இரவு விடுதி ஒன்றுக்கு தனது சக்கர நாற்காலியிலேயே செல்கிறான். விடுதி இளைஞர்களாலும் யுவதிகளாலும் நிரம்பி வழிகிறது. இசையும் நடனமும் மதுவும் வழிந்தோடுகிறது. ஓரு யுவதி இவனை ஆட வருமாறு கேட்கிறாள். இவன் சொல்கிறான் என்னால் முடியாது. இடுப்புக்குக் கீழே எனது உடல்செயலிழந்து விட்டது என்று. ஆனாலும் அவனால் ஆடாமல் இருக்க முடியவில்லை. இளமையும் மதுவும் அவனை ஆட்டிப்படைக்கின்றன. அவன் சக்கரநாற்காலியில் இருந்தடியே அதனை உலுப்பியபடி ஆடுகிறான். ஆடலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அவனது ஆசையும் மோகமும் அதனை தான் ஒரு போதும் அனுபவிக்க முடியாது என்கிற கோபமும் விரக்தியும் அதிகரித்து அவனை ஆட்கொள்ளும் போது அவன் சக்கர நாற்காலியுடன் தடாலடியாக வீழ்ந்து விடுகிறான்.

வீட்டுக்கு வரும் அவனிடம் தாயார் கேட்கிறார் மீண்டும் குடித்திருக்கிறாயா என்று. இந்த வீட்டில் யாரும் குடிக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறேனல்லவா என்கிறார். ஏற்கெனவே எரிச்சலும் கோபமுற்றிருந்த அவனுக்கு இது இன்னும் சினத்தை ஏற்படுத்துகிறது. அவனது இயலாமை ஆத்திரமாகிறது. அவன் சொல்கிறான் “எனக்கு எதிலும் நம்பிக்கை இல்லை. இந்த விதமாய் எனது மீதி வாழ்க்கையை என்னால் கழிக்க முடியாது. நான் இறந்து போய் விட விரும்புகிறேன் என்கிறான்.

எனக்கு வியட்னாமை மறக்க முடியாதிருக்கிறது. நீங்கள் அதைப் பற்றி அறிய விரும்பவில்லை. நீங்கள் அதனைப் பார்க்க விரும்பவில்லை. நீங்கள் அதனை மறைக்க விரும்புகிறீர்கள். ஆனால் என்னாலோ இப்படி ஒரு உதவாக்கரை மனிதனாக வாழ முடியாது என்று கதறும் அவன் கொம்யூ
னிசம் அழிக்கப்பட வேண்டும். போய்ச் சண்டையிடுங்கள். போய்க் கொல்லுங்கள் என்று நீங்கள் தானே எங்களை அனுப்பினீர்கள் என்று தாயைப் பார்த்துக் குற்றம் சாட்டும் அவன் 'நீ எனது அவமானம்' என்றதோடு தூஸண வார்த்தைகளாலும் ஏசுகிறான்.

‘அம்மா நாங்கள் வியட்னாமில் சிறுவர்களையும் பெண்களையும் சுட்டுத் தள்ளினோம். கொம்யூனிசம் ஒரு பேய். போய் அதனை ஒழிக்கப் போரிடு’ என்று எனக்குச் சொல்லித் தந்தீர்கள். கென்னடி சொன்னதென்று சொல்லி போரிடப் போகச் சொன்னீர்கள். நீங்கள் சொல்லித் தந்த எல்லாமே பொய். நாடும் இல்லை. கடவுளும் இல்லை எஞ்சியிருப்பதெல்லாம் நானும் இந்த சக்கர நாற்காலியும் மட்டும் தான்.

எனது எஞ்சிய வாழ்க்கைக்கு எதுவுமே மிஞ்சவில்லை என்று சொல்லிக் கொண்டே தனது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாதவனாக காற்சட்டை பட்டினைக் கழட்டி சிறுநீர் கழிப்பதற்காக தனக்குப் பொருத்தப்பட்டிருக்கும் ரியூப்பை வெளியில் எடுத்து இப்போது இது தான் எனது ஆண்குறி என்று கதறுகிறான். ஆண்குறி இருந்த போது அதனை எப்படிப் பாவிப்பது என அறியக் கூட எனக்கு நேரம் கிடைக்கவில்லை என்கிறான்.

ஐந்து நிமிடங்கள் திரையில் ஓடம் இந்தக் காட்சி ஊடாக ஒரு சாதாரண அமெரிக்கக் கத்தோலிக்கக் குடும்பத்தின் வாழ்முறை, நம்பிக்கைகள். உலகம் பற்றிய பார்வைகள், அதன் முரண்கள் அமெரிக்க அதிகார அரசியலுக்காகப் பலியிடப்படும் இளைஞர்கள், அதற்கு அவர்களை உந்தித்தள்ளும் ஊடகங்கள் என்று எல்லாவற்றையும் ஒரு சேரக் கொணர்ந்து விடுகிறார் ஒலிவர் ஸ்ரோன்.


இது இலங்கையில் யுத்தம் தொடங்கியது முதல் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் சம்பவங்களை எம் கண் முன் கொண்டு வருகிறது.

மறுநாள் வீட்டிலிருந்து புறப்பட்டு மெக்ஸிக்கோ செல்கிறான். மெக்ஸிக்கோ விடுதிகள் பெருமளவுக்கு அமெரிக்க இராணுவத்தனரால் தான் நிரம்பியிருக்கின்றன. அங்குள்ள விபசார விடுதிகள் இந்த இராணுவத்தினருடைய ஒரே உலகம். இது கிட்டத்தட்ட இலங்கையின் அநுராதபுரத்தை ஞாபகப்படுத்துகிறது. மெக்ஸிக்கோ விடுதியும் விபச்சாரிகளும் அங்கு சந்திக்கும் நபர்களுமாக அது வேறொரு உலகமாக இருக்கிறது. ஆனால் அங்கு அவன் சந்திக்கும் இவனைப் போன்ற கால்களை இழந்த இன்னொரு இராணுவ வீரனுடைய நட்பு அவனுடனான உரையாடல், அவர்கள் இதுகாலவரை யுத்தம் என்று நம்பிய எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கி விடுகிறது. தங்களை அந்நிலைமைக்கு ஆளாக்கிய பேராசைக்கார யுத்தத்திலிருந்து, அமெரிக்கா, அமெரிக்க ஜனாதிபதி என்று எல்லோரும் அவர்களின் வசவுக்கு ஆளாகிறார்கள். மெக்ஸிக்கோ அவனது வாழ்க்கையில் திருப்பு முனையாகிறது.

யுத்த எதிர்ப்பு இயக்கங்களில் ஈடுபட்டு வரும் தனது முன்னைய பெண் நண்பியைச் சந்திக்கிறான். அவளுடன் இணைந்து அதில் பங்கேற்கும் போது அமெரிக்கப்படையினரால் தாக்குதலுக்குள்ளாகிறான். அது இன்னும் அவனை அதிர்ச்சி அடைய வைக்கிறது. யுத்தம் தொடர்பான உண்மைகள் மூடி மறைக்கப்பட்டு பேச விடப்படாது மௌனமாக்கப்படுவதை அவன் உணர்ந்து கொள்கிறான். பதிலாக முழுமையாக அவன் அதில் ஈடுபட ஆரம்பிக்கிறான்.

‘இந்தப் போர் தவறானது. 13ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள அப்பாவி மக்களுக்கு எதிராகப் போரிட நாங்கள் அனுப்பப்பட்டோம். எதிர்த்தலுக்கான பெருமைப்படத்தக்க வரலாறு ஒன்று எங்களுக்கிருக்கிறது. எங்களுடைய சுதந்திரத்திற்காக நாங்கள் நீண்ட மிக நீண்ட போராட்டம் நடாத்தியிருக்கிறோம். ஆனால் எங்களுடைய அரச தலைமை எங்களைத் தவறாக வழிநடாத்தியுள்ளது.

அமெரிக்காவை நேசிக்காத எவரும் யுத்தத்திற்கு ஆதரவாகப் பேசமுடியும். ஆனால் நான் அமெரிக்காவை நேசிக்கிறேன். ஆனால் இந்த அரசாங்கமோ ஊழல் செய்பவர்களையும் திருடர்களையும் கொள்ளைக்காரர்களையும் பாலியல் வன்புணர்வாளர்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் இப்போது உண்மையைச் சொல்லப் போகிறோம். நாங்கள் எங்களுடைய சகோதரர்களைக் கொல்கிறோம். நாங்கள் பேசுவது தான் உண்மை என்பதால் அவர்கள் எங்களைப் பேச விடுகிறார்களில்லை. ஆனால் நாங்கள் பேசுவோம்’ என்கிறான்.

போருக்கெதிரான அவது போர் இன்று வரை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

ஹொவிக் களத்தில் காயமடைந்த போது அவனை உடனடியாகத் தூக்கிச் சென்று காப்பாற்றுவது ஒரு கறுப்பின இளைஞன்.

வியட்னாமில் நடைபெறுவது ஒரு புரட்சி என்றும் அமெரிக்கா அதில் தலையிட்டது தவறு என்றும் முதன்முதலில் ஹொவிக்குக்குச் சொல்வது ஒரு கறுப்பின இளைஞன் தான். இது ஹொவிக் படுகாயமடைந்து வைத்தியசாலையில் இருக்கும் போது நடைபெறுகிறது.

பின்னர் போருக்கெதிரான ஆர்ப்பாட்டத்தின் போது அமெரிக்கப் படையினர் ஹொவிக்கை தாக்கும் போதும் அத்தாக்குதலிலிருந்து ஹொவிக்கைக் காப்பாற்றி தூக்கிச் செல்வதும் ஒரு கறுப்பின இளைஞன் தான்.

இவ்வாறு அமெரிக்க வரலாற்றில் கறுப்பினத்தவர்களுடைய பாத்திரத்ததை மிக அழகாக சித்திரித்து விடுகிறார் ஓலிவர் ஸ்ரோன்.

அதேபோல் போர் வீரர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் அவன் பேச முயன்று பேச முடியாமல் போகும் காட்சியில் அவனது பார்வையில் இரண்டு செவ்விந்தியர்களை கொண்டு வருவதனூடாக அமெரிக்க வரலாறு மற்றும் வீரம் குறித்து எள்ளலான ஒரு பார்வையை அவர் நம்முன் வைக்கிறார்.

திரைப்படம் ஒரு காட்சி ஊடகம். ஓலிவர் ஸ்ரோன் காட்சிக்குறிப்புக்களால் பல விடயங்களைக் குறிப்புணர்த்தி விடுகிறார்.

இத்திரைப்படத்தைப் பார்த்து முடிக்கின்ற போது வன்னியில் போரில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தினரில் எவரோ ஒருவர் முழு உண்மையைப் பேசத் தான் போகிறார். அந்த உண்மைகள் இன்னொரு வரலாற்றை எழுதும் என்ற நம்பிக்கை எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதன் முதற் கட்டம்தான் இலங்கையில் இடம்பெற்றுள்ள போர்க் குற்றங்கள் தொடர்பாக, இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்ட வீடியோ கிளிப்.

000

சர்ச்சைக்குரிய அரசியல் திரைப்படங்களுக்காகப் போற்றப்படும் ஒலிவர் ஸ்ரோன் அமெரிக்காவின் ஹொலிவூட் திரைப்படத்துறையில் ஒரு கிளர்ச்சிக்காரராக இருந்து வருகிறார். சமகாலப் பிரச்சினைகளை எவ்வித சமரசங்களுமின்றி பிரதான மையநீரோட்ட அரசியலுக்கு எதிராக கலாநேர்த்தியுடன் திரைப்படங்களில் கொண்டு வருபவர்களில் ஒலிவர் ஸ்ரோனுக்கு மிக முக்கிய பங்குண்டு.

1971இல் Last Year in VietNam என்ற வியட்னாம் போர் பற்றிய குறுந்திரைப்படத்துடன் தனது திரைப்பட வாழ்வை ஆரம்பித்த ஒலிவர் ஸ்ரோன் 20க்கு மேற்பட்ட படங்களை நெறியாள்கை செய்துள்ளார்.

வியட்னாம் யுத்தத்தில் நேரடியாக பங்கு பற்றிய அனுபவம் அவரை யுத்த எதிர்ப்புத் திரைப்படங்களை எடுக்க உந்தித் தள்ளியிருக்கிறது. அவருடைய பிளட்டுன் (Platoon - 1986), போன் ஒன்த போர்த் ஒவ் ஜுலை (Born on the Fourth of July - 1989). ஹெவன் அன்ட் ஏர்த் (Heaven & Earth) ஆகிய திரைப்படங்கள் வியட்னாமுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட யுத்தத்தை எதிர்த்த திரைப்படங்களாக அமைந்தன.

இது தவிர கென்னடியின் படுகொலையை மையமாக வைத்து ஜே.எப்.கே. (JFK - 1991) மற்றும் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த நிக்சன் குறித்த நிக்சன் (Nixon - 1995) என்ற திரைப்படம் மற்றும் உலக வர்த்தக மைய தாக்குதலை மையமாக வைத்து வேல்ட் ரேட் சென்ரர் (World Trade Center - 2006) போன்ற பல சர்ச்சைக்குரிய திரைப்படங்களை நெறியாள்கை செய்துள்ளார்.

அலெக்ஸாண்டர் (Alexander - 2004) என்கிற திரைப்படத்தை நெறியாள்கை செய்ததனூடக அவர் வரலாற்றுத் திரைப்படங்களிலும் தனக்கான முத்திரையைப் பதித்துள்ளார்.

Platoon மற்றும் Born on the Fourth of July திரைப்படங்களுக்கான நெறியாள்கைக்காக அவர் ஒஸ்கார் விருதுகைளைப் பெற்றிருந்தார். Midnight Express க்காக சிறந்த திரைக்கதைக்கான ஒஸ்கார் விருதினையும் பெற்றுள்ளார்.

2003இல் கியூபாவுக்கு விஜயம் செய்த ஒலிவர் ஸ்ரோன் பிடல் காஸ்ரோவை மூன்று நாட்கள் நேர்கண்டு Comandante என்ற விவரணப்படம் ஒன்றைத் தயாரித்துள்ளார். அதன் பின்னர் மீளவும் ஒருதடவை கியூபாவுக்கு விஜயம் செய்த அவர் லுக்கிங் ஃபோ பிடல் (Looking for Fidel) என்ற விவரணப்படத்தைத் தயாரித்துள்ளார்.No comments: