Tuesday, August 3, 2010

கூடைக் குண்டுகளை வாங்கிக் கொண்டு, விமானக் குண்டுகளைத் தாருங்கள். The Battle of Algiers.





பயங்கரவாதம் என்ற சொல் முழு உலகின் அணி சேர்க்கையையும் இன்று மாற்றி வருகிறது. பனிப் போருக்கு முன்னர் இரண்டாகப் பிளவுபட்டிருந்த உலகங்கள் இன்று பயங்கரவாத்திற்கெதிராக என்ற அடிப்படையில் ஓரணியில் இணைந்து கொள்கின்றன. இதில் கொம்யூனிச நாடுகளாக அறியப்பட்ட நாடுகளும் விதிவிலக்கல்ல.

இந்த நிகழ்ச்சிகள், எது பயங்கரவாதம்? பயங்கரவாதத்தை உருவாக்கும் ஊக்குவிக்கும் காரணிகள் எவை? யார் பயங்கரவாதிகள்? என்ற கேள்வியை நம்முள் மீள எழுப்பி விடுகின்றது. இந்தக் கேள்வியை நல்ல படைப்பாளிகளும் கலைஞர்களும் எப்போதும் எழுப்பிக் கொண்டே இருப்பார்கள்.

பற்றில் ஒவ் அல்ஜீயர்ஸ் என்ற திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் பிரெஞ் இராணுவத்திடம் பிடிபட்ட அல்ஜீரிய விடுதலைப் போராளியிடம் செய்தியாளர் ஒருவர் கேட்கிறார், ''பெண்கள் கூடையில் குண்டுகளைக் காவிச் சென்று வெடிக்க வைப்பது தவறானதும் வெட்கக்கேடானதும் இல்லையா?''

அதற்கு அந்த விடுதலைப் போராளி இப்படிப் பதிலளிக்கிறான்: ‘எந்தவித பாதுகாப்புமற்ற அப்பாவி மக்களின் மேல் நேபாம் குண்டுகளை வீசி அவர்களை அழித்தொழிப்பது மட்டும் சரியானதா? அது சரியானதென்றால் குண்டுவீச்சு விமானங்களையும் குண்டுகளையும் எங்களிடம் தந்துவிட்டு கூடைகளை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று.

தனிநபர்கள் ஏன் பயங்கரவாதத்தைக் கையிலெடுக்கிறார்கள் என்பதையும், எப்.எல்.என். எனும் அல்ஜீரிய தேசிய விடுதலை இயக்கம் (FLN - National Liberation Front) எவ்வாறு ஒரு மக்கள் இயக்கமாக உருமாறுகிறது என்பதையும் பற்றில் ஒவ் அல்ஜீயர்ஸ் என்ற திரைப்படம் வெளிப்படுத்துகிறது.

கொலனித்துவத்திற்கெதிரான போரை இத்திரைப்படத்தைப் போல வேறு ஒரு திரைப்படமும் வெளிப்படுத்தவில்லை என்று கூறலாம்.

1950 மற்றும் 1960கள் உலகம் முழுவதும் கொலனியத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான தேசிய விடுதலைப் போராட்டங்களை நடாத்திக் கொண்டிருந்தன. அத்தகைய போராட்டங்களுள் ஒன்று தான் அல்ஜீரிய விடுதலைப் போராட்டமும். எப்.எல்.என் எனும் தேசிய விடுதலை முன்னணி பிரெஞ்சு காலனியவாதிகளுக்கெதிரான ஆயுதப் போராட்டத்தை நடாத்தி வந்தது.

ஏறத்தாழ அன்று ஒன்பது மில்லியன் மக்களைக் கொண்டிருந்த அல்ஜீரியாவில் பிரெஞ்சு இராணுவத்தினரால் ஒரு மில்லியன் மக்கள் படுகொலை செய்யப்பட்டு நாடு முழுவதும் போராட்டம் வெடித்துக் கிளம்பிய 1954 தொடக்கம் 1957 வரையான காலப்பகுதியை மையமாகக் கொண்டே இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பிரான்ஸ் இராணுவத்திடம் பிடிபட்டு கடும் சித்திரவதைக்கு ஆளாகிய ஒரு அல்ஜீரிய தேசிய விடுதலைப் போராளி, கடும் சித்திரவதை காரணமாக தனது தோழர்கள் தங்கியுள்ள இடத்தைக் காட்டிக் கொடுப்பதற்கு ஒத்துக் கொள்வதுடன் இந்தத் திரைப்படம் ஆரம்பமாகிறது. உண்மையில் அவன் காட்டிக் கொடுக்கும் விருப்பற்றவனாக இருந்தபோதும் கடுமையான சித்திரவதைகள் அவனை காட்டிக் கொடுப்பிற்கு உந்துகின்றன. இதனைத் தொடர்ந்து கஸ்பா நகரத்தின் ஒரு வீட்டிலுள்ள சுவருக்குப் பின்னால் இரகசிய இடமொன்றினுள் ஒளிந்திருக்கும் அல்ஜீரிய தேசிய விடுதலை இயக்கத் தலைவர்களில் ஒருவனான அலி லா பொன்ரேயும் அவனுடைய தோழர்கள் இருவரும், தோழி ஒருத்தியும் ஒளிந்து கொண்டுள்ள இடம் இராணுவத்தினரால் முற்றுகையிடப்படுகிறது.

அலியையும் மற்றவர்களையும் அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்களை தம்மிடம் ஒப்படைத்து விட்டு வெளியே வருமாறும், எப்.எல்.என் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. ஏனைய உறுப்பினர்கள் கொல்லப்பட்டும், சிறைப்பிடிக்கப்பட்டும் உள்ளார்கள். நீதான் கடைசி ஆள் எனவே இப்பொழுது நீ சரணடைந்தால் நீதியான விசாரணைக்கு உட்படுத்தப்படுவாய். உனது மனதை மாற்றிக்கொள் என கேணல் மத்யூ கூறுவதோடு அலியின் கண்களினூடாக கமெரா மிகத் தத்ரூபமாகப் பின்னோக்கிய காட்சிகளுக்கு நகர்கிறது, அதனூடாக அல்ஜீரிய மக்களின் காலனித்துவத்திற்கெதிரான போராட்டத்தை நம் பார்வைக்குக் கொண்டு வருகிறார் அதன் இயக்குனர் ஜிலோ பொன்ரர்கோவோ.

ஒரு சாதாரண திருடனாக இருக்கும் அலி லா பொன்ரே பொலிஸாரிடம் பிடிபட்டு எட்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்படுகிறான். அங்கே ஏற்கெனவே சிறைப்பட்டிருக்கும் அல்ஜீரிய தேசிய விடுதலைப் போராளிகளினது நட்பு அவனுக்குக் கிடைக்கிறது. ஒரு அல்ஜீரியப் பிரஜையாக வெளியிலிருந்து தான் பட்ட அவமானங்களும், வேதனைகளும் அவனை இயக்கத்தின் பால் ஈர்க்கிறது. ஐந்து மாதங்களின் பின் அவன் அல்ஜீரிய விடுதலைப் போராளியாக சிறையிலிருந்து வெளிவருகிறான். அலி தமது நம்பிக்கைக்குரியவனா அல்லது இராணுவத்தினால் வேவு பார்க்க அனுப்பப்பட்டுள்ளவனா என பரிசோதித்துப் பார்க்கும் பொருட்டு ஒரு பிரெஞ்சுப் பொலிஸைச் சுடும்படி அவனுக்கு தோட்டக்கள் நிரப்பப்படாத வெற்றுத் துப்பாக்கி ஒன்று எப்.எல்.என் ஆல் கொடுக்கப்படுகிறது. அதனை அறிந்து கொள்ளாத அலி பொலிஸைச் சுடும் பொழுது தோட்டாக்கள் வெடிக்காததனையிட்டு ஒருகணம் அதிர்ந்து போகிறான். மறுகணம் பொலிஸைத் தாக்கிவிட்டு ஓடுகிறான். இதன் மூலம் அவன் எப்.எல்.என்னின் நம்பிக்கைக்குரியவனாகிறான். விரைவிலேயே விடுதலைப் போராட்டத்தின் முக்கிய போராளியாகி விடுகிறான்.

பிரெஞ்சுக் கொலனியவாதிகளினால் அடக்குமுறைகளுக்கும், அவகௌரவத்திற்கும், அவமானங்களுக்கும் ஆளாகும் அல்ஜீரிய மக்கள் பிரெஞ்சுக் கொலனியவாதிகளுக்கெதிராக தமது வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள். பெருமளவான இளைஞர், யுவதிகள் அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தோடு தம்மை இணைத்துக் கொள்கிறார்கள். இயக்க உறுப்பினர்கள் ஒளிந்து கொள்வதற்காகவும், தமது செயற்பாடுகளை மேற்கொள்வதற்காகவுமான நம்பிக்கைக்குரிய இடங்களாக அல்ஜீரிய மக்களின் வீடுகள் திறந்து கொள்கின்றன.

அல்ஜீரிய மக்களுக்குப் பாடம் புகட்டுவதற்காக அந்த மக்களுடைய குடியிருப்புக்களில் பொலிசுடன் சேர்ந்து கொலனியவாதிகள் இரகசியமாகக் குண்டொன்றை வெடிக்க வைக்கிறார்கள். அதில் பெருமளவான மக்கள் பலியாகிப் போகிறார்கள். பதிலுக்கு பிரெஞ்ச் குடியிருப்பாளர்கள் வாழும் குடியிருப்புப் பகுதியிலுள்ள கபேயிலும், எயர் பிரான்ஸ் அலுவலகத்திலும் அல்ஜீரியப் பெண்போராளிகள் குண்டை வெடிக்க வைக்கிறார்கள்.

இந்நிலையில் கேர்ணல் மத்யூ பிலிப் தலைமையிலான பிரெஞ் இராணுவத்தினரை கிளர்ச்சிக்காரர்களை ஒழிக்க பிரான்ஸ் அரசாங்கம் அல்ஜீரியாவிற்கு அனுப்பி வைக்கிறதுது. கேர்ணல் மத்யூ பல போர்களில் வெற்றிகளைக் குவித்த மிகச் சிறந்த இராணுவத்தளபதி.

அல்ஜீரியாவில் இருந்த பிரான்ஸ் இராணுவ அதிகாரியான ஜெனரல் மாசுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கேர்ணல் மத்யூ பாத்திரத்தில் ஜீன் மார்ட்டின் என்ற நடிகர் நடித்துள்ளார். இவர் அடிப்படையில் ஒரு நாடக நடிகர். அல்ஜீரியா மீதான பிரான்ஸின் போரை எதிர்த்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கையொப்பமிட்டதன் காரணமாக பிரான்ஸ் அரசால் எச்சரிக்கப்பட்டு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தார்.

உண்மையில் இந்தப் படத்தில் அலி பாத்திரம் ஒரு நெருப்பென்றால், மத்யூ ஒரு உறைந்த பனி என்று சொல்லலாம்.

அல்ஜீரிய விடுதலைப் போராட்ட வீரர்களை எவ்வாறு அழித்தொழிப்பதென்று இராணுவக் குழுவினருக்கு கற்பிக்கும் போதும், அல்ஜீரிய விடுதலை இயக்க உறுப்பினர்களைக் கைது செய்த பின்னர் நடாத்தப்படும் பத்திரிகையாளர் சந்திப்பின் போதும் கேர்ணல் மத்யூவாக நடித்திருக்கும் ஜீன் மார்ட்டின் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு, காலனித்துவத்தின் வழிப்பறிக் கொள்ளை எவ்வாறிருக்குமென பொன்ரர்கோவோ வெளிப்படுத்த நினைத்தாரோ அதனை சிறிதும் பிசகின்றி தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளது. அதிகாரத்திலிருக்கும் பகட்டுத்தனமான மனிதர்களின் உள்ளே உறைந்திருக்கும் அருவருக்கத்தக்க உண்மைகளையும், அவர்களுடைய சித்திரவதைகள் போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளையும் இத்திரைப்படத்தில் இயக்குனர் வெளிக் கொணர்ந்துள்ளார்.


மத்யூவின் கெரில்லாக்களுக்கெதிரான நடவடிக்கைகள் புதியனவாக இருக்கின்றன. அவன் கூறுகிறான் ‘அல்ஜீரியாவில் 9 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் எல்லோரும் எமது எதிரிகளல்லவென்பது எமக்குத் தெரியும். ஆனால் ஒரு சிறு தொகையினர் அச்சம் தருபவர்களாகவும், வன்முறைகளைக் கையாள்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்று.’

அவர்களை எப்படிக் கண்டு பிடிப்பது என்பதைப் பற்றி இராணுவத்தினருக்கு கேர்ணல் மத்யூவினால் வகுப்பெடுக்கப்படுகிறது. கெரில்லாக்கள் எவ்வாறு செயற்படுவார்கள் அவர்களுக்கு யார் யாருடன் தொடர்பிருக்கும் என்பது பற்றிய முழுமையான அவர்களின் செயற்பாடு பற்றி இராணுவத்தினருக்குத் தெளிவுபடுத்தப்படும் அதேவேளை கெரில்லாக்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பமாகின்றன. இதற்கு Operation Champagne’ என்று பெயரும் இடப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் மூலம் அல்ஜீரிய தேசிய விடுதலைப் போராட்டத்தை இராணுவம் ஒடுக்கத் தொடங்குகிறது. தலைவர்களிற் சிலரும், உறுப்பினர்களும் இராணுவத்திடம் பிடிபடுகின்றனர். சிலர் கடும் சித்திரவதைகளின் பின் கொல்லப்பட்டனர், சிலர் சித்திரவதையின் கொடூரம் தாங்காமல் மற்றவர்களைக் காட்டிக் கொடுத்தனர். இவ்வாறு காட்டிக் கொடுப்பவர்களால் மற்றைய தலைவர்களின் மறைவிடங்கள் சுற்றிவளைக்கப்பட்டு அவர்களும் கைது செய்யப்பட்டனர். அல்லது கொல்லப்பட்டனர்.

கெரில்லா இயக்கத்தின் அமைப்பையும் தன்மையையும் பண்பையும் கண்டறிந்து பதில் நடவடிக்கைக்கு திட்டமிடுகிறான் கேர்ணல் மத்தியூ

இறுதியாக அலியின் மறைவிடம் காட்டிக் கொடுக்கப்படுகிறது. வீடொன்றின் சுவற்றின் பின்னால் உள்ள இரகசிய இடம் ஒன்றில் மறைந்திருக்கும் இவர்களை இராணுவம் சுற்றி வளைக்கிறது. படத்தின் ஆரம்பக் காட்சிக்கு மீள வருகிறது. வெளியில் வரும்படி அழைத்தும் அலியும் அவனுடனுள்ள போராளிகளும் வராததனால் மக்கள் குடியிருப்பிலுள்ள அவர்களின் மறைவிடம் மக்களின் கண்ணெதிரேயே குண்டு வைத்துத் தகர்க்கப்படுகிறது. அத்துடன் கெரில்லாப் போராட்டம் முடிவுக்கு வருகிறது. அழித்தொழிக்கப்பட்ட எப்.எல்.என் போராளிகளின் பிணங்களின் மேல் பிரான்ஸ் இராணுவம் வெற்றிவாகை சூடிக் கொள்கிறது.

கெரில்லாக்கள் அழித்தொழிக்கப்பட்டாலும், அவர்கள் போட்ட விதைகள் விளையவாரம்பித்தன. அடுத்த மூன்று வருடங்களில் அது அல்ஜீரியாவில் மக்கள் புரட்சியாக வெடித்தது. யுத்தத்தில் மடிந்து போன வீர, வீராங்கனைகளின் கனவுகள் பலிக்கும் காலமாக அது உருக் கொண்டது. 1960களின் ஆரம்பத்தில் இடம்பெற்ற இந்த மக்கள் புரட்சியில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அல்ஜீரிய மக்கள் அனைவரும் ஆயிரக்கணக்கான கொடிகளுடனும், கோசங்களை எழுப்பியவாறும் தமது சுதந்திரத்திற்காக வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினார்கள். இந்த மக்களது போராட்டத்தைத் தடுக்கவியலாத இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இதன் போது ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டபோதும் இராணுவத்தினரினது அடக்குமுறைகளையும், தடைகளையும் மீறி இவர்கள் போராட்டம் வலுப் பெற்றது.

மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டு நடத்திய இந்தப் போராட்டத்தினால் கொலனியவாதிகள் அதிர்ச்சியடைந்தனர். கெரில்லா இயக்கத்தைத் துடைத்தழித்த அவர்களால் மக்களுடைய விடுதலை வேட்கையை அழித்து விட முடியவில்லை. தொடர்ச்சியாக மூன்று வருட காலமாக நடைபெற்ற இந்த மக்கள் போராட்டம் 1962ஆம் ஆண்டு ஜுலை மாதம் கிடைக்கப் பெற்ற சுதந்திரத்துடனும், அல்ஜீரிய தேசியத்தின் பிறப்புடனும் முடிவுக்கு வந்தது.

பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கை, ஆயுதக்கலகத்திற்கெதிரான நடவடிக்கை, சித்திரவதையினூடாக உண்மைகளை வெளியிலெடுத்தல் போன்றவற்றினுள் உறைந்திருக்கும் உண்மைகளை வெளிக்கொணரும் இத்திரைப்படம் செப்ரம்பர் 11க்குப் பின்னரான ஜோர்ஜ் டபிள்யூ புஸ்ஸின் பயங்கரவாதத்திற்கெதிரான போர்ப் பிரகடனத்தின் போது, இந்தப் போரில் பணிபுரியும் அமெரிக்கப் படையினருக்காகவென, யுத்த கள வழிகாட்டியாக 2003ஆம் ஆண்டு பென்ரகனில் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. அதுவே ஈராக், ஆப்கானிஸ்தான் மட்டுமல்லாமல் உலகெங்கும் இப்போது என்ன நடைபெறுகின்றது என்பதைப் புரிந்து கொள்ள வைக்கிறது.

ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க அமெரிக்காவுடன் ஐரோப்பிய நாடுகளும் இணைந்து கொண்டன. இலங்கையில் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க அதே மேற்குடன் தென்னாசிய நாடுகள் இணைந்து கொண்டமை ஒரு புறம் என்றால் மறுபுறம் எதிரெதிர் நிலையில் இருந்த ஜனநாயக நாடாகத் தன்னைச் சொல்லிக் கொள்ளும் இந்தியாவும் கம்யூனிஸ நாடாகத் தன்னைச் சொல்லிக் கொள்ளும் சீனாவும், ரஸ்யாவும் கூட அதே அணிசேர்க்கைக்குள் வந்திருந்தன. ஆச்சரியம் அதுவல்ல, அந்தப் பயங்கரவாத ஒழிப்புக்கு அமெரிக்காவால் இன்றுவரை பாதிக்கப்படும் கியூபாவும், அமெரிக்காவின் நேரடி மற்றும் மறைமுக ஆதிக்கத்திலிருந்து ஜனநாயக வழிமுறையூடாக விடுவித்துக் கொண்டு இடதுசாரி நிலைப்பாட்டை நோக்கி நகரும் பொலிவியாவும், ஆஜென்ரீனாவும்கூட ஆதரவளித்திருந்தன என்பது தான்.
அல்ஜீரிய தேசிய விடுதலை இயக்கத்தின் (FLN) கிளர்ச்சித் தலைவர்களில் ஒருவரான சாதி யசீப் பிரான்ஸ் சிறையில் இருந்தவாறே பற்றில் ஒப் அல்ஜீர்ஸ் திரைக்கதைக்கான குறிப்புக்களை எழுதியுள்ளார். சிறையிலிருந்து விடுதலையான யசீப் இதனைப் படமாக்க இத்தாலியின் மிகச் சிறந்த நெறியாளர்களான லுச்சினோ விஸ்கொன்ரி (Luchino Visconti) , ப்ரான்செஸ்கோ ரோசி (Francesco Rosi), ஜிலோ பொன்ரர்கோவோ ஆகிய மூன்று மிகச் சிறந்த திரைப்பட நெறியாளர்களையும் அணுகியிருந்தார். இறுதியில் பொன்ரர்கோவோவே இத்திரைப்படத்தை இயக்குவதென்று முடிவாகியது. இதன் பின் இத்திரைப்படத்திற்கான திரைக்கதையை ஃபிரான்கோ சொலினஸடன் இணைந்து பொன்ரர்கோவோ எழுதியுள்ளார். யசீப் இந்தத் திரைப்படத்தைத் தயாரித்தது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தின் முக்கிய பாத்திரமான எப்.எல்.எம். இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவரான அல் ஹாதி ஜபாராக நடித்துமுள்ளார்.

1919ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்த ஜிலோ பொன்ரர்கோவோ ஒரு யூதராவார். பல்கலைக்கழகத்தில் இரசாயனவியல் மாணவராகப் பயின்று கொண்டிருந்த போது இடதுசாரி கொள்கை கொண்ட பேராசிரியர்களுடனும், மாணவர்களுடனும் இவருக்கு நட்பு ஏற்படுகிறது. பட்டதாரியாகிய பின் இத்தாலியில் யூதர்களுக்கெதிராக வளர்ந்து கொண்டிருந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக இத்தாலியை விட்டு பிரான்ஸ் சென்ற பொன்ரர்கோவோ இத்தாலி பத்திரிகையொன்றின் நிருபராகப் பணியாற்றினார். 1933ஆம் ஆண்டு பிரான்ஸின் திரைப்பட உலகத்தினுள் பிரவேசிக்கும் இவர் ஆரம்பத்தில் சில விவரணப் படங்களைத் தயாரித்தார். இதன் பின்னர் மார்க்ஸியவாதியும், டச்சு விவரணப்பட இயக்குனருமாகிய ஜோரிஸ் ஐவென்ஸிடம் உதவியாளராகச் சேர்ந்து கொண்டார். பொன்ரகோர்வோ தன்னுடைய கொள்கைகளுடன் நெருக்கமானவர்களான பாப்லோ பிக்காஸோ, ஐகர் ஸ்றாவின்ஸ்கி, ஜீன் போல் சார்த்தர் ஆகியோரைச் சந்திக்கும் காலத்தில்தான் அவருடைய அரசியல் எண்ணங்கள் வளர்ச்சி பெற்றன. 1941 இல் இத்தாலிய கொம்யூனிசக் கட்சியில் இணைந்து கொண்டார். இத்தாலிய பாசிஸ எதிர்ப்பியக்கத்திலும் இவர் பணியாற்றினார். 1956 இல் ஹங்கேரி மீதான சோவியத்தின் படையெடுப்பை அடுத்து அவர் கொம்யூனிசக் கட்சியிலிருந்து விலகிய போதும் தான் புரட்சிகரப் பாதையிலிருந்தும், மார்க்ஸிய அர்ப்பணிப்பிலிருந்தும் விலகவில்லையென அறிவித்தார். இரண்டாம் உலக யுத்தத்தின் பின் இத்தாலி செல்லும் இவர் பத்திரிகை நிருபர் பதவியிலிருந்து விலகி முழுநேரமாக திரைப்படத்துறையில் நுழைந்து 20ற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். பெருமளவில் அரசியல் நிகழ்வுகள் சார்ந்த மிக முக்கியமான திரைப்படங்களை இயக்கியுள்ள பொன்ரர்கோவோவின் படங்களில் ஒன்றாக 1966 இல் வெளிவந்த பற்றில் ஒப் அர்ஜீயர்ஸ் விளங்குகின்றது. இத்திரைப்படத்தில் பொன்ரர்கோவோ மிகையதார்த்த வாதத்தையும், நவயதார்த்தவாதத்தையும் இணைக்கிறார்.

இந்தத் திரைப்படத்தை எடுக்கு முன் பிரான்ஸ் ஃபனானை இவர் முழுமையாக வாசித்திருந்தபடியால், இந்தத் திரைப்படத்தில் பிரென்சுச் சிந்தனையாளரான ஃபனானின் கருத்துக்கள் ஆதிக்கம் செலுத்துபவையாக உள்ளதாகவும், பற்றில் ஒப் அர்ஜியர்ஸ் திரைப்படம் விவரணத்தன்மை வாய்ந்த அரசியற்படமென்ற வகையில் ஐசன்டினின் பற்றில்ஸிப் பொட்டம்கின் திரைப்படத்தோடு ஒப்பிடத்தக்கது எனவும் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

வியட்னாமின் வியட்மின், அயர்லாந்தின் ஐ.ஆர்.ஏ, நிக்கரகுவாவின் சன்டினிஸ்டா போன்ற பல தேசிய விடுதலை இயக்கங்களுக்கு இத்திரைப்படம் ஆதர்சமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. விடுதலை இயக்கங்களுக்கு மட்டுமல்லாமல் திரைப்பட இயக்கத்திலும் அரசியல் திரைப்படங்களுக்கு இத்திரைப்படம் ஒரு முன்மாதிரியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குளோபல் தமிழ் செய்திகள்
16.08.2009

No comments: