Tuesday, August 3, 2010

“உயிர்வாழ்வதற்காகப் போராடு… தப்புவதற்காக ஓடு…” City of God
இயக்குனர்: பெர்னாண்டோ மெரெல்லெஸ்


சிறுவர்களை பற்றிய பல படங்களை பல இயக்குனர்கள் பல வகையிலும் இயக்கியுள்ளார்கள். ஆனால் முற்றுமுழுதான வன்முறைகளுடன் வாழும் ஒரு சிறுவர் உலகத்தை, இயல்புகளைத் தொலைத்த அவர்களுடைய வாழ்க்கையை, தொலைந்து போன அவர்களின் இருப்புகளை, மறந்து விட்ட புன்னகைகளை சற்றும் சிதைவுறாமல் எமக்குத் தந்திருக்கிறார் பிரேசிலின் திரைப்பட இயக்குனர் பெர்னாண்டோ மெரெல்லெஸ் தனது City of God திரைப்படத்தினூடாக.

போதைவஸ்து விற்பனையும், ஆயுதக் கடத்தல்களும், கொலை, கொள்ளை என்பவையும் மலிந்த இடமாகக் காணப்படும் பிரேசிலின் தலைநகரான றியோ டி ஜெனிரோவின் சேரிப்புற விளிம்புநிலைச் சிறுவர்களின் வன்முறைகளினால் கட்டப்பட்டிருக்கும் உலகை எம்மை அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் படைத்திருக்கிறார் நெறியாளர்.

இங்கே வன்முறை என்பது சர்வசாதாரணம். மனிதம் என்பதே முற்றாக அழிக்கப்பட்டு, பிஞ்சுச் சிறார்கள் முதல் இளைஞர்கள் வரை கொலை என்பது ஒரு விளையாட்டுப் போல நிகழ்த்தப்படுகிறது. “உயிர்வாழ்வதற்காகப் போராடு… தப்புவதற்காக ஓடு…” என்பதே அன்றைய றியோ டி ஜெனிரோவின் இளைஞர்களின் தாரக மந்திரமாயிருந்தது.

அவர்களுடைய கையில் புத்தகப் பையில்லை. கிறிக்கெட் மட்டை இல்லை. ஆனால் ஒவ்வொரு சிறுவனின் இடுப்பிலும் துப்பாக்கி இருக்கிறது. அவர்கள் தமது எதிரி என்று கருதுபவரை அவர்களுக்குப் பிடிக்காதவர்களை எந்நேரமும் சுட்டுத் தள்ளலாம். வன்முறை அவர்களுக்குக் கிளர்ச்சி தருகிறது. தண்டனை குறித்து அவர்கள் அஞ்சுவதே இல்லை.

கத்திகள் தீட்டப்படும் ஒலி, கேட்டவுடன் ஆடவைக்கும் துள்ளல் இசை, இறைச்சிக்கு அறுக்கப்படுவதற்காக கோழிகள். அறுக்கப்பட்ட கோழிகள், அதன் பாகங்கள், கழுத்து மயிர் சிரைக்கப்பட்டு சதக்கென அறுக்கப்படும் கோழி, உயிருக்குப் பயந்து ஓடுவது போல கட்டப்பட்டிருந்த கட்டையவிழ்த்து ஓட்டமெடுக்கும் ஒரு கோழி, அதனைத் துரத்தும் சிறுவர்கள். அவர்களுடைய கையில் கல்லோ பொல்லோ இல்லை, இருப்பது துப்பாக்கி. துப்பாக்கிகள் கொண்ட சிறுவர்கள், அந்தச் சேரியின் சந்து பொந்துகளிலெல்லாம் கோழியைத் துரத்தும் சிறுவர் மற்றும் இளைஞர் குழாம் என வெட்டி ஒட்டப்பட்ட அண்மைக் காட்சிகளுடனும், படுவேகத்துடனும் படம் ஆரம்பமாகிறது. அந்த வேகம் படம் முடியும் வரை குறையவேயில்லை. படம் வன்முறைகளின் களம்.

1960களின் பிற்பகுதியிலிருந்து 1980வரையிலான காலப்பகுதியைப் பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படம் பிரேசிலின் தலைநகரான றியோ டி ஜெனிரோவின் சேரியைச் சேர்ந்த றொக்கற் (அலெக்ஸான்டர் றொட்றிக்) என்றழைக்கப்படும் புகைப்பட ஊடகவியலாளனின் மூலம் விறுவிறுப்பான கதைசொல்லலுடன் நகர்த்திச் செல்லப்படுகிறது.

இத்திரைப்படத்தில் நாயகர்கள் என்று யாரையும் சொல்லமுடியாது. எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் போல. எல்லோருடைய கைகளிலும் துப்பாக்கி. கதாநாயகத் தன்மை எதுவுமில்லாமல் வன்முறைக்குள் தம்மை ஆட்படுத்திக் கொள்ளும் சிறுவர்கள், போதை மருந்து வியாபாரத்தில் ஈடுபட்டு 20 வயதிற்குள் இறந்து போகும் இளைஞர்கள் பற்றிய கதையாக இது இருக்கிறது. பெற்றோர்களினால் கவனிக்கப்படாமல், அரசாங்கத்தினால் கைவிடப்பட்ட இந்தச் சிறுவர்கள் கல்வி என்ற ஒன்றையே மறந்து போகிறார்கள். அவர்களின் மூளையில் எப்போதுமே இருப்பது குரூர மனப்பான்மை. இப்படியான மனப்பான்மையுடன் அலையும் அவர்களுக்கு போதை மருந்து விற்பனை செய்பவர்களிடமிருந்து போதை மருந்தும், ஆயுதங்களும் கிடைக்கப் பெறுகின்றன. அவை அவர்களை குற்றங்களைச் செய்யத் தூண்டுகின்றன. போதை மருந்துப் பாவனை, அவற்றினால் ஏற்படும் குழுக்களுக்கிடையிலான வன்முறைகளைக் கூட பொலிஸார் லஞ்சம் வாங்குவதுடன் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்.

ஒவ்வொரு வன்முறைக் குழுவினரையும் அழித்து இன்னொருவன் தலைவனாகிறான். கொலை செய்கிறான், கொள்ளையடிக்கிறான். அவனையும் அவன் சார்ந்தவர்களையும் கொலை செய்து மற்றவன் பெரியவனாகிறான். இப்படியே கதை முடிவுவரை பழிவாங்கல்கள் கயமைத்தனங்களுடன் நகர்ந்து செல்கிறது.
ஒருமுறை இந்த வன்முறைக் குழுவினரால் விபச்சார விடுதி ஒன்று கொள்ளையிடப்படுகிறது. சிறுவனொருவனைக் காவலாக வைத்து விட்டு இளைஞர்கள் கொள்ளையடிக்கப் புறப்படுகின்றனர். பொலிஸார் வந்தால் ஜன்னலில் சுட்டுச் சைகை தரும்படி அவனிடம் சொல்லி விட்டுச் செல்கின்றனர். அங்கு வேலை செய்பவர்கள், கலவியில் ஈடுபட்டுள்ளவர்களைத் துப்பாக்கி முனையில் இருத்தி விட்டு கொள்ளையடித்துச் செல்லும் இவர்களைப் பொலிஸ் துரத்துகிறது. அப்போது அங்கு காவலுக்கு விடப்பட்ட அந்தச் சிறுவன் விபச்சார விடுதியினுள் நுழைகிறான். அங்கு உள்ள பத்துப் பதினைந்து பேரை காரணம் எதுவுமில்லாமலே சுட்டுத் தள்ளுகிறான். சுட்டு விட்டு அவன் சிரிக்கும் சிரிப்பு இருக்கிறதே அந்தக் குரூரச் சிரிப்பு. நமது முகத்திலெல்லாம் அறைகிற ஒரு சிரிப்பு.

பின்னர் அவன் தனது கூட்டாளிகளையும் கொலை செய்துவிட்டு ஒரு குழுவின் தலைவனும் ஆகிறான். படத்தின் முடிவில் இவனைக் கொலை செய்யும் ஒரு சிறுவர் குழாம் அதிகாரத்தைத் தமது கையில் எடுத்துச் செல்கிறது.

இன்னொரு காட்சியில் ஒரு சிறுவனைப் பார்த்து உனக்கு கையில் சுடவா அல்லது காலில் சுடவா என்று கேட்கிறான் மற்றவன். இவ்வாறு கேட்டுவிட்டு காலில் சுட்டுவிட்டுச் செல்கிறான். அதேபோல் ஒருவனின் கையில் துப்பாக்கியைக் கொடுத்து மற்றைய இருவரில் எவராவது ஒருவரைச் சுடும்படி நிர்ப்பந்திக்கின்றனர்.

இப்படி பிரேசிலின் சேரிப்புறச் சிறுவர்களின் வன்முறை நிறைந்த வாழ்க்கையை நம்பகத் தன்மையுடன் அதன் இயல்புகளோடு வித்தியாசமான முறையில் பதிவித்ததில் இயக்குனர் பெர்னாண்டோ மெரெல்லெஸ் முக்கியமானவராக் கொள்ளப்படுகிறார்.

இயக்குனர் பெர்னாண்டோ மெரெல்லெஸ்க்கு முதுகெலும்பு போலக் கைகொடுத்தது இப்படத்தின் மூலக்கதைக்கு காரணமான இதேபெயரிலான நாவல். அது எழுதப்பட்டது 1997இல். போலோ லின்ஸ் என்பவர் அதனை எழுதியிருந்தார். 30 வருடங்களாக அங்கேயே வாழ்ந்து அந்த விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் அதனை எழுதினார். 600 பக்கங்களைக் கொண்டது அது. அதில் 250 பாத்திரங்கள். நாவல் ஒரு அஞ்சல் ஓட்டம் போன்ற வடிவில் எழுதப்பட்டிருந்தது. இருபது பக்கங்களுக்கு வளர்ந்து செல்லும் ஒரு பாத்திரம். பின்னர் அதிலிருந்து தாவி அடுத்த இருபது பக்கங்களுக்கு இன்னொரு பாத்திரம் எனத் தொடரும்.

இந்நாவலைப் படமாக்க விரும்பிய இயக்குனர் எட்டு மாதத்திற்கு மேலாக கள ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருக்கிறார். அந்தச் சேரிப் புறத்தில் வாழ்ந்த இரண்டாயிரம் சிறுவர் மற்றும் இளைஞர்களிடையே இருந்து படத்திற்காக 200 பேரைத் தெரிவு செய்து பயிற்சிப் பட்டறையூடாகவே படத்தை உருவாக்க ஆரம்பித்தார்.

ஓப்பனைகளற்ற இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள். றியோ டி ஜெனிரோவின் சேரிப்புறச் சந்துகள். சேரிப்புறத்திற்கே உரித்தான அழுக்கடைந்த சிறு கடைகள், விபச்சாரவிடுதிகள் என திரைப்படம் நிஜமானவற்றையே காட்சிகளாக்கி நம்முன் வைக்கிறது.

உண்மையில் இந்த வன்முறையின் பின்னால் திரைப்படம் உருவாக்கும் அரசியல் மிக முக்கியமானது. ஒரு காட்சியில் தந்தை மீன்பிடிக்கச் செல்ல மகன் பிடித்த மீன்களை விற்பனை செய்து வருகிறான். மேலும் மேலும் வறுமை அவர்களைத் துரத்துகிறது. அதிலிருந்து தப்ப அவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் தான் போதை மருந்து வியாபாரமும் அதற்கேயுரித்தான வன்முறை உலகும்.

அமெரிக்க ஜனாதிபதி கென்னடி நிர்வாகத்தில் இந்த லத்தின் அமெரிக்க நாடுகளின் பொருளாதாரத்தை மீள் கட்டமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நாடுகளின் பொருளாதாரத்தை தங்கி வாழும் பொருளாதாரமாக்க அமெரிக்க கோப்பிரேட் நிறுவனங்களுடாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவே இந்த வன்முறை உலகம். அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்ட பிரேசிலிய அரசியல்வாதிகளின் போதைப் பொருள் விற்பனைக்கும், ஆயுதக்கடத்தல் விற்பனைக்கும் பலியாகிப் போனவர்கள் இந்த அப்பாவிச் சிறுவர்கள்தான். அரசியல்வாதிகளின் இவ்விதமான பிழைப்புவாதச் செயல்கள் இந்தச் சிறுவர்களை மீள முடியாத அதல பாதாளத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.

சிற்றி ஒப் கோட் நாவலை எழுதிய போலோ லின்ஸ் ஒரு மானிடவியலாளர். இந்த நாவலை எழுத அவருக்கு எட்டு வருடங்கள் தேவைப்பட்டிருந்தது.

''இதனைத் திரைப்படமாக்குமாறு கூறி என்னுடைய நண்பரொவர் இந்த நாவலை எனக்குக் கொண்டு வந்து தந்தார். நான் அதில் முதலில் ஆர்வம் காட்டவில்லை. எனினும் பின்னர் அதனை வாசிக்க ஆரம்பித்ததும் ஆச்சரியமாக இருந்தது. நானும் பிரேசிலில்தான் வாழ்கிறேன். ஆனாலும் நாவலில் சொல்லப்பட்டவற்றை நான் அறிந்திருக்கவில்லை. ஆங்காங்கே பத்திரிகைச் செய்திகளாக ஒரு நடுத்தர வர்க்கப் பார்வையில் சில விடயங்கள் வெளிவந்திருந்தன. ஆனால் இந்தப் புத்தகமோ அதன் மறுபக்கத்தில் இருந்து எழுதப்பட்டிருந்தது. ஏழ்மையும், வறுமையும் குடிகொண்டிருந்த பிரேசில் மக்களின் பக்கத்திலிருந்து இந்த நாவல் எழுதப்பட்டிருந்தது. அக்கணமே நான் இதனைப் படமாக்க வேண்டுமென நினைத்தேன்''.

''நான் இந்தத் திரைப்படத்தைக் கொண்டு வெவ்வேறு நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாவிற்குச் சென்ற போதெல்லாம் அங்குள்ள ஊடகவியலாளர்கள் என்னை ஒரு கேள்வி கேட்கத் தவறுவதில்லை. எப்படி உங்கள் சமூகம் இவ்வாறு நடைபெற அனுமதித்துள்ளது? ஏன் இந்தப் பிரச்சினை பற்றி உங்கள் சமூகம் அக்கறை கொள்ளவில்லை? இந்தக் கேள்விக்கு என்னுடைய பதில் எப்போதுமே ஒரே விதமானதாகவே இருக்கும். நான் பிரேசிலின் நடுத்தரவர்க்கச் சமூகத்தில் வாழ்ந்து வருகிறேன். ஒடுக்கப்பட்ட வர்க்கத்தில் அல்ல. அந்தப் பகுதியில் என்ன நடைபெறுகிறது என்பதைப் பற்றி அது எங்களைப் பாதிக்காதவரை எங்களுக்கு எந்தக் கவலையும் இருந்ததில்லை. இந்த நிலைமைகள் அதன் எல்லைவரை செல்ல நாங்கள் அனுமதித்திருக்கிறோம். ஏனெனில் நாங்கள் இவற்றை எமது பிரச்சினைகளாகப் பார்ப்பதில்லை. அது அமெரிக்காவாக இருந்தாலென்ன, இலத்தீன் அமெரிக்காவாக இருந்தாலென்ன, ஆபிரிக்காவாக இருந்தாலென்ன இதே நிலைமைதான் எல்லா இடங்களிலும் நிலவுகிறது. ஏராளமான மக்கள் உணவின்றி வறுமையில் வாழ்கிறார்கள். ஆனால் நாங்கள் ஒவ்வொருவரும் நினைக்கிறோம் இது எங்களுடைய பிரச்சினையில்லையென்று’’ என தனது நேர்காணல் ஒன்றின் போது கூறுகிறார் இயக்குனர் பெர்னாண்டோ மெரெல்லெஸ்.

ஆக, பிரேசிலின் சேரிப்புறச் சிறுவர்களின் வன்முறை நிறைந்த வாழ்க்கையை மட்டுமல்லாமல் நான், எனது எனும் மேல்தர வர்க்க, நடுத்தர வர்க்கத்தினரின் சுயநலத்தன்மைகளைக் கேள்வியெழுப்பும் வகையிலும், இவர்களினால் கண்டு கொள்ளாமல் விடப்பட்டுள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் உலகத்தின் மூலை முடுக்குளிலுள்ள அனைத்து சிறார்களின் எதிர்காலம் பற்றிய கேள்வியையும், அதிர்வினையும் சிற்றி ஒப் கோட் திரைப்படம் ஏற்படுத்திச் செல்கிறது.

குளோபல் தமிழ் செய்திகள்
13.07.2009

No comments: