ரக்மினாமிலானி
அவன் செய்த உதவிக்கு பிரதியுபகாரமாக இவளது விருப்பத்திற்கு மாறாக அவளை மணம் முடித்துக் கொடுக்க முடிவெடுக்கிறார் தந்தை. ஆனாலும் கல்யாணத்திற்கு முன்பாக தன்னுடைய எதிர்பார்ப்புக்களை அவனிடம் அவள் சொல்லி தனது மறுப்பைத் தெரிவிக்கிறாள். அவனோ இவளைச் சமாதானப்படுத்தி இவள் கல்யாணத்தின் பின்னும் தொடர்ந்து படிப்பதற்கு தான் சம்மதம் என்றும் அதனை வேண்டுமானால் எழுத்தில் தருவதாகவும் சொல்கிறான்.
அவளுக்கு விவாகரத்தும் கிடைக்கவில்லை. சமூகம் என்ன சொல்லுமோ என்று பயந்து பெற்றோரும் அவளை ஏற்க மறுக்கின்றனர். அவளது நிலை கணவனுடன் திரும்பவும் செல்லுதல் மட்டுமே. அதன் பின்னர் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையை வைத்துக் கொண்டு தன்னைத்தானே அவள் கேட்கும் கேள்வியும் மிக முக்கியமானது. ஆணாதிக்க குடும்பப் பின்னணிக்குள் சிக்குண்டு தவிக்கும் ஒவ்வொரு பெண்ணும் தன்னைத்தானே கேட்டுக் கொண்டு கழிவிரக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கேள்விகள் அனைத்தையும் ப்ரெஸ்ரியா மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் மிலானி.
"கடவுளே இது என்னுடைய குழந்தையா? எனக்கு என்ன நடந்தது? நான் ஒரு குழந்தையைப் பெறுவதற்குத் இன்னும் தயாராகவில்லையே? என்னுடைய வாழ்க்கை முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. நான் வித்தியாசமாக யோசிக்க வேண்டும். எனக்கு விருப்பங்கள் இருக்கின்றன. என்னிடம் பல திட்டங்கள் இருக்கின்றன. எனக்கு அது நிறைவேறும் என்பதில் நம்பிக்கையில்லை. அதற்குள் அடுத்த குழந்தையும் உருவாகி விட்டது என்று கவலையடையும் காட்சி இன்றைய பெண்களின் அச்சொட்டான பிரதிநிதியாக அவளைக் காட்டி விடுகிறது.
இங்கே ஒரு பெண்ணின் ஆளுமை முற்றாக அழிக்கப்பட்டு, பெண்ணென்றால் பிள்ளை பெறுவதற்கும், சமைப்பதற்கும், கணவனுக்கு பணிவிடை செய்வதற்குமே என்ற ஆண் மேலாதிக்கவாதிகளின் சிந்தனைகள் குறித்து எதிர்வினைகள் எழுப்பப்பட்டுள்ளன.
இறுதியாக 13 வருடங்களின் பின்னர் சிறையிலிருந்து வரும் காதலன் இவளது கணவனைக் கத்தியால் குத்திக் கொன்று விடுகிறான்.
அதன்போது அவள் தனது நண்பியிடம் இப்படிச் சொல்கிறாள். "உண்மையில் அவன் கொல்லப்பட வேண்டும் என நான் நினைக்கவில்லை. நான் அவன் மீது அன்பு செலுத்தியிருக்கிறேன். எப்படியென்றால் ஒரு சிறைக்கைதி சிறைக்காவலர் மீது காதல் கொள்வது போல. நான் அவன் சாகவேண்டும் என்று ஒருபோதும் விரும்பியதில்லை. அதற்காக நான் வருந்துகிறேன். இப்போது இறக்கையில்லாத ஒரு சுதந்திரமான பறவை போல நான் உணர்கிறேன்."
மூன்றாம் உலக நாடுகளில் பெண் அடக்கு முறை என்பது மிகவும் உச்சநிலையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு விடயம். இவ்விடயம் சம்பந்தமாக எவ்வளவு எதிர்க்கருத்துக்கள் இருந்த பொழுதிலும் அவை எவற்றையும் ஒரு பொருட்டாக மதிக்காது பெண்ணியவாதிகளையும், பெண்ணியக் கருத்துக்களையும் கேலிக்குரியதாகவே நமது ஆணாதிக்க சமூகம் எதிர் கொள்கிறது. இதைவிட பெண்ணியம் என்பது மேலைத்தேயத்திற்கு மட்டுமே உரித்தானதான சாயம் கூட பூசப்பட்டுள்ளது.
பெண்களைத் தொடர்ந்தும் அடிமை நிலையில் வைத்துக் கொள்ள விரும்புபவர்களே பெண்ணிலைவாதத்தை மேலைத்தேசத்தினர்க்குச் சொந்தமான ஒரு விடயமாகக் காட்டி உதாசீனப்படுத்த முயன்று வருகிறார்கள். பெண்ணிலைவாதத்தின் முக்கியத்துவத்தையும், ஆணாதிக்கக் கட்டமைப்புக்களிலிருந்தும், சுரண்டலிலிருந்தும், அடக்குமுறையில் இருந்தும் பெண்களை வெளிக் கொண்டு வரவும் இத்திரைப்படம் முயற்சிக்கிறது.
குறிப்பாக பெண் மீதான காதலின் பேரால் நிகழ்த்தப்படும் வன்முறை (காதலன்), கடமையின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறை (தந்தை), உரிமையின் பேரால் நிகழ்த்தப்படும் வன்முறை (கணவன்) என்பவற்றை மிகத் துல்லியமாக அலசுகிறது. அம்பலப்படுத்துகிறது இத்திரைப்படம்.
அது மட்டுமல்லாமல் வன்முறை என்பது வார்த்தைகளினாலும் மேற்கொள்ளப்படலாம். உடற்காயங்களை ஏற்படுத்தும் வன்முறைகள் போல, மனக்காயங்களை ஏற்படுத்தும் வன்முறைகளும் மிகுந்த ஆபத்தானவை. ஒடுக்குமுறைக்கு கருவியாக வார்த்தை வன்முறைகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் எம்முடைய சிந்தைக்குக் கொண்டு வருகிறார் ரக்மினா மிலானி.
ஈரானிய பெண் திரைப்பட நெறியாளரான ரக்மினா மிலானியின் Two Women எனும் திரைப்படத்தினை நிகரி திரைப்பட வட்டம், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஆதரவில் 2006 மார்ச் 14ஆம் திகதி பெண்கள் தினத்தை முன்னிட்டு, கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் திரையிட்டது.
இது நிகரி திரைப்பட வட்டத்தின் இரண்டாவது திரைப்பட மாதமாகும். இத்திரைப்படம் திரையிடப்பட்ட பின்னர் நடந்த கலந்துரையாடலில் அதுவும் ஆண்களிடமிருந்து இந்தப் படத்திற்குக் கிடைத்த ஆதரவு இன்னும் பெண்ணிலைவாதத்திற்கும், அதனை அழகாகத் தொற்ற வைத்த மிலானிக்கும் கிடைத்த வெற்றியே. கலந்துரையாடலில் பங்குபற்றிய ஆண் ஒருவர் கூறினார். இத்திரைப்படம் எனக்குள் பல அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. என்னுடைய அம்மாவுக்கு இது நேர்ந்ததாகவே நான் உணர்கிறேன். உண்மையில் எனக்குச் சொல்ல வார்த்தைகளே வெளிவரவில்லை. என்றார்.
இன்னொருவர் கூறினார், பெண்களை ஆண்கள் கொடுமைப்படுத்துவதை உண்மையில் ஒரு நோயாகக் கொள்ளலாமா? அதனை ஒரு ஆணியல் நோய் என்று சொல்லலாமா என்று, இன்னொரு நண்பர் கூறினார் எனது அம்மாவை பரெஸ்ரியா பாத்திரம் ஞாபகப்படுத்துகிறதென்று. இவ்வாறு பலதரப்பட்ட ஆக்கபூர்வமான அபிப்பிராயங்கள் அங்கே பகிர்ந்து கொள்ளப்பட்டன.
என்னைப் பொறுத்தவரையில் பெண்களிடமிருந்து வரும் கருத்துக்களைவிட ஆண்களின் மூலம் வரும் பெண்ணிலைக் கருத்துக்களே உண்மையான பெண்ணியத்தின் வெற்றியென நான் நினைக்கிறேன்.
துருக்கியத் தேசியவாதிகளின் தலைவரான முஸ்தபா கெமால் கூறுகிறார்: "பெண் ஜீவசக்திமிக்க இயங்காற்றலின் ஊற்றுக்கண். வயல்களை உழுதவர் யார்? அவள் தான். தானியத்தை விதைத்தவர் யார்? அவள் தான். மரம்வெட்டுபவளாகிக் கோடரியைக் கையில் ஏந்தியது யார்?அவள் தான். வீட்டிலே அடுப்பை எரியச் செய்தது யார்? அவள் தான். மழை என்றும், காற்றென்றும் பாராமல் குளிரோ, உஷ்ணமோ என்றும் பாராமல் போர் முனைக்கு ஆயுதங்களைச் சுமந்து சென்றது யார்? அவள் தான். எனவே இந்தத் துணிவுமிக்க தன்னலமற்ற பெண்களைக் கௌரவிப்போம். எம்முடைய எல்லாச் சமூகப் பணிகளிலும் எம்முடைய பங்காளிகளாக ஏற்றுக் கொள்ளவும், அவளுடன் வாழவும், விஞ்ஞான, தார்மீக, சமூக, பொருளாதார முயற்சிகளில் அவளை எமது தோழியாக்கவும் நாம் உறுதியளித்தாக வேண்டும். இதுதான் நாம் செல்ல வேண்டிய பாதையென நான் நம்புகிறேன்."
இந்தச் சிந்தனையை தனது திரைப்படத்தின் ஊடாகத் தூண்டிவிட்டு துணிந்து எழுந்து நிற்கிறார் ரக்மினா மிலானி.
2006
தாயகம் - இலங்கை
No comments:
Post a Comment